2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தகுதியான தலைமையை தேடும் தமிழ் இனம்

காரை துர்க்கா   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 05:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தீவு, 1505 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நிய நாட்டவரால் ஆளப்பட்டது.   

பல நூற்றாண்டுகளுக்கும் ​​மேலாக, அடிமைத்தளையில் சிக்கியிருந்து, கத்தியின்றி, இரத்தமின்றி 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கை தனது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.   

அவ்வாறு இருந்தபோதும், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட, தீவின் பிறிதொரு தேசிய இனமான, சிறுபான்மைத் தமிழ் மக்கள், தங்கள் இனத்தின் இருப்புக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இன்றும் போராடும் நிலையே நீடிக்கின்றது.   

ஆரம்ப காலங்களில், தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சைப் போராட்டங்கள், சிங்கள ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமையால் ஆயுதம் ஏந்திப்போராடத் தள்ளப்பட்டனர். ஆயுதப் போராட்டமும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, பன்னாட்டுச் சமூகத்தின் பெரும் ஒத்துழைப்புடன் ஒழிக்கப்பட்டுள்ளது.   

இலங்கையில் தமிழ் மக்களது விடுதலை நோக்கிய போராட்டம், முழுமையாக அறம் சார்ந்தது; நியாயம் நிறைந்தது என்பதை சர்வதேசம் நன்கு அறியும். ஆனாலும் தத்தம் நாடுகளது அரசியல், இராணுவ, பொருளாதார நலன் கருதி, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது. அதன் ஊடாக, பன்னாட்டுச் சமூகம், தனது நாட்டு நலன்களை அதிகளவில் அறுவடை செய்துள்ளது; செய்கின்றது.   

இந்நிலையில், தமிழ் மக்கள் விரும்பியோ விருப்பாமலோ, தம் விடுதலை நோக்கிய பாதையில், தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

ஆனால், தமிழ் மக்கள் நம்பும் அவ்வாறான அரசியல்வாதிகள், தற்போதும் சர்வதேசத்தை நம்பியே உள்ளனர். அது வேறு கதை; ஆனாலும் மறுவளமாகத் தமிழ் மக்கள் விரும்பக் கூடிய அல்லது நம்பக் கூடிய நற்பண்புகளுடன் தமிழ் அரசியல் பிரமுகர்கள் உள்ளனரா என்பதே தொக்கி நிற்கும் இன்றைய பெரும் கேள்வி ஆகும்.   

வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. கொழும்பின் அன்றைய ஆட்சியாளர்கள் தங்களது ஆதரவுக் கட்சிகளால், வடக்கில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது எனத் தெளிவாக அறிந்திருந்தனர். ஆனாலும் தேர்தலை நடாத்த வேண்டிய அழுத்தங்கள் தேவைப்பாடுகள் அக்காலப்பகுதியில் இருந்தது. 

பலவாறான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் ஒன்றுபட்டனர். அலை அலையாகத் திரண்டு வாக்களித்தனர். பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வழி சமைத்தனர்.   

ஆனால், ஆரம்பத்திலேயே கட்சி ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் அமைச்சுப் பதவி பெற ‘குத்து’ப்பட்டனர். இது தொடர்பில் முடிவெடுக்கப் பல தடவைகள், விடுதிகளில் கூடினர்.

தமிழ் மக்கள் பெரும் இக்கட்டான, நிர்க்கதி நிலையில் இருக்கையில், இவர்கள் ஐந்து வருடங்கள் அமையப் போகும், வெறும் மாகாண அமைச்சுக்கு அடிபட்டமை, அடிபடுகின்றமை வெட்கக்கேடான விடயம்.   

ஆனாலும் ஈற்றில் என்ன நடந்தது? கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டமைப்பிலுள்ள நான்கு தமிழ்க் கட்சிகளும் நான்கு திசைகளில் பயணிக்கின்றன. அமைச்சுப் பணிகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதாகப் பணி நீக்கங்கள்; பதவி இராஜினாமாக்கள்....   

“முதலமைச்சர் நீதியரசர் என்றால், நான் ஒரு சட்டத்தரணி” எனச் சவால் விடும் முன்னாள் அமைச்சர் ஒருவர். “ஏதோ மினக்கட்டு (சிரமப்பட்டு) வந்துவிட்டோம்; இரண்டு பாட்டுப் பாடி விட்டுப் போவோம்” எனக் கூறும் சபை உறுப்பினர். இவ்வாறாக வடக்கு மாகாண சபை, தனது 48 மாத காலப்பகுதியில் சிறப்பாகக் கூறும்படி எதைச் சாதித்தது? இன்னுமிருக்கும் மிகுதி நாட்களில் எதைச் சாதிக்கப்போகின்றது?   

உண்மையில், ஒரு வினைதிறன் கொண்ட அரசியல்வாதிகள் (தலைமை) தனது மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது விடுதலையை நோக்கி மக்களை நகர்த்த வேண்டும்.   

ஈழத் தமிழ் மக்கள், 2009 மே 18 ஆம் திகதியுடன் எல்லாமே முடிந்து விட்டது என்ற சோகம், கவலை, வெறுப்பு ஆகியவற்றை எந்நேரமும் சிந்தித்து, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இழந்து வாழக் கூடாது; இருக்கவும் முடியாது. 

ஆயுத போராட்டப் பாதை, வலிகள் நிறைந்தது. அது எமக்குப் பல படிப்பினைகளை வழங்கி விட்டுச் சென்று விட்டது. விடுதலை என்பது கரடு முரடான முட்கள் நிறைந்த பாதை. ஆகவே நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட, தனித்துவமான இனம், மீண்டும் வழுக்கி விழக் கூடாது.   

ஆகவே, தமிழ் மக்களுக்குத் தமது வருங்காலம் பற்றிய நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் தெரியும்படியாகத் தமிழ்த் தலைமைகள் செயற்படுகின்றனவா எனத் தமிழ் மக்களின் அடிமனதில் உதிக்கும் சந்தேகங்களுக்கு விடைகள் கிடைக்கவில்லை. 

அண்மைக் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே நடைபெற்று வரும் கருத்தாடல்கள், கருத்தாழம் மிக்கதாக, ஆக்கபூர்வமானதாக இல்லாமல், பரஸ்பர ஒற்றமையை வெட்டிப் புதைப்பதாக உள்ளது.   

மே மாதம் 2009 க்கு முன்னர், தமிழ் மக்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும், அதை நிறைவேற்றும் தரப்பினராக புலிகள் மட்டுமே இருந்தனர். அக்கால கட்டத்தில் புலிகளிடம் காணப்பட்ட படை பலம், நாட்டுக்கான தியாகங்கள் எல்லாம்  அவர்களது தீர்மானங்களுக்கு உயிர் கொடுத்தன;  வலுச் சேர்த்தன. தனிப்பட்ட விருப்புவெறுப்புகளினால், புலிகளை ஆதரிக்காத தமிழர்கள் கூட, அவர்களது அரசியல் தீர்மானங்களை ஆதரித்தனர்.   

ஆனால், உலகறிந்த முள்ளிவாய்க்கால் பெரும் அவலத்துக்குப் பின்னர் கூட, தமக்குள் ஒற்றுமைப் படாத தமிழ் அரசியல்வாதிகள், எப்போது ஒரு பொதுப்புள்ளியில் தமிழ் மக்கள் சார்பில் ஒன்று கூடப் போகின்றார்கள். எப்படித் தமிழ் மக்களை வழி நடத்தப் போகின்றார்கள்.   

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் கூட ஒருமித்து ஒற்றுமையாக அனுஷ்டிக்காத அரசியல்வாதிகள், எவ்வாறு தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றார்கள்? கட்சி விசுவாச அரசியல், சுயநலம், பதவி ஆசை, பண ஆசை போன்ற முற்றுகைக்குள் சிக்குண்டிருக்கும் நம்மவர்கள் எப்போது வெளியே வரச் சிந்திக்கப் போகின்றார்கள்?  

இன்று, வடக்கு, கிழக்கில் தமிழ் இனம் ஒரு வித உடைந்த சமுதாயமாக, தமக்குள் பலவித முரண்பாடுகளுடன் வாழ்கின்றமையை அவதானிக்கலாம். இவர்களை உயர்ந்த நேரிய சமூகமாக மாற்ற, தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் என்ன வேலைத்திட்டத்தை கொண்டிருக்கின்றார்கள்? முன்னெடுத்தார்கள்? ஒருவரை ஒருவர், மாறி மாறி வசை பாடுவது, தாங்களே மக்கள் நலன் பேணுபவர்கள் எனத் தம்பட்டம் அடிப்பது என்றவாறான சின்னப்பிள்ளைத்தனமான செயற்பாடுகளே நடைபெறுகின்றன.   

“தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை. வெறும் வார்த்தைகளால் அந்த நெருக்கடியைப் பதிவு செய்வது போதுமான ஒன்றல்ல; தமிழர்களின் நெருக்கடி தொடர்பாக, வெளித்தோற்றத்தில் காணப்படும் விடயங்கள் மட்டுமே, இதுவரை பதிவாகி உள்ளன. அடிமட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் சரியான முறையில் பதிவாகவில்லை” என இந்தியாவிலிருந்து அண்மையில் வந்திருந்த பிரபல ஓவியரும் பல்துறை விற்பன்னருமான ட்ராஸ்கி மருது தெரிவித்திருந்தார்.   

ஆகவே, ஆயிரம் வேலைகளை ஆற்ற வேண்டிய அரசியல்வாதிகள், தாண்டிய தூரம் மிகக் குறைவு. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படைப் பிரச்சினை, அன்றாடப்பிரச்சினை என இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கவேண்டும். 

அதில் அடிப்படைப் பிரச்சினை என்பது இனப்பிரச்சினையும் அதன் தீர்வு முறைகளும் ஆகும். மக்கள் தினசரி முகங்கொடுக்கும் பிரச்சினைகளே அன்றாடப்பிரச்சினைகள் ஆகும். இவ்வாறான பிரச்சினைகளுக்குக் கூட, தீர்வு என்ற பரிகாரம் கானல் நீராகவே உள்ளது.   

கொடும் போரால், ஒடிந்த மக்களை ஒழுங்கமைத்துச் சிறப்பாகத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகள். யுத்தம் நடைபெற்ற காலங்களில், தமிழர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை கூட, தற்போது மதத்தாலும் சாதியாலும் பிரதேசத்தாலும் அறுக்கப்பட்டு விடுமோ என அச்சம் கொள்ளவேண்டிய ஒரு சூழல் காணப்படுகின்றது.   

ஆனாலும், இவற்றையெல்லாம் மறந்து நம் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்படுகின்றார்களே எனத் தமிழ் மக்கள் கவலை கொள்கின்றனர். அவர்களைத் தயவு கூர்ந்து, நிரந்தரத் தீர்வு வரும் வரையாவது ஒற்றுமையாகச் செயற்படும்படி கோரி நிற்கின்றனர். நமது அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிணக்குகளுக்கு சமரசம் காண, யாழ். ஆயர் மற்றும் நல்லைக் குருமணி போன்றோர் மூன்றாம் தரப்பு நடுவர்களாகக் களம் காண வேண்டிய ஒரு கடை நிலையில், தமிழர் அரசியல் திக்குத்திசை தெரியாது பயணிக்கின்றது.   

ஆகவே, இவ்வாறான சிக்கல்களுக்கு விடிவு பிறக்க, மக்களின் மனங்களோடு உரையாடுபவர்கள் மட்டும் அரசியலுக்குள் வர வேண்டும். புதிய சிந்தனை, நிதானமாக விடயங்களை சீர்தூக்கி பார்க்க கூடிய புதிய இளம் தலைமுறை அரசியலுக்குள் நுழைவது காலத்தின் தேவையாகும்.    

தலைவர்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் உடையவர்கள் அரசியலுக்குள் தடம் பதிக்கட்டும். 

கதிரைகளுக்காக கடை விரிப்பவர்களுக்கு மக்கள் விடை வழங்குவார்கள்; போலி வாக்குறுதி வழங்கியவர்களை மக்கள் காலி ஆக்குவார்கள்; காலக்கெடு வழங்கி நிறைவேற்றாதவர்களின் அரசியலுக்கு மக்கள் காலக்கெடு கொடுப்பார்கள்.

 மொத்தத்தில், தமிழ் மக்களுக்காகத் தூய அரசியல் ஆற்றுபவர்களுக்குக் கதவு திறக்க மக்கள் காத்து இருக்கின்றார்கள். வெளிப்படுவார்களா?  

 


You May Also Like

  Comments - 1

  • ferose nawshath Wednesday, 20 September 2017 06:38 AM

    ungalaip pondra eluththaalarkl ullavarai samookam vetriyodu payanikkum... Thank you!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .