2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துண்டாடப்படும் பூர்வீக நிலம்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

உரிமைகள் மறுக்கப்படும் இனமொன்றின் கோரிக்கைகள், அஹிம்சைத் தன்மைவாய்ந்தவையாக அமையும் சந்தர்ப்பத்தில், சுயநிர்ணய கோரிக்கைகளே வலுப்பெறுவது சாத்தியமானது. 

இந்தக் கோரிக்கைகள் மேலும் வலுப்பெற வேண்டுமாயின், இனப்பரம்பலும் நிலத் தொடர்பும் பலம் பொருந்தியதாக அமையவேண்டும். 

இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகப் பதிவுகளில் சான்றாகின்றது.  கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை மையப்படுத்தி, அதிகளவாக குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1949இல் அல்லைத்திட்டம், 1950 இல் கந்தளாய் திட்டம், 1954 இல் பதவியாத்திட்டம் (முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில்), 1954 இல் மொறவேவாத்திட்டம் (பெரியவிளாங்குளம் என்ற தமிழ் இடத்தில்), 1979 இல் மகாதிவூல்வெவ திட்டம் போன்ற சிங்கள குடியேற்றங்கள், தமிழர்களின் நிலத்தொடர்பையும் இனப்பரம்பலையும் சீர்குலைக்கவல்லனவாக அமைந்தன.  

இவ்வாறான குடியேற்றங்கள், சிறுபான்மையினரைச் சீண்டிப்பார்த்து, தமிழ் இளைஞர்களைக் கொதித்தெளவும் வைத்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், சுயநிர்ணய உரிமையைக் கோராது இருப்பதற்காக, இனரீதியான, இடரீதியான அமைவிடத்தை மாற்றும் செயற்பாடுகளும் நடைபெற்றன.  
இவ்வாறான திட்டங்கள்  தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை  என்பதற்கும் பல்வேறான சான்றுகள் பதிவாகியிருக்கின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில், தமிழ்ப் பிரதேசங்களில் மெல்ல மெல்லக் கொண்டுவரப்பட்ட குடியேற்றங்கள், இன்று வியாபித்து, தமிழ்ப் பிரதேசங்களில், சிங்கள மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களாக, தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன.  

வவுனியா பிரதேசத்தில், ‘மடுக்கந்தை’யில் தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த நிலையில், அது பல ஆண்டுகளுக்கு முன்னர், எவ்வாறு சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, இன்று முற்றுமுழுதான சிங்கள மக்களின் பிரதேசமாக மாறியிருக்கின்றதோ, அதேபோன்றதொரு நிலையில், இன்று ‘கொக்கச்சான்குளம்’ என்ற தமிழ்க் கிராமம், ‘கலாபோகஸ்வெவ’ என்ற சிங்களக் குடியேற்ற கிராமமாக மாறியிருக்கின்றது.

கொக்கச்சான்குளம் என்பது தமிழ் மக்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து, தமது வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்த, பெரியகுளத்துடன் வயல் நிலங்களைக் கொண்டமைந்த கிராமமாகும். இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள், யுத்தம் காரணமாக வெளியேறி, வவுனியாவில் பல்வேறான இடங்களில் வசிக்கத்தொடங்கியிருந்தனர்.இதனால், காடுகளாக மாறிய இக்கிராமத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு, குளம் புனரமைக்கப்பட்டு ஹம்பாந்தோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 3,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

இக்கிராமத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கத்தோடு, கிராமத்தின் இரு பகுதியிலும் இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டு, வேறு பிரதேசத்தவர்கள் உட்செல்லமுடியாத வகையில் பாதுகாக்கப்பட்டது. 
இக்கிராமத்தின் உருவாக்க காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகக் காணப்பட்ட சிவசக்தி ஆனந்தன், இது அநீதி என குரல்கொடுத்திருந்தபோதிலும், அக் குரலைப் பலப்படுத்த ஏனையவர்கள் ஒன்று சேராததால், இந்த எதிர்ப்புக்குரல் எடுபடாமலேயே போனது.

இன்று இக்கிராமத்தின் வாக்காளர்களை எண்ணி, கதிகலங்கும் தமிழ்த் தலைமைகள், அங்கு தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் அபிவிருத்திகளையும் உதவிகளையும் ஒரு கணம் எண்ணிப்பார்க்கவும் தவறிவருகின்றன.

இந்நிலையிலேயே, யாழ். மாவட்டத்திலும் கடந்த ஆட்சிக்காலத்தில், நாவற்குழி பிரதேசத்தில் குடியேறிய சிங்கள மக்கள், தற்போது அங்கு பெரிய பௌத்த விகாரையை அமைத்து, அக்கிராமத்துக்குச் ‘சிங்கள ராவய’ என்ற பெயர்ப்பலகையையும் சூட்டியுள்ளனர். 

நாவற்குழி புகையிரத நிலையம் வந்திறங்கிய சுமார் 12 சிங்கள குடும்பத்தினர், தாம் அங்கு வாழ்ந்ததாகக் கூறி, தமக்குக் காணி தரவேண்டும் என்று கூறவே, அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச, அம்மக்களுக்கு அப்பகுதியில் இருந்த அரச காணிகளை ஒதுக்கி, குடியேற அனுமதித்திருந்தார்.
இன்று அக்கிராமத்தில் 49 கல்வீடுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அதே குடியேற்றத்திட்ட செயற்பாடுகள், இன்றுவரை நகர்கின்றது என்பதற்குச் சான்றுபகிரும் தரவுகள் வலுப்பெற்று வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில், ‘கொக்குவெளி’ என்ற தமிழ்க் கிராமம் ‘கொக்கெலிய’ என்ற பெயரில் மாற்றப்பட்டு, அங்கு 51 இராணுவக் குடியிருப்புத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. பூர்வீகமாகத் தமிழ் மக்கள் வாழ்ந்த இப்பகுதியில், பேயாடிகூழாங்குளம் என்ற இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு, அதற்குப் பின்புறமாகவே இக்குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகள் எதை எடுத்தியம்பச் செய்கின்றன என்பதைத் தமிழர் தரப்பு ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் விரைந்துகொண்டிருக்கின்றது. வெறுமனே, அரசியல்த் தீர்வு என்பதை முன்னிறுத்திய தமிழர் தரப்பின் அரசியல், தற்போதைய கள யதார்த்தங்களையும் உணர்ந்து செயற்படத் தவறக்கூடாது. 

இவ்வாறாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தமிழர் பிரதேசத்தில் நடக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களால் ஏற்படும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் வீதக்குறைப்பானது, நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும்போது, அரசியல் தீர்வும் சரி, தமிழ் மக்களின் அபிலாஷைகளின்பால் நகர்ந்து செல்வதற்கான பலமும் மழுங்கடிக்கப்படும் என்பது மறுப்பதற்கில்லை.

எனவே, நல்லாட்சி என்ற மோகத்தில் உள்ள தமிழ்த் தலைமைகள் உட்பட்ட தமிழர் தரப்பு, கள யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதுடன், இந்த ஆட்சிக்காலத்திலும் நடக்கும் சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், தொடர்பில், விழிப்படைய வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

தமிழ் அரசியல் தலைமைகள் விரும்பி ஏற்ற ஜனாதிபதியும் வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றத்துக்கு உரமிடும் செயற்பாடுகளை நிறுத்தியதாகவோ அன்றில் அதைச் செயற்படுத்த முனைபவர்களைத் தடுத்ததையோ களத்தில் காணமுடியாதுள்ளது.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் நோக்கோடு, இக்குடியேற்றத் திட்டங்களைத் தமிழர்கள் தனித்துவமாக வாழ்ந்த பிரதேசங்களுடன் இணைத்தமையால், தமிழர்களே ஆட்சி அமைக்க வேண்டிய பல உள்ளூராட்சி மன்றங்கள், இன்று பொரும்பான்மையினரிடம் செல்லும் நிலையும் காணப்படுகின்றது. 

யுத்த காலத்திலும் யுத்தத்துக்குக் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் காலப்பகுதியிலேயே பெருந்தொகையான சிங்கள மக்களைக் கொண்டு வந்து, வவுனியா வடக்கில் குடியேற்றினார்கள். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, மக்களில்லாத பகுதிகளுக்கு யானை வேலிகள் அமைத்து, குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றன. வந்து குடியேறியவர்களின் கைக்கு, வவுனியா வடக்கின் ஆட்சி போகவேண்டிய நிலை இருந்தது. 

இந்நிலையில், தற்போது  மகாவலி திட்டம் பற்றி பேசப்படுகின்றது. வவுனியா மாவட்டத்துக்கு இந்தப் படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் வருவது, அதிர்ஷ்டமாகும். குளங்களை நம்பி விவசாயம் செய்யும் வன்னிப் பிரதேசத்தில், இரண்டு போகம் விவசாயம் செய்யக் கூடியதாக இருக்கும். இருந்தாலும், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் தான், நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது  எல்லோருக்கும் பயம் நிறைந்ததாகவே மாறியுள்ளது. 

 ஏனெனில், கடந்த காலங்களில் எங்கெல்லாம் மகாவலி அபிவிருத்தித் திட்டம் வந்ததோ, அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் வந்தன.  அவ்வாறே, வன்னிக்கு மகாவலி தண்ணீர் வரவில்லை. ஆனால், மகாவலியைக்கூறி குடியேற்றங்கள் வருகின்றன. இத்திட்ட நீர், வவுனியாவுக்குள் வரும்போது, இத்திட்டம் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என ஜப்பானிலிருந்து வந்த குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருந்தது. எனினும், இக்கோரிக்கை எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதே கேள்வியாகும்.

அங்கு மக்களைக் குடியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், வன்னியில் பல மாவட்டத்தில் காணிகளற்ற விவசாயக் குடும்பங்களுக்கு இக்காணிகள் பிரித்து வழங்கப்பட வேண்டும். தமிழ், சிங்களம், முஸ்லிம் எனப் பாராமல் மாவட்டத்திலுள்ள மூவின மக்களுக்கும் பிரித்து வழங்கி  குடியேற்றங்களை மேற்கொள்ளலாம்.

 ஆனால், இதுவரை கிட்டத்தட்ட 7,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அத்தனை குடும்பங்களும் இலங்கையின் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களாக உள்ளமையே அந்தப்பகுதியில் உள்ள மக்களுக்கு, மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

எனவே, இவ்வாறான அநியாயங்களுக்கு  எதிராக, மேற்கொள்ளப்படும் வெகுஜன போராட்டங்களைத் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு நடாத்துவதன் ஊடாகவே,  தமிழர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்த  முடியும் என்பதே யதார்த்தம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .