2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொவிட்-19 கதையாடல்-4: தடுப்பூசி என்ற மந்திரச் சொல்

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 01 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
 
எப்போதும் எதிர்பார்ப்புகளோடுதான் வருடங்கள் தொடங்குகின்றன. ஆனால், இம்முறை எதிர்பார்ப்பு என்பது, இந்தப் ‘பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதை, அடிநாதமாகக் கொண்டிருப்பது வியப்பல்ல. 
 
கொரோனா வைரஸ் பரவலே, இந்த வருடத்தைத் தீர்மானிக்கும் என்பதை மட்டும் எதிர்வுகூறலாம். இவ்வாண்டின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பூசியாகும். 
 
அரசுகள், அதன் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும், இந்தத் தடுப்பூசியை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தடுப்பூசி, இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான தீர்வாகுமா? 
 
முதலில், கடந்த ஆண்டிலிருந்து நாம் கற்ற, ஐந்து பிரதான பாடங்கள் என்ன என்று சிந்திப்பது தகும். 
 
1. மனிதகுலம் அறிவியல் ரீதியாக முன்னேறியிருந்தாலும், ஒரு பெருந்தொற்றைக் கையாளுமளவுக்கு வலிமையானதல்ல என்ற உண்மை, எமக்கு உறைத்தது. 
 
2. உலகளாவிய ரீதியில், அரசாங்கங்களின் பிரதான அக்கறை, மக்கள் பற்றியதல்ல; மாறாக, தனியார் நிறுவனங்களின் இலாபமும் அவர்களைத் திருப்திப்படுத்துவதும் அவர்களைக் காப்பதுமே என்பதை, கண்கூடாகக் கண்டோம். 
 
3. அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான போட்டியில், அறிவியல் மிக மோசமான தோல்வியைக் கண்டது. 
 
4. அரசியல் முடிவுகள், அறிவியல் ரீதியானதாக அமையாததோடு, அவை அறிவியலைக் கேலிக்கூத்தாக்கின.
 
5. பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி, தேசியவாத, சர்வாதிகாரப் போக்குகளுக்கும் அவற்றைக் கேள்வியின்றி மக்கள் ஏற்றுக்கொள்ளவும் வழி செய்தன.   
 
இந்த ஐந்து பாடங்களின் அடிப்படையில், மேற்சொன்ன வினாவை நோக்க வேண்டும்.  கொவிட்-19 இன் விளைவான பொருளாதார முடக்கம், பொருளாதார மந்தத்தின் விளைவுகளிலும்  பாரியதாயுள்ளது. அதன் மிகவும் மோசமான பக்கங்களை, 2021இல் எதிர்பார்க்கலாம்.
 
அனேகமாக எல்லா நாடுகளும், பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக, சரிவையே கண்டுள்ளன. இத்தொற்று அடங்கினாலும், பொருளாதாரம் மீண்டும் வளரத் தொடங்க ஓரீர் ஆண்டுகளாகலாம். இப்பொருளாதாரப் பாதிப்பின் சுமை, உழைக்கின்ற மக்களின் மீதே முழுதாக ஏறும். 
 
2008ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, வங்கிகளினதும் கடன் முகவரகங்களினதும் பேராசையே காரணமான போதும், அரசாங்கங்கள் பொருளாதார மீட்சியின் பெயரில், அதே நிறுவனங்களுக்குக் கைகொடுத்தன. அதுபோல இப்போதும், கொவிட்-19இன் பயனாக அதிகம் பாதிக்கப்பட்டோர்,
‘அன்றாடம் காய்ச்சி’களான நாள்கூலி, சுயதொழில், ஒப்பந்தக் கூலி உழைப்பாளர்களேயாவர். வேலையின்மை அவர்களை வாட்டுகிறது. அரசாங்கங்கள், அவர்களது வாழ்வாதாரத்தை மீட்கவோ, பொருளாதார இன்னல்களைப் போக்கவோ, அதிகம் செய்யாமல், மாறாகப் பெருமுதலாளித்துவ  நிறுவனங்கள் கவிழாமல் கைகொடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. 
 
தடுப்பூசிகள் பற்றிப் பேசும்போது, தடுப்பூசிகள் மூலம் மனிதகுலம் தன்னைப் பல கொடிய நோய்களினின்று காத்துள்ளது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது;  மருத்துவமும் மாறிவிட்டது; அதனுடன் இணைந்திருந்த சமூக நோக்கங்களும் மாறிவிட்டன. 
 
மருத்துவம், மனித நாகரிக வரலாற்றின் பெரும் பகுதிக்கு, ஒரு சமூக சேவையாயிருந்தது. முதலாளித்துவம், முதலில் அதை ஒரு தொழிலாக்கியது. பின்பு, அதை ஒரு வணிகமாக்கியது. இப்போது அதை, மனிதரைச் சூறையாடுவதற்கான ஒரு கொள்ளையடிப்பாக மாற்றியுள்ளது. இதன் புதிய போக்கே, கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியும் அதைச் சுற்றி நடக்கும் விடயங்களும் ஆகும். 
 
இப்போது, அரசாங்கங்கள் நம்பிக்கை வைத்துள்ள தடுப்பூசியின் நிலை என்ன? அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தாதியொருவர், தடுப்பூசியைப் பெற்ற சில நாள்களில், கொவிட்-19  நோயால் பீடிக்கப்பட்டார். அதேவேளை, இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பலர், வேறுபல மருத்துவரீதியான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இது குறித்த தகவல்கள், அடக்கி வாசிக்கப்படுகின்றன. 
 
அதேவேளை, இந்தத் தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துக்கின்றன என்பதை, பல மருத்துவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், முன்வைக்கப்படும் வாதம் யாதெனில், ‘கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாதிப்பை விட, தடுப்பூசி ஏற்படுத்தும் பாதிப்புக் குறைவு’ என்பதாகும். இந்த வாதமே, தடுப்பூசியின் சிக்கல்களின் பரிமாணங்களை விளக்கப் போதுமானது. 
 
இன்னொருபுறம், கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், இப்போது மாற்றமடைந்து, புதிய வடிவில் வெளிப்படுகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முன்னையதை விட, வேகமாகப் பரவக் கூடியது என்பதை, கடந்த ஓரிருவார நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 
 
இத்துறைசார் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் புதிய வடிவில் வெளிப்படுகின்ற வைரஸைக் கையாளுவதற்கு, நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசியால் இயலாது. மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களைச் செலவுசெய்து, கொள்வளவு செய்துள்ள தடுப்பூசிகளை, பல நாடுகள் என்ன செய்யப்போகின்றன  என்ற கேள்விக்கு பதில்இல்லை. இதனாலேயே இச்செய்திகள், திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. 
 
இங்கு கேள்விக்கு உட்படுத்துவது அறிவியலை அல்ல; அறிவியலின் பேரால் உட்பொதிந்திருக்கும் இலாபவெறியையும் மனிதகுலம் மீதான அக்கறை இன்மையையுமே ஆகும். 
 
 நோய்த்தொற்றுகளினதும் தடுப்பூசிகளினதும் வரலாற்றை நோக்கினால், மனிதகுலம் சில கடும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பை,  இயல்பாகவே தம்முள் எதிர்ப்பாற்றலைப் பெற்றுக் கடந்துள்ளது. வேறு சிலவற்றின் கடுமையால், உடல் ஊனமாவதும் கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டன. அவ்வகையான நோய்களுக்குத் தடுப்பூசிகள் மூலம் தீர்வு தேடப்பட்டன. முக்கியமான சில, கடும் முயற்சியின் விளைவால் இல்லாமல் செய்யப்பட்டன. இவை சாத்தியமாகியதன் பின்னணியில், சமூக நோக்கும் பொதுமக்கள் மீதான அக்கறையும் பிரதானமானவை.
 
 ஆனால், 1970கள் தொட்டு முன்னிலைக்கு வந்த முதலாளித்துவம், அனைத்தையும் இலாபம் சார்ந்ததாக மாற்றியது. இதைத் தொடர்ந்து, நோய்களும் தொற்றுகளும் மருத்துவ வணிகத்தின் தவிர்க்கவியலாத பகுதிகளாகின. எலியால் பரவிய ‘பிளேக்’ நோயை, முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்த எம்மால், ஏன் இன்றுவரை நுளம்பால் பரவும் ‘டெங்கு’வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 
 
இப்போது சந்தைக்கு வந்துள்ள Pfizer/BioNTech தடுப்பூசி ஒன்றின் விலை 25 அமெரிக்க டொலர்கள். இவை -70 செல்சியஸில் பேணப்பட வேண்டும். அதைச் சேமித்து வைக்க, அதற்கெனப் பிரத்தியேகமாக குளிர்சாதனங்கள் தேவை. எனவே, இதைக் கொள்வனவு செய்வதென்பது, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்குச் சாத்தியமற்றது. 
 
முதன்முதலில் கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ரஷ்யா. ஆனால், இதை மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, சீனா தடுப்பூசியைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த நிலையில், Pfizer/BioNTech தடுப்பூசி வெற்றிகரமான தடுப்பூசியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுசார் அரசியலை, இன்னொருமுறை பார்க்கலாம். 
 
சில தினங்களுக்கு முன், பிரித்தானிய அரசாங்கம் பிரித்தானியத் தயாரிப்பான Oxford/AstraZeneca தடுப்பூசியை அங்கிகரித்தது. ஆனால், இதற்கு அனுமதியளிக்க அமெரிக்கா மறுத்து வருகிறது. Oxford/AstraZeneca தடுப்பூசியின் விலை மூன்று அமெரிக்க டொலர்கள். அவை, Pfizer/BioNTech தடுப்பூசி போல மிகவும் குளிரான வெப்பநிலையில் பேணப்பட வேண்டியவையல்ல. இது தடுப்பூசியின் அரசியலைச் சுருங்கச் சொல்லும் ஒரு நிகழ்வு மட்டுமே. 
 
இன்று எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக, கொவிட்-19 தடுப்பூசி என்ற மந்திரச் சொல்லே உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இவை வழமையான சோதனைகளை முழுமையாகச் செய்யாமல், அவசர கதியில் புழக்கத்துக்கு வந்துள்ளன. இதற்கான காரணம், மனிதகுலத்தின் மீது அக்கறையற்ற தன்மையாகும். 
 
அதேவேளை, இந்தத் தடுப்பூசியின் விலை அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. கொவிட்-19 சோதனைகளையே, இலவசமாகச் செய்ய இயலாமல் மக்கள் தவிக்கையில், சாதாரண மக்களுக்கு இந்தத் தடுப்பூசி எப்போது கிட்டும்? அதேவேளை, இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளும் மருத்துவ வணிகத்துக்கு மேலதிக இலாபத்தையே ஏற்படுத்தும். எனவே, இலாப வெறிக்கு எல்லோரும் பலியாகின்றோம். 
 
இந்த ஆண்டை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். உலகம் கொவிட்-19 தொற்றை விடப் பயங்கரமான பல தொற்றுகளைக் கண்டுள்ளது. எவ்வளவோ, பின்தங்கிய தொழில்நுட்பத்துடனும் தொடர்பாடல் வசதிகளுடனும் மனிதகுலம் அவற்றிலிருந்து மீண்டெழுந்துள்ளது. அது, எவ்வாறு சாத்தியமானது என்பதை, நாம் சிந்திக்க வேண்டும். 
 
நெருக்கடிகளைக் கையாள்வதில், சக மனிதன் மீதான அக்கறையும் மனிதர்கள் ஒரு சமூகமாகச் செயற்பட்டமையும் முக்கிய பங்களித்தன. இதை நாம் மீட்டெடுப்போம். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .