2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஊழலில் சிக்கிக் கொண்ட அரசாங்கமும் விஜயதாசவும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கடந்த 10 ஆம் திகதி, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.   

இப்போது, நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது.   
தமது அரசாங்கத்தில் உள்ளவர்களின் நெருக்குவாரத்தினாலேயே, அவர்கள் இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று.   

உண்மையிலேயே, ரவி கருணாநாயக்க விவகாரமே, இம்முறை விஜயதாசவுக்கும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.   

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன், ரவி கடந்த 2 ஆம் திகதி சாட்சியமளித்தார். அப்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸிடம், அவர் நிதி உதவிகளைப் பெற்றமை அம்பலமானதை அடுத்தே, அவர் மீது நெருக்குவாரம் ஏற்பட்டது.  

இதற்கு 21 மாதங்களுக்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு, இதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களாலேயே நெருக்குதலுக்கு உள்ளாகிச் சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய நேர்ந்த, மூத்த சட்டத்தரணி திலக் மாரப்பன, ரவி கருணாநாயக்கவுக்குப் பதிலாக இப்போது வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.   

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியொன்றாக கருதப்படும் ‘அவன் காட்’ விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சில சந்தேக நபர்களைப் பாதுகாத்து, கருத்து வெளியிட்டமையினாலேயே மாரப்பனவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்குள்ளிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது.  

ரவியின் இராஜினாமாவை ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. எனவே, அவருக்குப் பிணைமுறி விவகாரத்துடன் இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்தி, அவரை இராஜினாமாச் செய்யச் செய்த சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான், அத்திணைக்களத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பக்கம் அவர்களது கோபம் திரும்பியது.  

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் அதற்குச் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சரே காரணம் எனவும் அவர்கள் இதுவரை மறைமுகமாகக் குற்றஞ்சாட்டி வந்தனர்.   

அந்த விசாரணைகள் மந்த கதியில் நடைபெற்றாலும் தமது கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, அக் கட்சியின் தலைவர்களில் ஒருவருக்கு (ரவிக்கு) எதிரான விசாரணைகள் துரித கதியில் நடைபெற்றமை அவர்களது கோபத்தை இரட்டிப்பாக்கியது.  

போதாக்குறைக்கு நீதி அமைச்சர் அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார உத்தியாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்கு வழங்கும் திட்டத்தையும் விமர்சித்து வருகிறார்.   

அவையெல்லாம் ஒன்று சேர்ந்தே விஜயதாச, இராஜினாமாச் செய்யவேண்டும் என்ற கருத்து கடந்த வாரம் ஐ.தே.கவுக்குள் மேலோங்கி வந்தது.  

விஜயதாசவுக்கு எதிரான இந்தப் போக்கை, நாட்டில் சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். ஏனெனில், ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருந்தாலும், விஜயதாச சிறுபான்மை மக்கள் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.  

 2015 ஆம் ஆண்டு, இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் அணுசரனை வழங்கியதையும் அவர் விரும்பவில்லை.   

அண்மையிலும் ஐ.நா உயர் அதிகாரி ஒருவருடன், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அவர் மோதலில் ஈடுபட்டு இருந்தார்.  

 இலங்கையில் போர் நடைபெற்ற, காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை செய்யும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் இருக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடாகும்.   

இவ்வாறு, தமிழர்களை ஆத்திரமூட்டிய விஜயதாச, 32 இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக சென்றுள்ளதாக, சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கூறி, முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்கள மக்களைத் தூண்டிவிட முயற்சித்தார்.  

 ஆனால், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி, அவர் கூறியதை மறுத்திருந்தார். அண்மையில், அவர் பொது பல சேனா அமைப்பின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரருடன் இணைந்து செயல்படும் காட்சி, பத்திரிகைகளில் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது.   

அவர், புத்த சாசன மற்றும் நீதி என்ற இரு அமைச்சுகளுக்கும் பொறுப்பாக இருப்பது, சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்குவதில் தடையாக இருக்கும் என ‘ராவய’ என்னும் சிங்கள பத்திரிகையில் அண்மையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏனெனில், ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருக்களுக்கும் சிறுபான்மை மதத்தினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படும்போது, அவர் புத்த சாசன அமைச்சராக நீதித்துறையை வழிநடத்தக் கூடும் என்பதனாலேயாகும்.   

2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல், அமைச்சராக இருந்து கொண்டே, விஜயதாச இந்த அரசாங்கத்தின் சில முக்கிய நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறார். பதவிக்கு வந்தது முதல், அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் தலைவர்களும் அதிகாரிகளும் செய்த சில குற்றச் செயல்களைப் பற்றி விசாரணைகளை முடுக்கிவிட்டது. கடற்படை செய்து வந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தொழிலை ‘அவன்ட் கார்ட்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கியமை அவ்வாறான பாரதூரமான ஊழல்களில் ஒன்றெனக் கூறப்படுகிறது.  

அமைச்சர் மாரப்பன, ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் சட்டத்தரணியாகக் கடமையாற்றியிருந்தார். அமைச்சர் விஜயதாச, அந்நிறுவனத்தின் அதிபரான மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் நெருங்கிய நன்பர். எனவே, விஜயதாசவும் மாரப்பனவும் ஆரம்பத்திலிருந்தே அந்நிறுவனத்துக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அந்நிறுவனத்தைப் பாதுகாக்க முற்பட்டனர்.   

‘அவன்ட் கார்ட்’ வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என நீதி அமைச்சராக இருக்கும் நிலையிலேயே விஜயதாச அப்போது நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இது ஐ.தே.கவில் உள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போன்றவர்களை வெகுவாகச் சினம்கொள்ளச் செய்தது.  

‘அவன்ட் கார்ட்’ நிறுவனம் எந்தவித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனச் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மாரப்பன, 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார். 

அதற்கு ஐ.தே.கவுக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்பின் விளைவாக, அவர் அம்மாதமே தமது பதவியை இராஜினாமாச் செய்தார்.  

ஆனால், அவரைப் போலவே, ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்தைப் பாதுகாத்து வந்த விஜயதாச, தமது பதவியை இராஜினாமாச் செய்ய முன்வரவில்லை. 

தமக்கும் ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்துக்கும் இடையே, எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அந்நிறுவனத்தின் அதிபரைத் தமக்குத் தெரியாது என்றும் அவர் வாதாடினார். அப்போது, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை எந்த வகையிலாவது சிறையில் அடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படும், அப்போதைய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாசவின் குடும்பத்தினரும் ‘அவன்ட் காரட்’ அதிபர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து, 2006 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் டிஸ்னிலாந்தில் உல்லாசமாக இருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கினார். அத்தோடு அடங்கிவிட்டாலும், விஜயதாச மாரப்பனவைப் போல் பதவியைத் துறக்க முன்வரவில்லை.  

அவருக்கு எதிராக, ஐ.தே.க இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. கோட்டாபயவைப் பாதுகாத்தது போலவே முன்னைய அரசாங்கத்தின் ஏனைய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை அக்கறையோடு முன்னெடுக்காமை, ஒரு குற்றச்சாட்டாகும். 

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஐ.தே.கவின் திட்டத்தை எதிர்ப்பது மற்றைய குற்றச்சாட்டாகும். இவை பாரதூரமான குற்றச்சாட்டுகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  

இராஜினாமாச் செய்ய வேண்டும் எனத் தமது கட்சியின் உறுப்பினர்களாலேயே இதுவரை மூன்று ஐ.தே.க அமைச்சர்கள் அண்மையில் வற்புறுத்தப்பட்டுள்ளனர். மாரப்பன, ரவி மற்றும் விஜயதாச அம் மூவராவர். ‘அவன்ட கார்ட்’ விவகாரம் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உடனேயே மாரப்பன தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார். 

ரவி, ஊழல் பேர்வழிகளிடமிருந்து சன்மானம் பெற்றார் என்பது அம்பலமாகி, விமர்சனங்களை எதிர்நோக்கி சுமார் ஒரு வாரகாலம், தாக்குப் பிடித்துவிட்டு, நெருக்குவாரம் அதிகரிக்கவே அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார்.   

விஜயதாச 2015 ஆம் ஆண்டு ‘அவன்ட் கார்ட்’ விவகாரம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டபோது, மௌனமாக இருந்தார். சிறிது நாட்களில் எதிர்ப்புகள் தணிந்துவிடும் என அவர் நினைத்திருக்கலாம். அவ்வாறே எதிர்ப்புகள் தனிந்தன. ஆனால், இம்முறை முன்னைய அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் திருப்பித் தாக்க முற்பட்டார்.   

ஐ.தே.கவில் பெரும்பாலானவர்கள் கூறுவதைப்போல், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதாக இருந்தால், தாம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றும், அது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்றும் தாம் அதைச் செய்யப் போவதில்லை என்றும் விஜயதாச கூறி வருகிறார்.   

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய இடமளிக்கப் போவதில்லை என்று கூறியவரும் அவரே. சட்டமா அதிபர் திணைக்கள விவகாரங்களில் தலையிடாமல், அவர் எவ்வாறு கோட்டாபயவை கைது செய்வதைத் தடுக்கப்போகிறார்?   

அரசாங்கம் கடந்த மாதம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதை அவர் விமர்சிக்கலானார். தேசிய வளங்களை, வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தாம் விரும்பவில்லை எனக் கூறினார்.

துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்கினாலும் விற்றாலும் வித்தியாசம் இல்லை என அவர் வாதிடுகிறார்.  

 அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அரசாங்கத்தைப் பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டு, அரசாங்கத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.   
ஏற்கெனவே கடந்த வாரம் ஐ.தே.கவின் செயற்குழுவில் விஜயதாச மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, அவர் தொடர்ந்தும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருக்க முடியாது.   

கடந்த சனிக்கிழமையாகும் போது, அவர் எதிர்க்கட்சிக்காரர் ஒருவரைப் போலவே அரசாங்கத்தை விமர்சிக்கலானார். அனுராதபுரம் மாவட்டத்தில் ரம்பேவ என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது, அவர் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை நிறைவேற்ற அணுசரனை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.  

 அதேபோல், அவர் தமக்குப் பாதுகாக்க குடும்பமோ அல்லது பரம்பரையோ இல்லை எனக் கூறிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கொள்கையைச் சிலர் இன்றும் கடைப்பிடித்து வருவதாகவும் அது, நாட்டுக்குச் சாபமாக அமைந்துள்ளதாகவும் மறைமுகமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் குறைகூறினார். அத்தோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், தாம் பதவி விலகப் போவதில்லை எனக் கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் கூறியிருந்தார்.  

ஆனால், ஐ.தே.க எம்பிக்கள், அவர் விடயத்தில் உறுதியாக இருந்தனர். அதாவது, அவர் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர், ஜனாதிபதி மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகியது.   

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என விஜயதாசவை குறை கூறினாலும், ஊழல் என்று வரும் போது, ஐ.தே.கவும் இந்த அரசாங்கமும் ஒரு வித தார்மிக நெருக்கடியை சந்தித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஐ.தே.க தலைமையிலான இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை மாதத்தில்தான் நாட்டில் மிகப்பேரும் ஊழல்களில் ஒன்றான பிணைமுறி விவகாரம் இடம்பெற்றுள்ளது.  

 அது தொடர்டபாக, இதுவரை எவரும் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்படாவிட்டாலும், ஊழல் இடம்பெற்றமை தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.   
நாட்டுக்கு பல கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய ‘அவன்ட் கார்ட்’ விவகாரத்தின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அரசாங்கத்தின் அமைச்சர்களே பாதுகாக்க முற்பட்டனர்.

அவர்களில் ஒருவர், அதன் காரணமாகவே அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தாலும், அவர் மீண்டும் ஒன்றல்ல, இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவரான விஜயதாச, தற்போது மாட்டிக் கொண்டு இருந்தாலும் அது ‘அவன்ட் கார்ட்’ விவகாரத்துக்காக அல்ல.   

மாரப்பனவின் மறு நியமனம் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் 21 மாதங்களுக்கு முன்னர் எந்த விவகாரத்தில் சந்தேக நபர்களைப் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பதவி விலகினாரோ, அந்த விவகாரம் முடிவடைந்து, சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட முன், அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறாயின் அவர் அன்று பதவி விலகாமலே இருந்திருக்கலாமே.  

ஓர் ஊழல் விடயத்தில், குற்றஞ்சாட்டப்பட்டு, பதவி விலகியவர் மற்றொரு ஊழல் விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி விலகிய ஒருவரின் இடத்துக்கு நியமிக்கப்படுகிறார். இது என்ன நாகரிகம்? பதவி விலகியவர் வாழ் நாள், முழுவதிலும் ஒதுங்கியிருக்க வேண்டியதில்லைத்தான். ஆனால், எதற்கும் ஒரு முறை இருக்க வேண்டும்.   

அதன் பின்னர் பிணைமுறி விவகாரத்துடன் ஐ.தே.கவின் உப தலைவரும் நிதி அமைச்சருமாக இருந்த, ரவி கருணாநாயக்கவுக்கு தொடர்பு இருந்துள்ளதாக இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஊழலை முடி மறைக்கவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் அதிபர் அர்ஜூன மகேந்திரனையும் அவரது மருமகனான அர்ஜூன் அலோசியஸையும் பாதுகாக்க, ஐ.தே.க ஆரம்பம் முதல் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டது. ‘கோப் குழு’ விசாரணையிலும் ஐ.தே.க அதற்காக பெரும் பாடுபட்டது. அது இப்போது நாடறிந்த விடயமாகிவிட்டது.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த வருடம் ‘அவன்ட் கார்ட்’ விவகாரம் தொடர்பாக, பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டதை அடுத்து ஊழல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவையும் இரகியப் பொலிஸாரையும் இலஞ்ச ஆணைக்குழுவையும் கடிந்து பேசினார். அதனால், இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட திலருக்ஷி விக்கிரமசிங்க பதவியை இராஜினாமாச் செய்தார்.   

எனவேதான், இந்த அரசாங்கமும் ஊழலை ஒழிக்குமா என்று மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சந்தேகப்படுகின்றன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .