2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காவிரி: இரு பக்கமும் கூர்மையான கத்தி எந்தப் பக்கம் பாயும்?

எம். காசிநாதன்   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் முதன்முறையாக, மத்திய அரசாங்கத்தை எதிர்த்துக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.   

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்தி, விரிவான திட்ட அறிக்கை தயாரித்துக் கொள்ளலாம் என்று, கர்நாடக மாநிலத்துக்கு ‘மத்திய நீர்வள ஆணையகம்’ அளித்திருக்கும் அனுமதி, தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.   

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஏற்கெனவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி, “புதிய அணை கட்ட அனுமதி வழங்கியிருப்பது, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் முயற்சி” என்று, கடுமையாக விமர்சித்துள்ளன.   

மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி என்பது, விவசாயிகள் மத்தியில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் காவிரி நீரிலும் ‘கலாட்டா’ பிறக்கும் என்பது, அவர்களது கவலை.  

இதுவரை, மத்திய அரசாங்கத்தைப் ‘பூ’ போல் விமர்சித்து வந்த அ.தி.மு.க அரசாங்கம், இந்தமுறை மத்திய அரசாங்கத்தைப் ‘புயல்’ போல் தாக்கத் துணிந்திருக்கிறது.     

இதுவரை தமிழ்நாடு சட்டமன்றம், மூன்றாவது முறையாகச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மேகதாது அணை கட்டக்கூடாது என்று, தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. 2014, 2015, இப்போது 2018 ஆகிய மூன்று வருடங்களில், “கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது” என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும், ஏகமனதாக அனைத்துக் கட்சிகளும் கைகோர்த்து நின்று, நிறைவேற்றப்பட்டவை. என்றாலும், மத்திய அரசாங்கம் இப்போது, அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள,  குறிப்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்ய, அனுமதி கொடுத்திருக்கிறது.   

இந்த அனுமதி, காவிரிப் பிரச்சினைக்கு புத்துயிரைக் கொடுத்து கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையில், மீண்டும் அறிக்கைப் போரொன்றுக்கும் ஆவேசப் பேட்டிகளுக்கும் வித்திட்டுள்ளது.   

எதிர்க்கட்சிகள், “அடிமை அரசாங்கம்”, “மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த அரசாங்கம்” என்றெல்லாம் அ.தி.மு.க அரசாங்கத்தை விமர்சித்தன. இது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சக அமைச்சர்களுக்கும் பெரிய தன்மானக்குறைவாக இருந்தது என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலும், இனியும் மத்திய அரசாங்கத்தை விமர்சிக்காமல் இருந்தால், வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், உருப்படியான வியூகத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது என்ற நிலையிலும் இந்தக் கண்டனத் தீர்மானத்தை, மத்திய அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றி இருக்கிறார்.  

மத்திய அரசாங்கத்துக்கு நேரடியாகக் கண்டனத் தீர்மானம் இல்லை என்றாலும், மத்திய அரசாங்கத்தின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மத்திய நீர்வள ஆணையகத்துக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது, மத்திய அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவிப்பது போல்தான் என்ற காட்சி, அரங்கேற்றப்பட்டிருக்கிறது.   

காவிரி இறுதி தீர்ப்பை 16.2.2108 அன்று, உச்சநீதிமன்றம் அளித்து விட்டது. அந்தத் தீர்ப்பை அமுல்படுத்த, ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, 18.5.2018 அன்று அத்திட்டத்துக்கு உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்து, உறுதி செய்து விட்டது. 1.6.2018 அன்று, அந்தத் திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு, காவேரி மேலாண்மை ஆணையகமும் உருவாக்கப்பட்டு விட்டது. ஆனாலும் காவிரிப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.   

கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இப்போது மேகதாது உருவில் புதிய பிரச்சினை வெடித்திருக்கிறது. தமிழக அரசாங்கத்தைக் கலந்து ஆலோசிக்காமல், காவிரிக்கு மேலே உள்ள மாநிலமான கர்நாடகம் அணை கட்ட முடியாது என்பதுதான் இப்போது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த குரல். ஏனென்றால், காவிரி இடைக்காலத் தீர்ப்பின்படி, 205 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, 192 டி.எம்.சி தண்ணீராக அது குறைந்தது.   

இப்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு கிடைக்கும் காவிரி நீர் 177.25 டி.எம்.சி என்று சுருங்கி விட்டது. ஆக மொத்தம், இடைக்காலத் தீர்ப்பில் தொடங்கி, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை, தமிழ்நாடு 27 டி.எம்.சி தண்ணீரை, காவிரியில் கிடைக்க வேண்டிய உரிமையை இழந்திருக்கிறது. இந்தக் கோபத்தின் வடிவம்தான், தமிழகமெங்கும் போராட்டங்கள் கொடிகட்டி நிற்கின்றன.  

இது போன்ற சூழ்நிலையில்தான், இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள், குறிப்பாகச் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அ.தி.மு.கவுடன் ஒன்று சேர்ந்து, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.    

தி.மு.கவோ மற்ற எதிர்க்கட்சிகளோ, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்தை எதிர்ப்பது புதிதல்ல. ஆனால், மத்திய அரசாங்கத்தின் தயவில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் எதிர்ப்பதும், கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுதான் இந்தச் சிறப்புக் கூட்டத்தின் முக்கிய அம்சம்.  

இதில், மத்தியில் ஆட்சிசெய்யும் பா.ஜ.க அரசாங்கம் நிச்சயம் எரிச்சல் பட்டிருக்கும் என்றே உறுதியாகச் சொல்ல முடியும். ஏற்கெனவே, அ.தி.மு.க அரசாங்கத்தை ஆதரிக்கும் மத்திய பா.ஜ.க அரசாங்கத்தைப் பார்த்து, “ஊழல் அரசாங்கத்தை ஆதரிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை வேடிக்கை பார்க்கிறது. வருமான வரித்துறை ‘ரெய்ட்’ நடத்தி விட்டு, அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை” என்றெல்லாம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கு ஏகப்பட்ட ஏவுகணைகளை, எதிர்க்கட்சிகள் வீசிக்கொண்டிருக்கின்றன.  இந்தநேரத்தில் அ.தி.மு.கவும் அந்த ‘ஏவுகணை வீச்சில்’ பங்கெடுப்பதை, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் ஒப்புக் கொள்ளும்  என்று எதிர்பார்க்க முடியாது.  

அதேநேரத்தில், இப்படியோர் ‘எல்லைக்கோட்டைத் தாண்டிய தாக்குதலை’ எடப்பாடி பழனிசாமி கையிலெடுக்கக் காரணம் என்னவென்றால், அதிலும் பல அம்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன.   

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறை வாசலுக்கே சென்றும், அவரைச் சந்திக்க முடியவில்லை; காத்திருந்து விட்டுத் வீடு திரும்பினார். அதன் பிறகு, பிரதமரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தாலும், அதில் முந்தைய சந்திப்புகள் போல் சுவாரஷ்யம் இல்லை.  

 முதலமைச்சர் சந்தித்து விட்டு திரும்பியவுடன், ‘குட்கா ஊழல்’ வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ள விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளருக்கு ‘சம்மன்’ அனுப்பியிருக்கிறது. சி.பி.ஐ. கஜா புயல் நிவாரணத்துக்கு 1,500 பில்லியன் ரூபாய் கேட்டாலும், இன்றுவரை மத்தியக்குழு பார்வையிட்டதின் பேரில், எந்த பணமும் ஒதுக்கவில்லை.  கஜா புயல் பகுதிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசாங்கம் அளிக்க வேண்டிய, கஜா புயல் நிதி குறித்து, தமிழக அமைச்சர்களுக்கு உறுதியான பதிலைத் தெரிவிக்கவில்லை, என்ற அதிருப்தியும் அதிகார வட்டாரத்தில் இருக்கிறது.   

1991-96இல் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், எப்படி அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி, அவரது உறவினர்கள் மீது வழக்குப் போட்டதோ, அதேபோல் இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரின் மீது, வருமான வரித்துறை நெருக்கடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஒரு பக்கம் மத்திய அரசாங்கத்துடன் இணக்கமாக இருந்தும் இந்தச் சோதனைகளை எல்லாம் அ.தி.மு.க ஆட்சி சந்திக்கிறது. இன்னொரு புறம் எதிர்க்கட்சிகளோ, ‘அடிமை அரசாங்கம்’ என்று கூறி, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியை அசிங்கப்படுத்துகின்றன.   

எல்லாவற்றுக்கும் மேலாக, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தில் தேர்தலைச் சந்தித்தால் ஒரு எம்.பி கூட, வெற்றிபெற முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடிக்குத் தெரிகிறது. ஆகவேதான், முதல் கட்டமாக, மத்திய நீர்வள ஆணையகத்துக்குக் கண்டனம் தெரிவித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.  

கண்டனத் தீர்மான அரசியலை, மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் அவரை எதிர்த்து வாக்களித்து, கட்சித் தாவல் சட்டப்படி பதவி இழக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய வழக்கு, எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என்ற ரீதியில், வழக்கு விசாரணை, பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   

கண்டனத் தீர்மானத்துக்குப் பிறகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால், பிரதமரைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். ஆகவே, மேகதாது அணைக்காக முதலமைச்சர் எடுத்த ‘கண்டனத் தீர்மானம்’ என்ற கத்தி, இருபக்கமும் கூர்மையுடையது. அது எந்தப் பக்கம் பாயப் போகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .