2024 மே 08, புதன்கிழமை

களைகட்டவுள்ள ‘ஜெனீவாத் திருவிழா’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஒரு மாதத்துக்கு ஜெனீவாத் திருவிழா ‘ஓகோ’வென்று அரங்கேற இருக்கிறது. மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, நீதி, நியாயம், சர்வதேச நீதிபதிகள் என, இனி அரசியற்களம் அதகளப்படும். 

இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்க இருப்பதாக, பிரித்தானியா அறிவித்ததன் மூலம், இத்திருவிழா  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஒருபுறம், உள்நாட்டில் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றளவில், கருத்துகளைக் கனகச்சிதமாகக் கக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். மறுபுறம், இது சர்வதேச விசாரணையைச் சாத்தியமாக்கும் என்று நம்பிக்கைகளைப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் விதைக்கத் தொடங்குவார்கள்.   

இங்கு நாம் பேசவேண்டிய விடயங்கள் உள்ளன. இதுவரை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால், தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?
போர் முடிந்து பத்தாண்டுகள் கடக்கின்றன. 2010ஆம் ஆண்டு முதல், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேசப்படுகின்றன. ஆனால், இதுவரை காத்திரமான நகர்வுகள் எதுவுமே நடக்கவில்லை. இது எதைக் காட்டி நிற்கின்றது, என்ற கேள்வியை எழுப்புவது தவிர்க்கவியலாதது. 

அமெரிக்கா, இலங்கைக்கெதிராக 2012இல் கொண்டு வந்த தீர்மானம், போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்கும் ஒன்றாக அமையவில்லை. அது, அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முனையும் தீர்மானமல்ல. அந்தத் தீர்மானம், கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் வரம்புக்கு  உட்பட்டதாகவே இருந்தது. அப்படியிருக்க, அதை ஒரு பெரிய சாதனையாகப் பலர் கொண்டாடினர். 

2015இல் ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்தது. பின்னர், மனித உரிமைகள் பேரவை அவற்றை நிறைவேற்றக் காலஅவகாசம் கொடுத்தது. இவ்வாறு காலம் கடந்தோடியது. இப்போது ஜெனீவா வருகிறது என்று கொண்டாடுவோரிடம் சில கேள்விகள். 

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? 

காணாமல் போனவர்களைத் தேடிப் போராடும் உறவுகளுக்கு பதில் என்ன?

 பயங்கரவாதத் தடைச்சட்டம் எப்போது நீக்கப்படும்?

 இக்கேள்விகளுக்கான பதில்களை, முதலில் தாருங்கள். பிறகு ஜெனீவா, சர்வதேசம், தீர்வு என்று பேசத் தொடங்கலாம். 

கடந்த பத்தாண்டுகளாகத் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம். ‘போக்கும் வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனே’ என்பது போல, ஐக்கிய நாடுகளின் சிறப்பு அலுவலர்கள் வந்து போகிறார்கள்; அறிக்கை வெளியிடுகிறார்கள். இது சுழற்சி போல தொடர்ந்து நடைபெறுகிறது. 

இவ்வாறு வரும், சில சிறப்பு அலுவலர்களின் அவதானிப்புகள், பல உண்மைகளைத் தன்னகத்தே உட்பொதிந்து வைத்துள்ளன. ஆனால், அவை தொடர்பாக, எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. 

இவ்விடத்தில், ஒரேயோர் உதாரணத்தை மட்டும், இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

2017ஆம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த மனித உரிமைகள்,  பயங்கரவாதத்தடுப்பு தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அலுவலர் பென் எமர்சன், தனது பயணத்தின் முடிவில், “இலங்கையெங்கும் சித்திரவதை என்பது சர்வவியாபகமாகவும் நிறுவனமயப்பட்டதாகவும் இருக்கிறது” என்று, கண்டறிந்ததாகத் தெரிவித்தார். 

அதேவேளை, 2016ஆம் ஆண்டில் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில், 80 சதவீதமானவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தார். 

இது, இலங்கையில் சித்திரவதை எவ்வாறு நிறுவன மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற முள்ளந்தண்டை சில்லிடவைக்கும் உண்மையைப் பேசுகிறது. ஆனால், இது தொடர்பில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதில் முரண்நகை யாதெனில், மனித உரிமை என்று வாய்கிழியக் கத்தும் மேற்குலக நாடுகள், சித்திரவதையில் சளைத்தவையல்ல. 

மனித உரிமைகளை மீறுபவர்களே, மனித உரிமையின் காவலர்களாக ஜெனீவாவில் வீற்றிருக்கிறார்கள். அவர்களால் எமக்கு விடிவு வரும் என்று நம்பியிருப்பது எவ்வளவு அபத்தம்.     

இப்போது வரவுள்ள தீர்மானமும், காத்திரமாக எதையும் கொண்டிருக்கப் போவதில்லை. 

இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்மானம், இலங்கையில் சிங்களத் தேசியவாத சக்திகளை வலுப்படுத்தும் என, மேற்குலகம் நன்கறியும். அது, மேற்குலக நலன்களுக்கு ஏற்றதல்ல. 

எனவே, ‘நான் அடிப்பது போல அடிப்பேன்; நீ அழுவது போல் அழு’ என்ற வகையிலான செயற்பாடே அரங்கேறும். 

இதற்கான சமிக்ஞையை, பிரித்தானியா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. அவ்வறிக்கையில், ‘இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஏற்கெனவே இலங்கை உடன்பட்ட தீர்மானங்களை, நிறைவேற்ற எதிர்பார்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது திருவிழாத் தொடங்கியுள்ளது. இது, இன்னும் கொஞ்சக் காலத்துக்கு பேசுபொருளாகும். 
இது, தேசியம் பேசுபவர்களாலும்  என்.ஜீ.ஓக்களாலும்  களைகட்டும். ஏனெனில், நல்ல கல்லா கட்டுபவர்கள் அவர்கள்தானே. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X