2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேட்டிலும் துணிந்து நில்

காரை துர்க்கா   / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:14 - 1     - {{hitsCtrl.values.hits}}

மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், சிந்திக்கத் தெரிந்த, நெஞ்சத்தில் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட விலங்கும் மனித இனமே ஆகும்.   

ஆனாலும் மனிதஇனம், மனிதன் உட்பட ஏனைய ​அனைத்து உயிருள்ளவைகள், சடப்பொருள்கள் என அனைத்தையும் வெற்றி கொள்வதில் ஆனந்தம் கொள்கின்றான்; மகிழ்ச்சி அடைகின்றான்.  

மனங்களைக் கடந்து வெற்றி கொள்வதிலும் பார்க்க, பிணங்களைக் கடந்து வெற்றி கொள்வதில் பூரிப்பு அடைகின்றான். மனிதத்தை விதைப்பதற்குப் பதிலாக, மனிதத்தைப் புதைக்கின்றான்.   

இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள், இலங்கைத்தமிழ் இனம் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலையற்ற, வேண்டாத வாழ்வு ஒரு புறமும் கலாசாரம், பண்பாடு சிதையும் போக்கு, மறுபுறமும் என இரு பக்கத்தாலும் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது.   

பொதுவாக ஒரு சமூகத்தை மூன்று வகுதிகளாக பிரித்து நோக்கலாம். புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், மக்கள் என வகைப்படுத்தலாம். முதல் இரண்டு பகுதியினரும் மக்களுக்காகவே உழைப்பார்கள். மக்களது வெற்றியே இவர்களது வெற்றியாகக் கருதப்படும்.   

பிறிதொரு விதத்தில், மக்கள் கூட்டம் என்ற பகுதிக்குள்ளும் வருவார்கள். புத்திஜீவிகளாகத் துறை சார்ந்த பல்கழைக்கழக மனித வளம், பல்கலைக்கழகத்திலிருந்து கற்றுக் கற்பித்து வெளியேறிய மனித வளம், மற்றும் ஏனையோரைக் கூறலாம்.   

ஓர் உறுதியான, ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பில், புத்திஜீகளிடமிருந்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, மக்களுக்காக உழைப்பவர்களே அரசியல்வாதிகளாகச் செயற்படுவார்கள். கொஞ்சம் கூடுதலாகக் கூறின், புத்திஜீவிகளது அறிவுரையுடனும் தங்களது அனுபவத்துடனும் தமது மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுவார்கள் எனக் கூறினாலும் மிகையல்ல.   

அத்துடன், புத்திஜீவிகள் தங்களது வழமையான செயற்பாட்டுப் பரப்புக்கு மேலதிகமாக, மக்களது சிந்தனைக்காக அவர்களது சிந்தனைகளைக் கிளறி விடும் வகையில், பல்வேறு கருத்தரங்குகள் பட்டறைகள் என நடத்துவார்கள். இதனால் மக்கள் கூட்டம் சிறப்பான செல்நெறியில் பயனிக்கும். அறிவு சார்ந்த மக்கள் கூட்டமாக மிளிரும்.  

 இவ்விதத்தில் நோக்கினால், ஈழத்தமிழ் சமூகத்தின் இந்த மூன்று பகுதிகளும் மூன்று தனித்தனித் தீவுகளாகத் தொடர்பு  அறுந்(த்)து உள்ளது என்றே கூறலாம்.   

தமிழ் மக்களுக்கு அரசியல் வெறுத்து விட்டது. அத்துடன், அறம் சார்ந்த அரசியலை அறவே காண முடியாதுள்ளது. இதனால், வலு இல்லாத உத்தமர்கள், அரசியலுக்குள் வர மறுக்கிறார்கள்; வந்த உத்தமர்கள் திணறுகின்றார்கள். ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், அரசியல் அவசியமானது.   

சூழ்நிலை, கால மாற்றங்களுக்கு ஏற்ப, அரசியலையும் மாற்றி ஓட வேண்டிய நிலை உள்ளது; அதுவே விவேகமும் கூட. தற்போதைய நிலையில் தமிழ் மக்களால் நாட்டின் நடப்பு அரசியல் சூழ்நிலைகளை ஆளவோ, மாற்றவோ முடியாது. ஆனாலும் சிறப்பாக நிர்வகிக்க முயல வேண்டும்.   

ஆகவே,மக்கள் தேர்தலுக்கு மட்டும் வாக்குச் செலுத்தும் இயந்திரங்களாக இல்லாது, இதயங்களோடு இணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழ் மக்களை வலிய இழுத்து வந்து, அரசியல் கதைக்கவைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது; நீண்ட காலமாக அரசியலில் வெறுப்புற்று, நம்பிக்கை துளிகூட இல்லாமல் வாழும் மக்களைத் தட்டி எழுப்ப வேண்டும்.   

தமிழ் மக்களது நீண்ட கால, தீராத அரசியல் நோய்க்கு, அபிவிருத்தி வைத்தியம் செய்ய, தெற்கிலிருந்து பலர் இன்று புறப்பட்டு விட்டார்கள்; வெளிப்படையாகத் தெரிவித்தும் வருகின்றார்கள். மின்சாரம் ஒளிர்கின்றது; புகையிரதம் ஓடுகின்றது; வீதி விரிவடைகின்றது; வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இயங்காத தொழிற்சாலைகளை இயக்கப் போகின்றோம்; இந்தியாவுக்கு விமானம் ஓடப் போகின்றோம். ஆகவே, உங்களுக்கு என்ன குறை எனக் கேட்கின்றார்கள். பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கின்றார்கள்.   

ஆகவே, உங்களுக்கு என்ன கவலை, என்ன தேவை எனத் தெருவால் போகும் ஒரு தமிழ் மகனை(ள) பிடித்துக் கேட்டால், ‘அ’ தொடக்கம் சொல்லுமளவுக்கு அரசியல் தெரிய வேண்டும். முதலில் எமது உரிமை (உரித்து); பிறகே எல்லாம் எனக் கூற வேண்டும்.   

‘கேட்டிலும் துணிந்து நில்’ எனக் கூறுவார்கள். அதுபோல, துன்பங்கள் துயரங்களுக்கு மத்தியிலும் உரிமையைக் கெட்டியாகப் பிடிக்க வேண்டும்.   

இந்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் தங்களது பணியை, மேலும் வேகப்படுத்த வேண்டும். வழமையாக எல்லோரும் கூறும், ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என இருக்க முடியாது.   

முன்பெல்லாம் தமிழர் பகுதிகளில், மே தினக் கொண்டாட்டங்கள் நீண்ட பேரணிகள், மாபெரும் ஊர்வலங்களுக்கு மத்தியில், மக்கள் வெள்ளத்தில், பெரு மைதானங்களில் நடைபெறும். ஊரே அணி திரளும். தற்போது, சிறிய மண்டபங்களில் பல வெற்றுக் கதிரைகளுக்கு மத்தியில், சில மணி நேரமே நினைவுகூரப்படுகிறது. 

ஆகவே, மக்களை அணி திரட்டுவதில் தோல்வி கண்டு விட்டோம். இன்று எல்லாமே அரசியல் மயப்பட்டு விட்டன. அதுவும் கட்சி அரசியலுக்குள் சிக்கி விட்டன. அங்கேயும் தனிநபர்(கள்) பிடியில் உள்ளன. இது ஓர் ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. அரசியல்வாதிகள் அனைவரும் ஒற்றுமை தொடர்பில், மக்களுக்குப் பெரும் வகுப்புகள் எடுக்கின்றார்கள். ஆனால், பரீட்சை எடுக்கத் தயாரில்லை.   

‘ஒருவன், உன்னை ஒருமுறை ஏமாற்றினால், அது அவன் தவறு; நீ பலமுறை ஏமாந்தால், அது உன் தவறு’ என மேலை நாட்டுப் பழமொழி கூறுகின்றது. தமிழ் இனம் பல முறை ஏமாந்து விட்டது. ஆகவே, நிதானமாகச் சிந்தித்து, ஒவ்வோர் அடியையும் எடுத்து முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது.   

ஆகவே, தமிழ் மக்கள் நம்பும் விரும்பும் வெகுஜன அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களால் முன் கொண்டு செல்லப்பட வேண்டும். வேகமாகச் சுழலும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மக்களை எவ்வாறு அணுகலாம், எவ்வாறு அவர்களிடத்தில் கருத்துகளைக் கொண்டு செல்லலாம் என ஆராயவேண்டும்.   

கலைகளை உருவாக்கி, கலைஞர்கள் ஊடாகப் பல கருத்துகளை மக்களின் மனதுக்குள் நகர்த்தலாம். இவை சோகத்தில் இருக்கும் மக்களை சுகப்படுத்தும்; சோர்ந்து போன மக்களை ஆசுவாசப்படுத்தும். மொத்தத்தில் வீழும் நிலையில் உள்ளவர்களை எழுப்பி விடும்.   

எமது போராட்டங்கள், தீர்வைத் தருவதற்குப் பதிலாக பல புதிய பிரச்சினைகளை வழங்கி விட்டுச் சென்றுள்ளன. அவற்றை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள, மக்களைத் தயார்படுத்த வேண்டும்; கவலை வேண்டாம்; கவனம் வேண்டும் எனப் பதப்படுத்த வேண்டும்.   

இவற்றைச் செய்யத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அணி திரள வேண்டும். பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி, அவற்றை வெற்றித் திட்டங்களாக மாற்ற வேண்டும். அரசியல் தீர்வு, அரசமைப்பு மாற்றம், அரசியல் பொதி என்ற ஒற்றை அரசியல் கயிற்றில் தொங்கிக் கொண்டிராமல், மாற்று வழிகளை ஆராய வேண்டும் என அரசியல்வாதிகளை வலியுறுத்த வேண்டும்.  

ஆயுதப் போராட்டம் 2009இல் முற்றுப் பெற்றது. சமூக அநீதிகள், போராடாமல் அமைதிக்கு வந்ததாக இல்லை. ஆகவே, வாழும் வரை போராட, மக்களை அழைக்க வேண்டும். ஜனநாயக ரீதியிலான வேறு வகைப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.   

ஆனால், தற்போது தமிழ் மக்களது போராட்டம் திசைகள் இல்லாது பயணிப்பது போலத் தெரிகின்றது. தமிழ் மக்களிடம் எழுச்சிகள் இல்லாது, ஒருவித விரக்கி நிலை நீடித்து உள்ளது. இவை களைந்து எறியப்பட வேண்டும்.  

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் அரசியல் விற்பன்னர்களை உள்ளடக்கிய அரசியல் குழாத்தை உருவாக்கி, அவர்கள் வழித்தடத்தில் அரசியல் கட்சிகளை ஒன்றாக்க வேண்டும். ஒற்றுமைக்குக் குழி தோண்டும் கட்சிகளுக்கு, குழி தோண்ட வேண்டும்.   

கூட்டமைப்பைக் கூட்டோடு உடைக்க, திரையிலும் மறைவிலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், கூட்டமைப்புக்கு எதிரான வலுவான அமைப்பு இன்மையால் அது இன்னமும் உயிர் வாழ்கின்றது. அதேநேரம், கூட்டமைப்பின் பிழையான சில நகர்வுகள், சரியான படிப்பினையை வழங்குகின்றன.   

ஆகவே, கூட்டமைப்பு தன்னைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். ‘நானே மேலானவன், எல்லாம் வல்லவன் என்ற எண்ணங்கள்’ விலத்தி வைக்கப்பட வேண்டியவை.  

பெரும்பான்மையினக் கட்சிகளால் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்ற எண்ணங்கள் மறைந்து, தமிழ்க்கட்சிகளால் ஏமாற்றப்படுவதாக தமிழ் மக்கள் எண்ணக் கூடாது.  ஆகவே, வரலாறு படைக்க, தமிழ் மக்களின் வரலாறு வாழ, இந்த வரலாறுக் கடமையை வெற்றியாக்க, சமூக ஆர்வல்கள் களமிறங்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஆபத்துகள் சூழும்.    

பொதுவாக மனிதனுக்கு, வெளியே (வெளிச்சூழல்) இருந்து, மனதின் உள்ளே செல்வது மகிழ்ச்சி; மனதின் உள்ளே இருந்து, வெளியே வருவது ஆனந்தம். தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை; ஆனந்தமும் இல்லை. இழ(தொலை)ந்து போன இரண்டையும் தமிழ்ச் சமூக ஆர்வலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் ஆகிய இரண்டு தரப்பும் அழைத்து வர வேண்டும்.  


You May Also Like

  Comments - 1

  • Nathan Friday, 24 August 2018 07:48 AM

    நன்றி காரை துர்க்கா, காலத்தின் தேவையறிந்து அருமையான தலைப்பில் ஆராய்ந்திருக்கீறீர்கள். பொதுமக்கள் இப்போது அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை, மற்றவர்கள் எடுக்கும் முடிவுகள், எங்களை மற்றும் எங்களின் சந்ததியினரை எதிர்காலத்தில் எவ்வாறு பாதிக்கப்போகிறது என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை. தமிழ் மக்கள் எப்போதுமே ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என்று இருப்பதற்கு அடிப்படை காரணம் இருக்கிறது, இலங்கையின் அரசியலமைப்பின்படி 225 பாராளுமன்ற உறுப்பினர்கள், அதில் பாடுபட்டோ அல்லது அதிஷ்டவசமாகவோ 30 தமிழ் உறுப்பினர்கள் வந்தால் கூட, அவர்களால் தமிழ் மக்களின் அபிலாசைக்கேற்ற மாதிரி, கடந்த பல தசாப்தங்களாக அனுபவித்த கொடுமைகளை பிரதிபலிக்கும் வகையில் எதுவும் செய்யமுடியாது, ஏனென்றால் 13.3%, எந்த தீர்மானம் கொண்டுவந்தாலும் 86.7% ஆல் தோற்கடிக்கப்படும். கபடமற்ற அரசியல் வாதிகள் உண்மை நிலையை சொல்கிறார்கள், சுயநலங்கொண்ட அரசியல் வாதிகள் சலுகைகள், பணத்தைப்பெற்று தம்மை பிரபல்யப்படுத்த எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். தகுதியான அரசியல் வாதிகளை இனங்காண்பதற்காகவேனும் பொதுமக்களிற்கு அரசியல் அறிவு அவசியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .