2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஜூன் 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தேர்தலில், மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை, எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.   

இந்தக் கேள்விக்கான பதிலை ஊகித்து, தம்முடைய வாக்கு வங்கி எது, தமக்கு யார் வாக்களிப்பார்கள், அவர்கள் எதற்காகத் தம்மைத் தெரிவுசெய்வார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்றாற் போல தம்முடைய அரசியலையும் பிரசார உத்தியையும் வடிவமைத்து, தேர்தலை எதிர்கொள்வதுதான் பொதுவான அரசியல் நடைமுறை.   

தனிப்பட்ட வாழ்க்கையில் இறைநம்பிக்கை உள்ளவர்கள் கூட, அரசியலில் இறைமறுப்பாளர்களாகத் தம்மை முன்னிறுத்துவதும், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தையே கைக்கொள்பவர்கள், அரசியலில் பெரும் சோசலிஸவாதிகளாகத் தம்மை முன்னிறுத்துவதெல்லாம் இதில் அடங்கும்.  

ஆனால், மக்கள், ஒரு தனிநபர், தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எவ்வாறு தீர்மானிக்கிறார் என்ற ஆய்வுக் கேள்விக்குச் சமூகவியல், அரசறிவியல், உளவியல், மானுடவியல் ஆய்வுப்பரப்பில் பல்வேறுபட்ட ஆய்வுகள் நிறைந்து கிடக்கின்றன.   

சில அமெரிக்க ஆய்வுகள், எமது அரசியல் விழுமியங்களில் ஏறத்தாழ 40 சதவீதமளவுக்கு, எமது மரபணுக்களின் செல்வாக்குள்ளது என்று குறிப்பிடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், தாராளவாதி (இடது), பழைமைபேண்வாதி (வலது) என்று இருதுருவ அரசியல் பரப்பில், உங்கள் அரசியல் விழுமியம் எந்தத் துருவம் சார்ந்தது என்பதைத் தீர்மானிப்பதில் உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பம் ஆகியன குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

அதைவிடவும் சில ஆய்வுகள், உங்களுடைய வயது, உங்கள் வாழ்க்கையின் காலகட்டம் என்பனவும் உங்கள் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதில், முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிடுகிறது. குறிப்பாக, பல்கலைக்கழகக் கல்வி பெறுவோரில் கணிசமானோர் தாராளவாத, இடதுசார் அரசியல் விழுமியங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதையும் தொழில், குடும்பம் என்று வாழ்வின் பொறுப்புகளைச் சுமக்கும் நிலையில் உள்ளவர்கள், பழைமைபேண், வலதுசார் அரசியல் விழுமியங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதையும் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுக்கின்றன.   

இது, ‘20 வயதில் கொம்யூனிஸம் பேசாதவனுக்கு இதயம் இல்லை; 40 வயதிலும் கொம்யூனிஸம் பேசுபவனுக்கு மூளையில்லை’ என்ற மிகப் பொதுப்படையான, மிக நீண்டகாலமாக எம்மிடையே நிலவும் ஒரு பொது நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றும் சொல்லலாம்.   

ஆயினும், இவ்வாறு பொதுப்படையாகக் கூறிவிட முடியாது என்பதைச் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதையும் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். எது எவ்வாறாயினும், எம்முடைய குடும்பம், சுற்றம், மதம், வாழ்க்கைத்தரம் என்பவை எம்முடைய அரசியல் தெரிவுகளைத் தீர்மானிப்பதில், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை, நாம் மறுக்க முடியாது.   

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அங்கிருக்கும் இருதுருவ அரசியல் என்பது தாராளவாத (இடதுசார்), பழைமைபேண் (வலதுசார்) என்ற அடிப்படைகளில் அமைந்தது. அறிவத‌ற்கு இலகுக்காக, மிகச் சுருக்கமாகப் பார்த்தால், இடதுசார் தாராளவாதிகளானவர்கள் பொதுவாகச் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள், அதிக வரிகள், இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், கருக்கலைப்பு உரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை, அனைத்துப்பாலினங்களின் சமத்துவம், குடியேற்றங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பை முதன்மைப்படுத்துதல் என்பவற்றை ஆதரிப்பவர்களாகவும் மதத்தின் தலையீடு, அனைத்துக் குடிமக்களும் ஆயுதம் வைத்திருப்பதற்கான அமெரிக்க அரசமைப்பு வழங்கியிருக்கும் உரிமை ஆகியவற்றை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.  

அதேபோல, வலதுசார் பழைமைபேண்வாதிகள், பொதுவாக திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் மதசார் விழுமியங்களையும் அமெரிக்க அரசமைப்பு உறுதிப்படுத்தும் உரிமைகள், பொருளாதார வளர்ச்சி என்பவற்றை ஆதரிப்பவர்களாகவும் கருக்கலைப்பு, மதவிழுமியங்களுக்கு (குறிப்பாக கிறிஸ்தவ விழுமியங்களுக்கு) எதிரான விடயங்கள், அதிக வரி விதிப்பு என்பவற்றை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பிரித்தானியாவிலும் இடது (தொழிற்கட்சி) வலது (பழைமைபேண்வாதக் கட்சி) துருவங்கள் இருந்தாலும், பிரித்தானிய வலது துருவம் அமெரிக்க வலது துருவமளவுக்கு அதீதமானதல்ல.   
இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கை அரசியலில் மேற்குறித்த இடது-வலது துருவ அரசியல் இருமுனைகள் பலமானது அல்ல. அதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசியல் இனம், மதம், சாதி ரீதியில் கட்டமைக்கப்பட்டமைதான். இலங்கையின் பெரும்பான்மை வாக்கு வங்கி என்பது, அநகாரிக தர்மபாலவில் உதித்த ‘சிங்கள-பௌத்த’ இனம், மதம் தேசியவாதத்தின்படி கட்டமைக்கப்பட்டுவிட்டது.   

ஆகவே, இலங்கையின் வாக்குவங்கி, பொதுவாகப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம், அதற்கு எதிரானவை என்றே பார்க்கப்பட வேண்டும்.   

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்றால், என்னவென்பதற்கு மிக அண்மையை உதாரணம், இரண்டு முஸ்லிம் ஆளுநர்களும், ஒரு முஸ்லிம் அமைச்சரும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, பௌத்தபிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் கண்டார். அவருக்கு ஆதரவாக, அவசரகாலநிலை நடைமுறையில் உள்ளபோதே, வீதிக்கிறங்கிய பிக்குகளும் மக்களும் ஆவர். இவற்றை ஒன்றும் செய்யமுடியாது, வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, அத்தனை பதவி விலகல்களையும் ஏற்றுக்கொண்ட அரசுத்தலைமையின் நிலை. இதுதான், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம்.  இன்னுமோர் அண்மைய உதாரணம், இலங்கை ‘பௌத்த நாடு அல்ல’ என்ற உண்மையைச் சொன்னதற்காக, அதைச் சொன்ன அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராகச் சில பிக்கு அமைப்புகள் புறக்கணிப்புத் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தன. குறித்த மாவட்டத்திலுள்ள எந்தவொரு பௌத்த ஸ்தலத்துக்கும், மங்களவை அனுமதிப்பதில்லை என்றும் அவை தீர்மானித்திருந்தன. இந்த நாட்டின் நிதியமைச்சரின் நிலை இது.   

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, இந்த நாட்டின் பிரதமராக இருந்தும், ஒரு பௌத்த பிக்கு கை நீட்டி அச்சுறுத்தும்போது, கைகளைப் பின்னால் கட்டி, வாய்பொத்தி என்றைக்கு நின்றாரோ, என்றைக்குப் பிக்குக்களின் அழுத்தத்தால் தான் கையெழுத்திட்ட ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தாரோ, அன்று தொடங்கியது இந்தச் சாபக்கேடு.   

ஆகவே, இலங்கை அரசியலில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், இந்தச் ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை, யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பதுதான் முக்கிய போட்டி.   

உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடந்த சில நாள்களிலேயே கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தான் போட்டியிடுவதாக அறிவித்தார். நாடே மிகுந்த அதிர்ச்சியில் பேயறைந்ததைப் போல உணர்ந்த வேளையில், துன்பத்தில் துக்கத்தில் துவண்டுகொண்டிருந்த போதிலே, கோட்டாபய இந்த அறிவிப்பை வௌியிடக் காரணம் என்ன? அரசியல் சந்தர்ப்பவாதம் தான்.   

ராஜபக்‌ஷக்களின் அரசியல் என்பது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் மய்யத்தில் உதித்தது. யுத்த ‘வெற்றி’யைத் தொடர்ந்து, தன்னை அடுத்த துட்டகைமுனுவாகவே மஹிந்த வடிவமைத்துக் கொண்டார். உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்கள், முழு இலங்கையையுமே ஆட்டிப் போட்டிருந்தது. தற்போது பதவியிலுள்ள ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ பலவீனங்களை, அது வெட்டவௌிச்சமாக்கி இருந்தது. மக்களுக்கு, அரச இயந்திரத்தின் மீது நம்பிக்கை குறைந்திருந்த நிலை அது.   

ஏற்கெனவே, 2015இல் மாற்றத்துக்கு வாக்களித்த பலரும் கூட, மைத்திரியின் நடவடிக்கைகளால், ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ வினைத்திறனற்ற செயற்பாடுகளால், அவ்வப்போது வௌிச்சத்துக்கு வந்த ஊழல் செய்திகளால், அதிருப்தி அடைந்திருந்திருந்த வேளையில், நாட்டின் பாதுகாப்பிலும் இந்த அரசாங்கம் கோட்டைவிட்டுவிட்டது என்பது, இதே அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே, இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருந்தது என்பதை, மறுக்க முடியாது.  

குறிப்பாக, பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கி, இந்தத் தாக்குதலின் பின், கடும் அச்சமான சூழலுக்குள் தள்ளப்பட்டது. இதற்கு அவர்களிடமும், ஏன் கணிசமானளவு தமிழர்களிடமுமிருந்து எழுந்த எதிர்வினை, கடுமையான இனவாதப் போக்குடையதாக இருந்தது. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் என்பது, இயல்பானதொன்றாக மாறிக்கொண்டு வருகிறது.   

‘முஸ்லிம்களின் வியாபாரங்களையும் வணிகங்களையும் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரம் சர்வசாதாரணமாக, சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பின் பெயரால், அவசரகாலச்சட்டத்தின் கீழ், முகத்தை மூடும் ‘நிகாப்’ ஆடை தடைசெய்யப்பட்டது. இந்த இனவாத எழுச்சியைத்தான், கோட்டா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க முனைந்திருந்தார் என்பது இங்கு தௌிவாகிறது.   

கோட்டாபய ராஜபக்‌ஷ தீவிர ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதியாகவே பார்க்கப்பட்டார். சில தீவிர பௌத்த அமைப்புகளுக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் பற்றிப் பல தகவல்களும் ஊடகங்களில் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடியும்.    

ஆகவே ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி, தமது பாதுகாப்புத் தொடர்பான கடும் அச்சத்தில் உள்ளதொரு சந்தர்ப்பத்தில், அவர்களை மீட்கும் இரட்சகன் விம்பத்தை, அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்களின் மனங்களில் பதியவைக்கும் உபாயத்தைக் கைக்கொண்டு, இந்த அரசியல் சந்தர்ப்பத்தைக் கோட்டா பயன்படுத்திக் கொண்டார் என்றால் அது மிகையல்ல.   

இலங்கையின் முஸ்லிம் வாக்குவங்கி என்பது, அதிகபட்சமாக ஒன்பது சதவீதம்தான். ஆகவே ஜனாதிபதித் தேர்தலொன்றில் ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கி ஒன்றுபடும் போது, சிறுபான்மை வாக்குவங்கியின் வலு என்பது அர்த்தமற்றது. அச்சம் என்ற ஓர் உணர்வு, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, ஒரு மனிதனை என்னவும் செய்ய வைக்கக்கூடியது என்கிறது உளவியல்.   

ஆகவே, இன்று துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டிருக்கும் அரசியல் சந்தர்ப்பத்தை ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை ஒன்றுதிரட்டும் வாய்ப்பாக, கோட்டா தரப்பு கைக்கொள்கிறது என்றால் அது மிகையல்ல. இந்த ஒன்று திரட்டலில், கணிசமானளவு தமிழர்களின் வாக்குகளைத் திரட்டும் முயற்சியும் பின்புலத்தில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக, தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகள் நிலவும் கிழக்கு மாகாணத்தில், தமிழ், ‘சிங்கள-பௌத்த’ இணைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சிகளையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தமையை, இங்கு அவதானிக்க வேண்டும்.   
வடக்கு, கிழக்கு தமிழர்களிடையேயும் குறிப்பாக, தமிழ் அரசியல்வாதிகளிடையே, காலங்காலமாக ஒரு முரண்பாடு இருந்து வருகிறது. இது விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளும் இருந்தது. கருணா அம்மானின் பிரிவும் அதற்கு அவர் சொன்ன நியாயங்களும் சந்தர்ப்பவாதத்தில் சொன்னவை என்றால் கூட, அதற்குள் நியாயங்களும் கிழக்குவாழ் தமிழர்கள், வடக்குசார் தமிழ் தலைமைகளால் தாம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறோம்; எமது பிரச்சினைகளுக்கு வடக்குசார் தமிழ்த் தலைமைகள் முக்கியத்துவம் தருவதில்லை என்ற குறையைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறார்கள். இன்று இந்தப் பிரிவு கூட, கோட்டாவுக்குச் சாதகமாக அமையலாம் என்ற நிலை காணப்படுகிறது.   

ஆனால், இங்கு இன்னும் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ராஜபக்‌ஷக்கள் ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி மய்ய அரசியல் செய்வதானால், ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கி பெரும்பான்மையானதாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்‌ஷ 2015இல் தோல்வி கண்டது ஏன்?   சமகால இலங்கையில், மிகக் கணிசமானளவில் காணப்படும் கட்சி பேதமற்ற ஊசலாடும் வாக்குவங்கி, கோட்டாவையோ, ராஜபக்‌ஷ சார்பில் போட்டியிடும் வேட்பாளரையோ ஆதரிக்குமா?  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .