2024 மே 09, வியாழக்கிழமை

இலங்கைக்குக் கிடைத்த ‘நிதஹஸ்’

Gopikrishna Kanagalingam   / 2018 மார்ச் 22 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு, இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கிரிக்கெட் தொடரைத் தெரிந்திருக்கலாம். இலங்கையின் 70ஆவது சுதந்திர நிறைவைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அத்தொடரில், இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள் பங்குகொண்டன.

ஒப்பீட்டளவில் பலமான அணிகளான இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இறுதியில், இந்தியாவும் பங்களாதேஷும் தான் தகுதிபெற்றன. அத்தொடரில் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு என்ன காரணம் என்பதெல்லாம், கிரிக்கெட் நிபுணர்கள் ஆராய வேண்டியது. ஆனால், இலங்கையின் அண்மைக்கால நடப்புகளைப் பார்க்கும் போது, அத்தொடர் தான், சிறந்த உதாரணமாகக் காணப்படுகிறது.

ஏனென்றால், 3 நாடுகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டிக்குக் கூட, இலங்கை அணி தகுதிபெறவில்லை. ஆனால் அதையும் தாண்டி, இலங்கையின் சுதந்திரத்தைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அத்தொடருக்கு, சிங்களத்தில் “நிதஹஸ்” கிண்ணம் என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது. சர்வதேசத் தொடராகவும் இருக்கும் நிலையில், அனைவருக்கும் பொதுவான மொழியான ஆங்கிலத்தில், “Independence Trophy” என்று பெயர் வைத்திருக்க முடியும். ஆனால், “நிதஹஸ்” என்று தான் பெயர் வைக்கப்பட்டது.

இதுவொன்றும், சாதாரணமான பெயர் வைப்பதில் உள்ள பிரச்சினை கிடையாது. மாறாக, சிங்கள - பௌத்த அடையாளங்களை, ஒட்டுமொத்த இலங்கையின் அடையாளங்களாக மாற்றும் வழக்கமான செயற்பாட்டின் ஓர் அங்கம் தான் அது. அதைத் தாண்டி, விளம்பரதாரர்களுக்கும் விளங்காத வகையில், சிங்கள மொழிச் சொல்லைக் கொண்டு அத்தொடருக்குப் பெயர் வைக்க வேண்டிய தேவை கிடையாது.

போர்க் காலத்தில் இருக்கலாம், போருக்குப் பின்னரான காலத்திலாக இருக்கலாம், சிறுபான்மையின மக்கள், இலங்கையில் நடத்தப்படும் விதங்களைப் பார்க்கும் போது, இவற்றைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கலாம்.

உதாரணமாக, 2014ஆம் ஆண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தான், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்கை வகித்திருந்தன. 

ஆனால், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரின் வாக்குகளோடு ஆட்சிக்கு வந்த இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கீழ், முஸ்லிம்களுக்கெதிராகக் கடந்தாண்டில் தொடர்ச்சியான வன்முறைகள் புரியப்பட்டன. அவை தொடர்பாகப் போதியளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. பின்னர் இவ்வாண்டில், அம்பாறையிலும் கண்டியிலும், திட்டமிடப்பட்ட வன்முறைகளாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன. 

ஆரம்பத்தில் கணக்கெடுக்காமல் செயற்பட்ட அரச இயந்திரம், பின்னர் ஓரளவுக்குச் சுதாகரித்துச் செயற்பட்டாலும், பல நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன; உயிரொன்று கொல்லப்பட்டது. இதுவரையில் சில கைதுகள் இடம்பெற்றிருந்தாலும், முக்கியஸ்தர்கள் அல்லது திட்டமிட்டவர்கள், இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

இவ்விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், ஒருபக்கமாக இருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்ட விதம், இன்னமும் மோசமானது. அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள், இம்மாதம் 6ஆம் திகதியே கண்டிக்குச் சென்றன; 7ஆம் திகதி, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது; 8ஆம் திகதி, சமூக ஊடக இணையத்தளங்களுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், வன்முறைகள் தொடர்பில் அவர் வெளிப்படுத்திய மௌனம், மிகுந்த கேள்விகளை எழுப்புகிறது. அதிலும் குறிப்பாக, உலகில் எங்கெல்லாம் ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றாலும், தனது டுவிட்டர் கணக்கினூடாகக் கருத்துத் தெரிவிக்கும் ஜனாதிபதி, கண்டியில் இடம்பெற்றவை வன்முறைகள் என்றோ அல்லது முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டார்கள் என்றோ அல்லது வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவோ, இன்று வரைக்கும் கருத்தெதனையும் அங்கு பதிந்திருக்கவில்லை.

அதிலும் மோசமாக, 7ஆம் திகதி, கண்டி வன்முறைகளின் உச்சநிலை காணப்பட்ட போது, சம்போதி விகாரையின் பீடாதிபதியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் படத்தை, டுவிட்டரில் அவர் பகிர்ந்திருந்தார். 

பின்னர் அதே நாளில் கண்டிக்குச் சென்ற போது, அவர் வெளியிட்ட டுவீட், “காணப்படும் நிலைமை தொடர்பாக சமயத் தலைவர்களுடனும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடுவதற்காக, கண்டிக்கு விஜயம் செய்தேன். இடத்தில், பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தேன்” என்று தான் தெரிவித்தது.

அதில் கவனமாக, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் என்பதைத் தவிர்த்திருந்தமை ஒரு பக்கமாக இருக்க, கண்டியில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவை “வன்முறைகள்” என்பதைக் கூட அவர் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அந்த டுவீட்டின் பின்னர், பல டுவீட்களை அவர் இட்டிருந்தாலும் -- இந்தியப் பிரதமர் மோடியின் “அற்புதமான உணவு விருந்து” தொடர்பான டுவீட்டும் உள்ளடங்குகிறது -- இதுவரை, கண்டி வன்முறைகளுக்கு எதிரான கண்டனத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

வன்முறைகள் தொடர்பாக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கண்டனங்கள், வெறுமனே வெற்று வார்த்தைகள் என்பதை நாமனைவரும் அறிவோம். அவர்களைப் பொறுத்தவரை, வாக்கு வாங்கிக்கான சந்தர்ப்பம் அது. “இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்தினால் வாக்குகள் கூடுமா, குறையுமா?” என்பது தான், வன்முறைகளை எவ்வாறு அணுக வேண்டுமென்பதைத் தீர்மானிக்கின்றன என்பது, பொதுவானதொரு கருத்து.

ஏனென்றால், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள், முஸ்லிம்களால் சிங்கள மக்களின் சொத்துகள் தாக்கப்பட்டு, அவர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்ட ஒரு வன்முறையாக இருந்திருந்தால், இவ்வளவுக்கு மௌனம், ஜனாதிபதியின் தரப்பிலிருந்து வந்திருக்குமா? வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுச் சில நாட்களிலேயே, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திவிட்டு, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு வழங்கப்பட்ட விருந்தின் தன்மை குறித்து, ஜனாதிபதி கருத்துத் தெரிவிப்பாரா? அவ்வாறு நீண்ட வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு விட்டு, நாட்டுக்குத் திரும்பிய மறுநாளே, கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காக, மைதானத்துக்குச் செல்வாரா? பின்னர் சில நாட்களில், பாகிஸ்தானுக்குச் செல்வாரா?

இவை அனைத்துமே இடம்பெற்றிருக்காது என்பது தான் உண்மை. அப்படியாயின், பிரச்சினை எங்கென்பது தெளிவாகப் புலப்படுகிறது என்று அர்த்தம்.

யாழ்ப்பாணத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியதைத் தான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நாட்டில், நாட்டுத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வாறானவர்கள் முன்வந்தால் மாத்திரமே, இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.

இதில், இரா. சம்பந்தன் மீது, தமிழ் மக்களுக்குக் காணப்படும் விமர்சனங்களைத் தாண்டி, பொதுவான இலங்கை அரசியல்வாதியாகப் பார்த்தால், சிறப்பான தலைமைத்துவத்தை, அண்மைய காலங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, முஸ்லிம் அரசியல்வாதிகளை விட, அதிகமான கருத்துச் செறிவுமிக்க கருத்துகளை, அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், இவையெல்லாமே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் புரியும் விடயங்களாகவே இருக்கின்றன.

ஆளும் தரப்பில், இப்படியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு, ஜனாதிபதியை விடப் பொருத்தமான ஒருவர் இருக்கப் போவதில்லை. ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடும் போது, ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதிப் பதவியை வகிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார். அப்படிப் பார்க்கும் போது, அவரது ஆட்சிக்காலத்தில் 2 ஆண்டுகள் கூட இன்னமும் எஞ்சியிருக்கவில்லை. இந்த 2 ஆண்டுகளிலும், வாக்குகளைப் பற்றி எந்தக் கவலையுமின்றி, பணிகளை ஆற்றக்கூடிய வாய்ப்பு, ஜனாதிபதிக்கு இருக்கிறது.

அப்பணிகளை அவர் செய்வாரா என்பது தான், எம்முன்னாலுள்ள கேள்வியாக இருக்கிறது.
இதனால் தான், தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையுள்ள பிரதமரை விட, மாற்றத்துக்குப் பொருத்தமான தலைவராக ஜனாதிபதி இருக்கிறார்.

அதேபோல், தற்போதிருக்கின்ற சூழ்நிலையில், சீர்திருத்தங்களுக்கு அரசாங்கத்துக்குள் இருந்து கிடைக்கின்ற எதிர்ப்புகள் அனைத்தும், ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் கிடைக்கின்றன. எனவே தான், மாபெரும் தலைவராக, தன்னை நிலைநிறுத்தக் கூடிய மிகச்சிறந்த வாய்ப்பு, ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், இலங்கைக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என, பொதுவாக அரசியல் வட்டாரங்களில் சிலாகித்துப் பேசப்பட்டது. அது உண்மையானால், அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய தேவை, அரசியல் தலைமைகளுக்கு இருக்கிறது. 

இல்லாவிட்டால், 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு (அப்போதைய சிலோனுக்கு) கிடைத்தது, வெறுமனே “நிதஹஸ்” மாத்திரம் தான் என்ற முடிவுக்கு வர வேண்டிய தேவை, சிறுபான்மைத் தரப்புகளுக்கு மீண்டும் ஏற்படக்கூடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X