2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தாகத்தைத் தீர்க்காத தண்ணீரும் பாவத்தைப் போக்காத தீர்த்தமும்

காரை துர்க்கா   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையில் எமது நாட்டில், இனப்பிரச்சினை என்ற ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டினால், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டலாம் எனத் திடமாக நம்பலாம்.  

இதையே, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா பின்வருமாறு தெரிவித்துள்ளார். “பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, நாம் மனம் திறந்தால், அதன் மூலம் இயல்பாகவே அறிவு திறக்கும். நாட்டில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவதற்கு, அனைத்துச் சமூகத்தினரும் மனம் திறக்க வேண்டும்”.   

அந்நியப் படையெடுப்புகளுக்கு முன்னர், தமிழ் மக்கள், தங்களது மண்ணில் தனித்துவமாகவும் கௌரவமாகவும் சிறப்பாகவும் தம்மைத்தாமே ஆட்சிசெய்து வாழ்ந்தார்கள்.   

அந்நியப் படையெடுப்பின் மூலம், இழந்த சுதந்திரத்தை, பெரும்பான்மை அரசாங்கங்கள் வரை, ஒன்றுக்கு பலமுறை கேட்டார்கள்; அஹிம்சை வழியில் கேட்டார்கள்; ஆயுதம் தரித்துப் போரிட்டுக் கேட்டார்கள்; இன்று வரை, கேட்டுகொண்டே நிற்கிறார்கள்.  

இந்நிலையில், ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலங்களில், பேசு பொருளாகக் காணப்பட்ட இனப்பிரச்சினையும் அதன் தீர்வும் இன்று, பெரும்பான்மையின அரசாங்கங்களால் பேசாப் பொருளாக்கப்பட்டு விட்டன.     

“வரலாற்றுக் கதைகளில், தமிழர்கள் மிகவும் கொடூரமானவர்களாகத் சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிறுவயதில் இவ்வாறான கதைகளை, நான் வாசிக்கும் போது, எனது தாயார் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இவற்றை நம்ப வேண்டாம் எனக் கூறி, என்னை அரவணைத்து வழிகாட்டி இருந்தார்” எனக் கலாநிதி ஜெஹான் பெரேரா நினைவுபடுத்தியுள்ளார்.   

அதுபோலவே, தற்போதும் தமிழ் மக்கள் தொடர்பாக, அவர்களது அபிலாஷைகள், உரிமைகள், சுதந்திரம் போன்றவை பெரும்பான்மையின மக்களிடம், பிழையாக, உண்மைக்கு முற்றிலும் புறம்பாகக் கதைகள் கூறி, நம்பவைக்கப்பட்டுள்ளன.  

 ஆகவே இவ்வேளையில், பெரும்பான்மையின மக்களை அரவணைத்துப் புரியவைத்து, வழிகாட்ட யாருமற்று, எமது நாட்டில், இனங்களின் மனங்கள் பிளந்துள்ளன.   

கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளமை போன்று, இட்டுக்கட்டான கதைகளால், அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் இனம் தொடர்பாக நஞ்சூட்டப்பட்டு விட்டது; புதியபுதிய புனைவுகள் புனையப்பட்டுள்ளன.   

“கொழும்பு மாநகர சபையில் இருந்து, புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது; நல்லாட்சியில் பௌத்த மதம் நலிவடைந்து உள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர், ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இதை, அந்தச் சபையின் மேயர் அடியோடு மறுத்துள்ளதுடன், பொய்க் குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளார்.   

ஆனாலும், இருக்கின்ற புத்தர் சிலையை, இல்லை எனக் கூறிய தேரரின் கருத்தே, முன்னிலை வகிக்கும். இது, சிங்கள பௌத்த மக்களின் மனங்களை உரசிப்பார்க்கும்; ஏனைய மதங்களின் மீது, இனம் புரியாத எரிச்சலை எற்படுத்தும்.   

உதாரணமாக, தனது மதத்தில் நம்பிக்கையற்ற ஒருவருக்குக் கூட, தமது மதத்துக்கு எதிராக ஏதும் நடந்தால், கவலைப்படுவார்; கோவப்படுவார்.   

ஏனெனில் மதம் என்பது, முற்றிலும் உணர்வுகளுடன் சங்கமிக்கும் விடயமாகும். மதங்களின் உயரிய நோக்கமே, மக்கள் மனங்களில் தெய்வீகத்தின் ஊடாக, மனச்சாந்தியை ஏற்படுத்துவதாகும்; மனங்களைத் திறக்கச் செய்வதாகும்.   

ஆனால் மறுபுறத்தே, இதுவரை காலமும் சிவனடிபாதம் என மதிக்கப்பட்டு வந்த சிவனொளிபாதமலை, இப்போது கௌதம புத்த பகவானின் பாத ஸ்தானமாக மாற்றப்பட்டு விட்டது. இது, நாட்டில் வாழும் இந்துக்களின் மனங்களை, எவ்வாறு புண்படுத்தும் என எவரும், சற்றும் சிந்திக்கவில்லை.   

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் பாடல் பெற்ற திருத்தலமுமான மன்னார், திருக்கேதீஸ்வரத்துக்கு அருகில், பௌத்தர்கள் எவரும் வசிக்காத சூழலில், மாதோட்டம் விகாரை கட்டப்பட்டுள்ளது.   

இந்த ஒற்றை நிகழ்வு, ஒரு மதத்தவருக்கு மனதில் தென்றலையும் அதேவேளை பிறிதொரு மதத்தவருக்கு மனதில் புயலையும் ஏற்படுத்தும். இங்கு, மனங்கள் திறக்காமை, மதவாத சிந்தனையிலிருந்து வெளிவராமை எமது நாட்டின் முடிவுறாத பெரும் சாபக் கேடாகும்.   

நல்லாட்சி அரசாங்கத்தின் போதனைகளும் வேதனைகளும் தமிழ் மக்களுக்கு மட்டுமே உரித்தானவை போலும். இவற்றை ஏன், ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இவை, பெரும் அநியாயம் என, ஏன் சாதாரண சிங்கள மகன் குரல் எழுப்பவில்லை, ஏன் மனம் திறக்கவில்லை?   

ஏனெனில், பெரும்பான்மையின மக்களில் பெரும்பாலானவர்கள், அ(இ)வ்வாறாக வளர்க்கப்பட்டு விட்டார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான, சின்னச் சின்ன நகர்வு கூட, கொழும்பின் ஆட்சியாளர்களுக்கான பெரு வெற்றி; அரசியல் முதலீடு. இது தேர்தல் காலங்களில் அள்ளித்தரும் பெரும் வாக்கு அறுவடை. இதுவே, காலங்காலமாக நடைபெற்று வருகின்ற, நம்நாட்டு அரசியல் நடைமுறை.   

மதவேற்றுமைகளைக் களைந்து, இனங்களுக்கிடையே மதங்கள் மூலம், ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்தோடு வண. பணகல உபதிஸ்ஸ தேரர், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்.   
தமிழர் பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகள், புத்த சிலைகள் தொடர்பாக அவர் புது வியாக்கியானம் வகுத்துள்ளார்.  

“யாழ்ப்பாணத்தில் இந்துக்களே அதிகமாக உள்ளனர். அவர்கள் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக, அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரின் ஏழாவது அவதாரமாகவே புத்தர் உள்ளார். அவர் பிறப்பால் இந்து. அவரது தாய், தந்தை, உறவினர்கள் என அனைவருமே இந்துக்கள். ஆகவே, புத்த விகாரைகள் தொடர்பாக இந்துக்கள் கவலைப்படத் தேவையில்லை” என ஆலோசனை கூறியுள்ளார்.  

வடக்கு, கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுவதால் அமைதிக்குப் பதிலாக, குழப்பங்களே அதிகம் தோன்றியுள்ளன; தோற்றுவித்தும் வருகின்றன. கடந்த காலத்தில் புலிகள் - அரசாங்கம் பேச்சுவார்த்தைகளின் போது, திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரத்தால் பேச்சுவார்த்தை முறிவடைகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருந்தன.   

ஏனெனில், தமிழர் பகுதிகளில், புத்தர் சிலை என்பது மத வழிபாட்டுக்குரிய சின்னமாக அன்றி, தமிழர்களின் பூர்வீகமான நிலங்களை, ஆக்கிரமிப்புச் செய்யும் அடையாளச் சின்னமாகவே கணிக்கப்படுகின்றது. எனவே ஆக்கிரமிப்பாளர்கள், இதனை நன்றாகப் புரிந்தும் தெரிந்தும் கொண்டதால், ஏற்க முடியாத காரணங்களைத் தேடுகின்றனர்; கற்பிதங்களை கற்பிக்கின்றனர்.   

அதேவேளை, யுத்தம் நடைபெற்ற காலங்களில், தமிழ் மக்களது உயிர்கள், உடமைகள் பறிக்கப்பட்டன. ஆனால், தற்போது அவர்களின் கலாசாரம், பண்பாடு, வழிபாட்டுத் தலங்கள், நிலங்கள்,கடல்கள் என அவர்களின் இருப்பு பறிக்கப்படுகின்றன.   

“அதிகாரங்கள் பகிரப்படுவதை சிங்கள மக்கள் விரும்பவில்லை” எனச் சரத் பொன்சேகா கூறுகின்றார். அவர் கூறுவது போல, அதிகாரங்கள் பகிரப்படுவதை சிங்கள மக்கள் விரும்பவில்லை எனின், நாட்டின் சுபீட்சத்துக்கு அவர்கள் தயாரில்லை என்றே அர்த்தம் கொள்ளப்பபடும். தமிழ் மக்களது பிரச்சினைக்கு, நீதி வழங்கும் போது, அதிகாரமும் வழங்கப்பட்டாலே தீர்வு நிலைக்கும்.   

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்கும் முயற்சிகளில் அதன் பழைய மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகச் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளால், 1983ஆம் ஆண்டு தொடக்கம், அப்பாடசாலை இயங்கவில்லை; நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து இது.   

இதுபோலவே, அதே வன்முறையால் 1984ஆம் ஆண்டில், தமிழ் மக்களது பூர்வீக நிலமான, மணலாற்றிலிருந்து ஓர் இரவில் இடம்பெயர வைத்து, மணலாற்றை வெலிஓயா எனவும் மேலும் பல ஊர்களுக்குச் சிங்கள நாமங்கள் சூட்டி, சிங்கள மயப்படுத்திய தமிழ்க் கிராமங்களை, விடுவிக்க இந்த நாட்டில் யாரால் முடியும்?   

அவர்கள், தாங்கள் படித்த பாடசாலையை மீளவும் ஆரம்பிக்க முயல்வது அறத்தின் பாற்பட்டது. அதுபோல, மணலாறு மக்களும் தா(த)ங்கள் பிறந்த ஊரில், மீண்டும் வாழ விரும்புவதும் அறத்தின்பாற்பட்டதுதானே.   

நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படுகின்ற சட்டங்களால், மக்கள் நெறிப்படுத்தப்படுவது நீதி. மனங்களால் தாமாகவே அறநெறியான பாதையில் நெறிப்படுத்தப்படுவது நியாயம்.   

நம் நாட்டில், தமிழ் மக்கள் விடயத்தில் நீதியும் தோற்றுவிட்டது; நியாயமும் தோற்றுவிட்டது. 
இன்று இந்நாட்டில், வலிமையான சொல்லாற்றல் உள்ளோர்களால், மனங்கள் இரண்டாகி, இனங்கள் வில(க்)கி, நாடு வெறுமையை நோக்கி வெற்றி நடை போடுகின்றது.   

இவற்றுக்கு எல்லாம் மாற்றீடாக, ஒன்றை மட்டும் செய்தால் நாட்டில் உண்மையான அமைதி அலை மோதும். அதுவே, உள்ளங்களை உண்மையாக, உளப்பூர்வமாக இணைப்பது.   

விலக்கி வைத்து, மகிழ்ச்சி அடைவதிலும் பார்க்க, இணைத்து வைத்து மகிழ்ச்சி அடைவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். இணைந்த மன(உள்ள)ங்கள் இரண்டும் இணைந்து நம்மை நன்றியோடு வாழ்த்தும் ஆசீர்வதிக்கும்.   

தாகத்தை தீர்க்காத தண்ணீர்; பாவத்தைப் போக்காத தீர்த்தம் என்பவை வீணானவை. அதுபோல, அடுத்தவரின் உணர்வுகளைச் சற்றும் அறியாத மனங்களும் வீணானவை. இவை எப்போது திறக்கும், எ(அ)ப்போது தமிழ் மக்கள் வாழ்வில் ஒளி தெரியும்?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .