2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உயிர்ப்படையும் கோரிக்கை

மொஹமட் பாதுஷா   / 2019 மார்ச் 01 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக முஸ்லிம்களின் அபிலாஷைகள், விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் விதத்தில், முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், ஒரு குறிப்பிட்ட பருவகாலத்துக்கானவை; அல்லது, தேர்தல் மேடைகளுக்கான கோஷங்களாக இருந்து, பின்னர் அடங்கி விடுகின்ற தன்மையைக் காண முடிகின்றது.   

ஏதாவதோர் அபிலாஷையை வென்றெடுப்பதற்காக, ஒருகாலப்பகுதியில் முழுவீச்சில், வீராப்புடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் முன்னெடுப்புகளும் பிறகொருபொழுதில், மீள உயிர்ப்படைவதையும் அவதானிக்க முடிகின்றது.   

தமிழ் மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக, சிறியதும் பெரியதுமான பல போராட்டங்களை இன்னும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

 ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் வீதிக்கு வந்து விட்டால், அது நிறைவேறாமல், அவர்கள் வீட்டுக்கு திரும்புவது மிக அரிதாகும். ஒட்டுமொத்தமான மக்கள் சக்தியையும் அரசியல் பலத்தையும் பயன்படுத்தி, அதை நிறைவேற்றும் வரை, அப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் வரை, ஓயமாட்டார்கள்.   

அதேபோன்று, தமிழ்த் தேசியத்தால் நகர்த்தப்படும் இனப்பிரச்சினைக்கான நகர்வுகள், மெதுவாகவேனும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ஆனால், முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்படும் சிவில் போராட்டங்களோ அரசியல்சார் எழுச்சிகளோ, இவ்விதமாக அன்றி, முன்சொன்ன விதத்திலேயே அமைகின்றன.   

அதாவது, பெரும் ஆர்ப்பரிப்புகள், பிரசாரங்கள், வீராப்புப் பேச்சுகள், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பங்களிப்புகளோடு, பொதுத் தளத்தில் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகளைக் கூட, முழுமூச்சாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத, கையறுநிலையிலேயே முஸ்லிம் சமூகம் உள்ளது.   

ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்தும்கூட, முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழாமும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு, முன்னுரிமை அளிக்காமல் செயற்படுவதால் அல்லது, அதற்கான ஆளுமை இல்லாதிருப்பதால், பெரிய எதிர்பார்ப்புகள் மட்டுமன்றி, சிறிய கோரிக்கைகளும்கூட கடைசியில் ‘சப்பென்று’ ஆகிவிடுகின்ற பல அனுபவங்கள் நமக்குண்டு. பொறுமை, பொறுத்திருத்தல், சாணக்கிய அரசியல், காலம் கனியும் வரை காத்திருத்தல், இன நல்லிணக்கத்தைப் பேணுதல் என்ற தோரணையில், முஸ்லிம் தரப்பின் முன்முயற்சிகள், வேகம் குறைந்து போவதுண்டு.   

ஆனால், முஸ்லிம்களின் பல அபிலாஷைகள் நிறைவேறாமல் போய்க் கொண்டிருக்கின்றமைக்கு, கொள்கைப் பிடிப்பின்மை, ஒரு கோரிக்கைக்காகப் போராட, மற்ற விடயங்களைத் தியாகம் செய்ய முன்வராமை, நிலைப்பாறாத நிலைப்பாட்டுடன் குரல்கொடுக்காமை, எல்லாவற்றுக்கும் மேலாக, ஊர் ஊராகப் பிரித்தாளும் ஆனால், கையாலாகாத முஸ்லிம் அரசியல் ஆகியவையே, உண்மையான முதன்மைக் காரணங்கள் என்பதை, ஏற்றுக் கொள்ள வேண்டும்.   

யுத்த காலப் பகுதியிலும் அதற்கு முன்னரும் பின்னரும், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை, உலகின் கண்களுக்கு முன்வைத்தல், இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கு உரித்தான பங்கை உறுதிசெய்தல், இனவாதத்தைக் கட்டுப்படுத்தல், முஸ்லிம்களின் காணி மீட்பு, மீள்குடியேற்றம், புதிய மாவட்டம் முதற்கொண்டு, ஒலுவில் கடலரிப்புத் தொட்டு, நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் வரையான, எந்தப் பிரச்சினையும் இன்னும் தீர்க்கப்படாமல், பேச்சளவிலேயே இருப்பதற்குக் காரணங்களும் இவைதான்.   

அந்தவகையில், போகின்ற போக்கைப் பார்க்கின்ற போது, சாய்ந்தமருது மக்களின் தனி உள்ளூராட்சி சபைக் கோரிக்கையும் அவ்விதமே வந்து முடியுமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.   

சாய்ந்தமருதில் மக்கள் எழுச்சி நடைபெற்று, அரசாங்கத்தின் உயர்மட்டம் வரை, ஏற்கெனவே பேசப்பட்டுவிட்ட இவ்விவகாரம், இப்போது மீண்டும், ‘எல்லோரும் கலந்து பேசுதல்’ என்ற புள்ளிக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்றே, சொல்ல வேண்டியுள்ளது.   

சாய்ந்தமருது மக்கள், கடந்த பல வருடங்களாகத் தமக்குத் தனியான உள்ளூராட்சி சபை வேண்டுமெனக் கோரி வருகின்றனர். இதற்காக மக்கள், தம்மளவில் முடியுமான அனைத்து முயற்சிகளையும் எடுத்தும் இருக்கின்றனர்.   

ஆனால், கல்முனை முஸ்லிம்கள், ‘தனியாகப் பிரிக்கக் கூடாது’ என்பதற்குக் கூறும், தட்டிக்கழிக்க முடியாத நியாயபூர்வமான காரணங்களும், நாம் மேற்குறிப்பிட்ட முஸ்லிம் செயற்பாட்டுத் தளத்தின் (அவ)இலட்சணமும் இக் கோரிக்கையை நிறைவேற்றுவதில், நடைமுறைச் சிக்கல் சார்ந்த தாமத்தை, உண்டுபண்ணி இருக்கின்றன.   

கடந்த ஆட்சிக்காலத்தில், இதேகோரிக்கையை முன்வைத்து, முதற்கட்டமாகப் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட சாய்ந்தமருது மக்கள் சமூகம், இரண்டாம் கட்டமாக, 2017ஆம் ஆண்டு மே மாதத்தில், தனி உள்ளூராட்சிச் சபையை வலியுறுத்தும் வகையில் அமைந்த, தொடர் மக்கள் எழுச்சியை முன்னெடுத்தனர்.   

பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் எனப் பல நாள்கள், மிகவும் தீவிரமாகப் போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சாய்ந்தமருது பள்ளிவாசலின் வகிபாகமும் அவ்வூர் மக்களின் ஒற்றுமையும் இதன்போது கவனிப்புக்குரிய விடயங்களாக இருந்தன. ஆனால், கடைசியில் எந்த முடிவும் இன்றியே, மக்கள் எழுச்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டியதாயிற்று.  

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடயத்துக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர், பகிரங்கமாக வாக்குறுதியளித்த விடயத்தை நிறைவேற்றிக் கொடுக்க, முஸ்லிம் கட்சிகளால் முடியவில்லை. கல்முனை மக்களின் நியாயங்கள், தமது அரசியல் நலன், தமிழ்த் தரப்பின் அழுத்தம் ஆகியவற்றின் பின்னணியில், அவர்கள் முயலவில்லை என்றானபோது, வெகுஜனப் போராட்டம் முற்றுப் பெற்றது.   

உள்ளூராட்சித் தேர்தலில், இவ்வெழுச்சியுடன் சம்பந்தப்பட்ட அணியினர், சுயேட்சைக் குழுவாகத் தோடம்பழச் சின்னத்தில், சாந்தமருதில் போட்டியிட்டு, கல்முனை மாநகர சபைக்கு ஒன்பது உறுப்பினர்கள் தெரிவாகினர். இது, முஸ்லிம் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது.   

ஆனால், மாநகர சபையில், தோடம்பழத்தால் ஆட்சியமைக்க முடியாத நிலையிலும் கூட, ஏதோவோர் ‘அதிகாரத்தை’ அவர்கள் பெற்றிருக்கின்றனர். எவ்வாறிருப்பினும், அதை மட்டும் வைத்துக் கொண்டு, தனி உள்ளூராட்சி சபையைச் சாத்தியப்படுத்த முடியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.   

இந்நிலையில், ‘இறுதி எழுச்சி’ என்ற பெயரில், மூன்றாவது கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக, சாய்ந்தமருது சமூகம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் காலம் இதுவென்பதையும், இங்கு நினைவுபடுத்த வேண்டும். எனவே, சாய்ந்தமருது மக்களின் தனி உள்ளூராட்சி சபைக் கோரிக்கை என்ற விடயத்தை, மீண்டும் தாமாகவே முன்வைந்து, முஸ்லிம் கட்சிகள் கையிலெடுத்திருக்கின்றன.   

இப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதியான, உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தனவை, இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளன. இதனால், இவ்விடயம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.   

கல்முனையும் சாய்ந்தமருதும் அருகருகான பிரதேசங்களாகும். 1987இல் கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்ட போது, கல்முனை பட்டின சபையுடன், கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமிய சபைகளும் இணைக்கப்பட்டன.   

அப்போது சாய்ந்தமருது மக்களோ, அல்லது இதற்குள் வரும் தமிழ்ப் பிரதேச மக்களோ, பாரிய எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.  இருந்தாலும், பின்னர் தனியான உள்ளூராட்சி சபை வேண்டுமென்ற கோரிக்கைகள் மேலெழத் தொடங்கின. இதற்கிடையில், 2001ஆம் ஆண்டு, மாநகர சபையாக கல்முனை தரமுயர்த்தப்பட்ட பிறகு, நிலைமைகள் இன்னும் மாற்றமடைந்தன.   

ஆனாலும், மாநகர சபைக்குட்பட்ட எல்லா ஊர்களைக் கட்டியாள்வதில் சபையின் செயற்றிறன் குறைவு, வளப்பங்கீட்டில் குறைபாடு, கல்முனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் தாம் இரண்டாந்தரமாகப் பார்க்கப்படுவதாக சாய்ந்தமருது மக்கள் எண்ணுமளவுக்கு நடத்தப்பட்டமை என்பனவே, இவ்வாறான தனிச் சபைக் கோரிக்கை கருக்கட்டக் காரணங்களாகின.    

இந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட நகர்வின் படி, மேயராக நியமிக்கப்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாகிப், சுழற்சி முறையின் அடிப்படையில் பதவியிறக்கப்பட்டு, கல்முனையைச் சேர்ந்த நிசாம் காரியப்பர் மேயராக நியமிக்கப்பட்டார்.  

 இதனால் அதிருப்தியுற்ற சிராஸ், அடுத்தடுத்து ஏனைய கட்சிகளுக்கும் கூடுவிட்டு கூடுபாய்ந்தார். அவர் அப்போது, ‘தனி உள்ளூராட்சி சபை’ கோரிக்கையையும் கையிலெடுத்துச் சென்றார். சமகாலத்தில், சாய்ந்தமருதுப் பகுதியில், அன்றாடம் குப்பை அகற்றுவதில், கல்முனை மாநகர சபை காட்டிய பொடுபோக்குத்தனம், மற்றுமுள்ள புறக்கணிப்புகள், சாய்ந்தமருது மக்களிடையே பாரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.   

அப்போது விடயத்துக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரான அதாவுல்லா, கல்முனை மாநகர எல்லையை நான்காகப் பிரித்து, நான்கு நகர சபைகள் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அதை அப்போது தடுத்து விட்டதாக, அவர் பல தடவை கூறியிருக்கின்றார்.  

இவ்வாறான நிலையிலேயே, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்டோர், தற்போது உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபயவர்தனவைச் சந்தித்துள்ளனர்.  

 குறுகிய நேரமே இடம்பெற்றதாகச் சொல்லப்படுகின்ற இக்கூட்டத்தில், இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி முடிவெடுப்பது எனவும் அதற்காக ஒரு குழு நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், சாய்ந்தமருதின் தோடம்பழக் குழுவினரும் அமைச்சர் வஜிரவைச் சந்தித்துள்ளனர்.   

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. ஆனால், தனியாகச் சாய்ந்தமருது பிரிக்கப்படுவதால், கிழக்கின் ‘முகவெற்றிலை’ என வர்ணிக்கப்பட்ட கல்முனையில், முஸ்லிம்களின் ஒன்றுதிரண்ட பலம் சிதறடிக்கப்படும் என்பது உள்ளடங்கலாக, கல்முனை மக்களால் முன்வைக்கப்படும் சில காரணங்களிலும் நியாயங்கள் இருக்கின்றன.   

ஒரு சமூகம் என்ற ரீதியில், முஸ்லிம்களுக்கு இரண்டும் முக்கியமானவையே. ஆனால், இதுபற்றிச் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் ஏற்கெனவே பல தடவை பேசியாயிற்று.   

இப்படியிருக்க, ‘அகன்ற கல்முனை’ பற்றியோ, ‘கல்முனை-சாய்ந்தமருது மாநகர சபை’ பற்றியோ, பேசக் கூடிய தருணத்தில், இன்றைய அரசாங்கத்துக்கு இன்னும் ஒருவருடம் அளவிலான ஆயுளே இருக்கின்ற ஒரு சூழலில், மீண்டும் சம்பந்தப்பட்ட அனைத்து முஸ்லிம், தமிழ் தரப்பினருடனும் பேசி, இணக்கப்பாட்டுக்கு வருதல் என்ற முடிவு, மீண்டும் இவ்விவகாரத்தை கிட்டத்தட்ட ஆரம்பப் புள்ளிக்கு கொண்டு சென்று நிறுத்தியிருப்பதாகவே தெரிகின்றது.  

இருபக்க நியாயங்கள்

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் அரச நிர்வாக பொறிமுறை சார்ந்த விடயங்களுக்குப் புறம்பாக, பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தச் சமூக, அரசியல் காரணிகளாலேயே, இவ்விடயம் இன்றுவரை இழுபறியாகவுள்ளது.   

சாய்ந்தமருது மக்கள், தங்களால் கல்முனை மாநகர சபையின் கீழ் இருக்க முடியாது என்று கூறுகின்றனர். அதற்கான காரணங்களையும் தமது அனுபவத்தினூடாக அவர்கள் முன்வைக்கின்றனர். சுமார் 20ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட, புதிய தேர்தல் முறைமையின் படி, ஒன்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக் கூடிய ஒரு பிரதேசம், தனியான உள்ளூராட்சி சபையைக் கேட்பதில் குற்றமேதும் இல்லை. அத்துடன்,‘பிரியப் போகின்றோம்’ என்று கோருகின்ற சாய்ந்தமருதை, கல்முனை மாநகர சபையின் கீழ், கடைசிவரையும் வலுக்கட்டாயமாக இணைத்து வைத்திருப்பதும் சாத்தியமற்றது.   

மறுபுறத்தில், கல்முனை மக்கள் சொல்கின்ற நியாயங்களும் புறந்தள்ளக் கூடியவை அல்ல. கல்முனையில் தேர்தலில் போட்டியிடுகின்ற எல்லா முஸ்லிம் பிரதிநிதிகளும், ஓரணியில் நின்றால், மாநகர சபையைக் கைப்பற்றலாம்; ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்தலாம். ஆனால், எப்படியும் நான்கைந்து கட்சிகளாக, முஸ்லிம்களின் வாக்குகள் உடையும் என்பதால், ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பலம் இல்லாது போய்விடும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.   

கல்முனை மாநகர ஆட்புலத்துக்குள் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைவதும், சாய்ந்தமருதின் பக்கபலம் இல்லாது போவதும் எல்லா விதத்திலும் கல்முனைக்கு பாதகமாக அமையும் என்று, அவ்வூர் மக்கள் நினைப்பதில் தவறில்லை. 

ஆனால், சாய்ந்தமருது மக்களுக்கு ஓர் உள்ளூராட்சி சபையால் வழங்க வேண்டிய திருப்திகரமான சேவையை, கல்முனை மாநகர சபை வழங்கத் தவறியிருக்கின்றது என்றும், தனிச்சபை வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தாவண்ணம், சாய்ந்தமருது மக்களின் மனங்களை வசப்படுத்தி வைத்திருக்கவில்லை என்றுமே கணிக்க வேண்டியுள்ளது.   

சாய்ந்தமருதை பிரிப்பதென்றால், மாநர சபையால் ஆளப்படும் ஏனைய நான்கைந்து தமிழ், முஸ்லிம் பிரதேசங்களும் எதிர்காலத்தில் தனிச்சபை கோரலாம் என்ற அடிப்படையில், இப்போதே நான்காகப் பிரிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. மேற்குறிப்பிட்டவை, சமூக ரீதியான காரணங்கள் எனலாம்.   

அவ்வாறே, இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் அரசியல் நலன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் அரசியல், சுயேட்சை அணியின் நகர்வுகள், கல்முனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் போன்றனவும் இதற்கு ஒரு தீர்வு வருவதில் அல்லது தாமதிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைகின்றன.   

தலைவர்களின் நிலைப்பாடு

இவ்விடயம் தொடர்பாக, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள், அதன்பின் ஊடகங்களுக்குத் தமது நிலைப்பாடு குறித்துக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.   

மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,“எதிர்காலத்தில் பிரச்சினை இல்லாமல், இப்பகுதி மக்கள் சுமுகமாக வாழவேண்டும் என்பதே, கட்சியின் நிலைப்பாடாகும். சுமுக தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.   

“கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சகல ஊர்களுடனும் பேசி, தீர்க்கமான முடிவு காணப்படும்” எனத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வலியுறுத்தியுள்ளார்.   

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்,“இப் பிரதேசத்தில், இனங்களுக்கு இடையிலும் ஊர்களுக்கு மத்தியிலும் ஐக்கியத்தை பேணுவதே முக்கியமானது என்ற அடிப்படையில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு எட்டப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருக்கின்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .