2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கை விரிக்கும் இராணுவம்

கே. சஞ்சயன்   / 2019 ஜூலை 09 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  

“இராணுவத்தினரிடம் புலிகள் யாரும் சரணடையவில்லை” என்றும், “இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர்” என்றும், இராணுவத் தலைமையகத்தின் சார்பில், இராணுவத் தகவல் தொடர்பு அதிகாரியான பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியிருக்கிறார்.  

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘தமிழ்மிரர்’ சார்பில் எழுப்பப்பட்ட, கேள்விக்கு, மூன்று மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், முற்றுமுழுதாகச் சிங்களத்தில், இந்தப் பதிலை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.  

சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை, அதிகாரமுள்ள நிறுவனமான, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்தது, இலங்கை இராணுவம் தான். இலங்கை அரசாங்கத்தின் சார்பிலேயே, இராணுவம் போரில் ஈடுபட்டது என்பது உண்மையே.   

எனினும், இராணுவத்திடம், புலிகள் யாரும் சரணடையவில்லை என்றும், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்றும், இராணுவம் கூற முனைந்திருப்பதானது, குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்தாகத் தெரிகிறது.  

போரின் முடிவில், இராணுவத்தினரிடமே, போராளிகளும் பொதுமக்களும் சரணடைந்தனரே தவிர, அரசாங்க அதிகாரிகளிடமோ, அரசாங்க பிரதிநிதிகளிடமோ அல்ல. அவர்கள் யாரும் போர் முனையில் அப்போது இருந்ததாகத் தகவலும் இல்லை.  

இறுதிப் போர்க் காலத்தில், இலங்கை இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் வெளியிட்ட அறிக்கைகள் பலவற்றில், தம்மிடம் சரணடைந்த பொதுமக்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன.  

எந்தெந்தப் படைப்பிரிவிடம், எத்தனை பேர் சரணடைந்தனர் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. பின்னர் ஒரு கட்டத்தில், அந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.  

இந்த நிலையில் தான், தம்மிடம் யாரும் சரணடையவில்லை என்ற புதியதொரு வாதத்தைக் கிளப்பியிருக்கிறது இராணுவம்.  

போரின் இறுதி நாள்களில், சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை மூடி மறைப்பதற்காகவே, இந்த விவகாரத்தில் பதிலளிப்பதற்கு, இராணுவத் தலைமையகம் மறுத்து வருவதாகத் தெரிகிறது.  

நேரடியாகப் பொறுப்புக்கூறும் நிலையில் இருந்து விலகி, பதிலளிக்கும் கடப்பாட்டை, அரசாங்கத்தின் மீது சுமத்த முயன்றிருக்கிறது இராணுவத் தலைமையகம்.  

இறுதிப் போரின்போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட ஒன்பது பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் குறித்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றிருந்தன.  

58ஆவது டிவிசனின் சார்பில், அப்போது முன்னிலையாகிய அதன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, போரின் போது, தமது படைப்பிரிவிடம் சரணடைந்த புலிகள் தொடர்பான பட்டியல், 58ஆவது டிவிசன் தலைமையகத்தில் இன்னமும் இருப்பதாகக் கூறியிருந்தார்.  

அடுத்த தவணைக்கு, அந்தப் பட்டியலுடன் வருமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது, ஆனால், அடுத்தடுத்து இரண்டு, மூன்று தவணைகளுக்கு அவர் முன்னிலையாகவில்லை. இனிமேலும் முன்னிலையாகாவிடின், பிடியாணை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிவான் எச்சரித்த பின்னரே, மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையானார்.  

அவர், எடுத்து வந்தது, 58ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை அல்ல; அவர் கொண்டு சென்றது, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தான்.  

அதனைப் பார்த்த நீதிவான் கோபமடைந்து, அடுத்த முறை, 58ஆவது டிவிசனிடம் உள்ள பட்டியலுடன் வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.   

எனினும், அவ்வாறான எந்தப் பட்டியலும் தம்மிடம் இல்லை என்று, 58ஆவது டிவிசன் சார்பில், முன்னிலையாகிய அதிகாரிகள் பின்னர் சாட்சியமளித்திருந்தனர்  
எனினும், இறுதிப்போரின் போது, 58ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் குறித்து, அதன் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிய போதும், அதனை அரசதரப்புச் சட்டத்தரணிகள் தடுத்து விட்டனர்.  

தம்மிடம், சரணடைந்த புலிகள் தொடர்பான பட்டியல் 58ஆவது டிவிசனிடம் இருந்தது என்று கூறிவிட்டு, பின்னர், அப்படி ஏதும் இல்லை என்று, இராணுவம் குத்துக்கரணம் அடித்தது போலத் தான், இப்போதும் “தம்மிடம் யாரும் சரணடையவில்லை; அரசாங்கத்திடம் தான் சரணடைந்தனர்” என்று இராணுவத் தலைமையகம் முடித்திருக்கிறது.  

அரசாங்கத்தின் ஒரு கருவி தான் இராணுவம். இராணுவமே அரசாங்கத்தின் சார்பில் போர்முனையில் இருந்தது, எனவே, இராணுவத்தை விட, வேறு யாரிடமும் சரணடைவதற்கான வாய்ப்புகளே அங்கு இருக்கவில்லை.  

ஏன், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குமே, தாம் யாரிடம் சரணடைந்தோம் என்பது தெரியும்.  

போர் முனையிலும் சரி, சரணடைந்தவர்களை விசாரணை செய்வதிலும் சரி, இராணுவமே எல்லாமுமாக இருந்தது. ஆனால், அதனை மறைத்து இராணுவத் தலைமையகம், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்று உண்மையை மறைக்க முயன்றிருக்கிறது.  

அரசாங்கத்திடம் சரணடைந்தனர் என்றால், சரணடைந்தவர்களைப் பொறுப்பேற்றது யார், என்ற கேள்விக்கு அரசாங்கம் தான் பதிலளிக்க வேண்டும்.   

அரசாங்கத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினால், இன்னும் பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட பின்னர், ஏதோ ஒரு மழுப்பலான பதில் அளிக்கப்படும். அதற்கும் எழுப்பப்பட்ட கேள்விக்கும் தொடர்பு இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.  

எனினும், இராணுவம் கூறியதைப் போல, புலிகள் யாரும் சரணடையவில்லை என்று அரசாங்கத்தால் கூறமுடியாது. ஏனென்றால், 12 ஆயிரம் புலிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவித்தோம் என்ற புள்ளிவிவரத்தை அரசாங்கம் தான் வைத்திருக்கிறது. அப்படியிருக்க, புலிகள் யாரும் இறுதிப் போரில் சரணடையவில்லை என்று கூறமுடியாது.  

எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் புலிகள் எவரும், சரணடையவில்லை என்று கூறக்கூடும். ஏற்கெனவே, அவ்வாறு தான் இராணுவம் கூறியிருந்தது,  

பாலச்சந்திரன், பா.நடேசன், புலித்தேவன், ரமேஸ் என்று எவருமே சரணடையவில்லை என்றும், அவர்கள் போரிலேயே கொல்லப்பட்டனர் என்றும் தான் இராணுவம் கூறியது.  

போரின் முடிவில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட 100இற்கும் அதிகமான புலிகளின் பொறுப்பாளர்களும் தளபதிகளும் கூட, தம்மிடம் சரணடையவில்லை என்றே கூறப்படுகின்றனர்.  

இவர்கள் சரணடைந்தனர் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்கு என்னவாயிற்று என்ற பதிலைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் தான், இறுதிப்போரில் யாரும் சரணடையவில்லை என்று சாதிக்க முனைகிறது இராணுவம்.  

எனினும், அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர் என்ற ஒரு தகவலின் மூலம், இந்தச் சிக்கலுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை இராணுவம் தள்ளியிருக்கிறதா அல்லது, அரசாங்கத்திடம் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என்ற அலட்சியத்தில் அவ்வாறு கூறுமாறு அரசாங்கமே ஆலோசனை கூறியதா என்று தெரியவில்லை.  

எதுஎவ்வாறாயினும், இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இருப்பதை மறுக்க முடியாது.  

இறுதிப் போர், சாட்சியங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட ஒன்று என்ற துணிச்சலில் தான், இராணுவம் இவ்வாறு கூறியிருக்கக் கூடும். ஆனாலும், காலப்போக்கில் பல ஆதாரங்கள் வெளிவரக் கூடும்.   

சரணடைந்தவர்கள் யார் என்ற பட்டியல் மாத்திரமன்றி, சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், என்னவானார்கள், அதில் யாரெல்லாம் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற தகவல்களும் கூட வெளிப்படலாம்.  

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இராணுவம், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்று சாட்டுச் சொல்ல முனைந்தது போல, ஒரு கட்டத்தில் இராணுவத்திடமே சரணடைந்தனர் என்று அரசாங்கம் சாட்டுகின்ற நிலை வராது என்றும் கூறமுடியாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .