2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தேர்தலுக்கான அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை’

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஷிவானி

​தேர்த​லை நடத்த ​​வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், எந்த​வோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. 
தேர்த​லை நடத்த, அரசியல் கட்சிக​ளே தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இல்லையென்று, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். தமிழ்மிரர் பத்திரிகைக்கு, நேற்று (26) அவர் வழங்கிய பிரத்தியேகச் 
​செவ்வியி​​லேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருதல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முறையை, 20ஆவது திருத்தத்தின் ஊடாக ஒழிக்க நினைக்கின்றனர். யார் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், சிறுபான்மையினர் என்ற வகையில், இலங்கையின் ஒரே தலைவர் என்ற அடிப்படையில், பொதுமக்கள் வாக்களிப்பர். எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே பொருந்துமென நான் கருதுகிறேன். அத்துடன், சிறுபான்மையினருக்கும் இதுவே பாதுகாப்பளிக்கும். 

அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகின்றனர். ஆனால், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள், இன்னும் வழங்கப்படாதுள்ளன. அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுவதைவிட, அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தச் செயற்படுவதே பொருத்தமானது.

கே: மாகாண சபைத் தேர்தல் தாமதமடைவதற்குக் காரணமென்ன? எல்லை நிர்ணயம் சாத்தியம் தானா?

மாகாண சபைத் தேர்தலை, தேவைப்படின் பழைய முறைமையில் நடத்தலாம். நான் உள்ளூராட்சி மன்ற அமைச்சராக இருந்த போது, தேர்தல் தாமதம் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன என்பன பரவலாகக் குறைக்கூறின. அதுவே அவர்களுக்கான தேவைப்பாடாக இருந்தது. ஆனால், பழைய முறையில் தேர்தலை நடத்த எந்தத் தடையும் இல்லை.

கே: மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கைக்கு என்ன நடந்தது?

பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதாயின், எல்லை நிர்ணயம் அவசியமில்லை. எல்லை நிர்ணய அறிக்கை, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் அவர் அதை, ஜனாதிபதியிடம் கையளித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவில்லை.

கே: இதற்கான காரணமென்ன?

அதை, பிரதமர் தலைமையிலான குழுவிடமே கேட்க வேண்டும்.  

கே: தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென சகலரும் கூறுகின்றனரே?    

எல்லோரும் கூறினாலும், எந்த​வோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. 

கே: அவ்வாறாயின், தேர்தல் ​மேலும் தாமதமாகுமா?

தேர்தல் தாமதமாகவில்லை. தேர்தலை நடத்த, அரசியல் கட்சிகள் தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இல்லை.

கே: அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ஜே.வி.பியினர், சிறுபான்மை கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றது. அது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

சிறுபான்மைக் கட்சி என்பது, சிறுபான்மை மக்கள் அல்ல. நான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கிறேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதானது, பாதிப்பை ஏற்படுத்தும். சிறுபான்மை மக்களுக்கு, தற்போது கிடைக்கும் பாதுகாப்பானது, இம்முறைமை​யை ஒழித்தால் இல்லாது போகும். 

கே: நீங்கள் கூறுவதைப் போல், சிறுபான்மையினருக்கு இம்முறை பாதுகாப்பை அளிக்கும் என்றால். தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால், சிறுபான்மை மக்களுக்கு எத்தகைய நன்மை கிட்டியுள்ளது?

மக்களின் வாக்குகளைப் பெற்று, நாட்டின் தலைவரான ஜனாதிபதியொருவர் தீர்மானமொன்றை எடுப்பதாயின், ஒன்றுக்கு பத்துமுறை அது குறித்து யோசிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்​மை உள்ளவர்கள், அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். இந்த நாட்டில், 70 சதவீதமானவர்கள் சிங்களவர்கள். அதனால், சிறுபான்மை மக்களுக்கு, நாடாளுமன்ற முறைமையில் கிடைக்கும் பாதுகாப்பை விட, சகல மக்களாலும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி முறையில் பாதுகாப்பு அதிகம் என்றே நான் கருதுகிறேன். நாட்டில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினரின் ஒத்துழைப்பின்றி ஜனாதிபதியொருவர் தெரிவாகும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. 

கே: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டும் இணைந்து, புதிய கூட்டணி அமைக்கத் தயாராகி வருகின்றனர். இதன் நோக்கம் என்ன? சு.க, அடுத்த தேர்தலை எவ்வாறு எதிர்​க்கொள்ளப் போகிறது?

இன்று இந்த அரசாங்கத்துக்கு, வைத்தியர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் ஆதரவு வழங்குகின்றனரா? எனது பார்வையில் பொதுத் துறையினர் எவரும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரியவில்லை. அதனால், இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் மக்களின் நிலைப்பாடு காணப்படுகிறது. 
எதிர்க்கட்சியினர், இதில் பிரயோசமடையும் வகையில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி பிளவுப்பட்டிருந்தால், இலக்கை அடைய முடியாது போய்விடும். இன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பாரிய மக்கள் பலத்தைக் கொண்ட கட்சியாக உருவாகியுள்ளது. சுதந்திரக் கட்சியைவிட அதிக மக்கள் பலத்தை இது கொண்டுள்ளது. 

ஆகவே, மொட்டுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான தேவைப்பாடு இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியே, மொட்​டில் இணைய வேண்டியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் பலம் குறைந்துள்ளது. மொட்டு, சிங்கள கட்சியாக உருவாகியுள்ளது. சிறுபான்மை கட்சிகளை சாரவில்லை. 

கே: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தா அல்லது மொட்டில் இருந்தா ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் தனித்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி​ெபற முடியாது என்பது யதார்த்தம். அதனால், மொட்டின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாராயின், வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

இது குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில அர்ப்பணிப்புகளைச் செய்தே, மஹிந்தவைப் பிரதமராக்கினார். அதனால், அரசாங்கத்தைத் தோற்கடிப்பதாயின், அவர்கள் இருவரும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். 

கே: மஹிந்த - மைத்திரி இணைந்தா செயற்படப் போகிறார்கள்?

இவர்கள் இணையாவிட்டால். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அழிந்துவிடும். மொட்டும் அழிந்துவிடும். மொட்டு முன்னோக்கிப் பயணிக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமாயின், குறித்த இரு கட்சிகளும் இணைய வேண்டும். 

கே: அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் மைத்திரிபால சிறிசேனவையும் மொட்டு தரப்பில் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் ஜனாதிபதி வேட்பாளர்களாகக் களமிறக்குவது தொடர்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்ற வகையில், எனது எதிர்பார்ப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்குவார் என்பதாகும். ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று போட்டி போடாது, பொது நிகழ்ச்சிநிரல் இருந்தால், யார் வேட்பாளராயினும், சீராகப் பயணிக்க முடியும். வெற்றி ​பெறவும் முடியும். 

கே: தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து எதைக் கூறவிரும்புகிறீர்கள்?

19ஆவது திருத்தத்தை முன்வைத்ததற்கு மாறாக, கடந்த மூன்றரை வருடகாலப் பகுதியில், இந்த அரசாங்கம் எதைச் செய்தது? கீழ் மட்டம், கிராம மட்டங்களில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம், முறன்பட்ட இரண்டு கட்சிகள்  இணைந்து செயற்பட்டதே ஆகும்.

கே: மீண்டும் சுதந்திரக் கட்சியினர் சிலர் ஐ.தே.கவுடன் ​இணைவது குறித்துப் பேசப்படுகிறதே?

அவ்வாறு பேசப்படுறதா? இன்னும் 9 மாதங்களே அரசாங்கத்துக்கு எஞ்சி இருக்கின்றது. அரசாங்கத்தை முறையாகக் கொண்டுச்செல்வதாயின், நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை அவசியம். 

கே: நீங்கள் ஐ.தே.கவில் இணைய எதிர்பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லை. எனது தனிப்பட்ட நிலைப்பாடு தொடர்பில் நான் எங்கும் கருத்துத் தெரிவிப்பதில்லை. 
கே: தற்போதைய அரசாங்கத்தை மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகிறதே இது குறித்து...
அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில், புதிய அரசாங்கம் உருவாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படும். புதிய அ​ரசாங்கமொன்றை அமைப்பதே, நாட்டுக்கு தற்போதைய தேவையாக உள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க ஆகியவற்றுக்கிடையில் காணப்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக, அரசாங்கத்தைக் கொண்டுநடத்த முடியாத நிலை காணப்பட்டது. அதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம், புதிய அரசாங்கமொன்றை  தோற்றுவிக்கவே மக்கள் எதிர்பார்க்கின்றனர். யார் வெற்றிபெற்றாலும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும். தற்போதைய அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்​மை இன்றி அரசாங்கத்தை நடத்திச் செல்வது கடினம். இதில் பல சிக்கல்கள் உள்ளன.

கே: தேசிய அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படுமா?

தேசிய அரசாங்கம் அமைக்கும் நிலைப்பாட்டில் இருப்பது, ஐ.தே.கவுக்கு பெரும்பான்மை வேண்டும் என்பதாலேயே ஆகும். ஆனால், இன்னும் 9 மாதங்களே அவர்களுக்கு உள்ளது.

கே: வரவு - செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு  மீதான வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாகச் செயற்படுமா? 

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர், அமைச்சுப் பொறுப்புகளை வகிப்பதால், நாங்கள் எதிராக வாக்களிக்க முடியாது. தேர்தல் நெருங்கும் போது சமர்பிக்கப்படும் வரவு - செலவுத் திட்டமானது, தேர்தல் குண்டு என மக்கள் அறிவார்கள்.

கே: ஜெனீவா தீர்மானத்துக்கு, இலங்கை இணை அனுசரணை வழங்கியது தொடர்பில் பல்வேறு மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. நாடென்ற வகையில், இணை அனுசரணை வழங்கியது சரியா?

ஜெனீவா தீர்மானம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானங்களாலே​யே, இன்று நாடு தப்பியுள்ளது. அதனால், ஜெனீவா குறித்து எத்தகைய நிலைப்பாடு காணப்பட்டாலும், இலங்கைக்கு ஜனாதிபதி பெற்றுக்கொடுத்துள்ள கீர்த்தியானது, நாம் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறோம் என்பதை, சர்வதேசப் பிரஜைகளுக்கு உணர்த்தியுள்ளதே ஆகும். அதனால், ஜெனிவாவில் நாம் எடுக்கும் தீர்மானங்களின் போது, எப்போதும் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்று, நாம்  முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

கே: யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய, சர்வதேச நீதிபதிகளை அழைப்பதற்கான விதிமுறைகள், எமது அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? சர்வதேச நீதிபதிளை அழைப்பதில், அரசமைப்பில் தடையில்லையென சுமந்திரன் கூறியுள்ளாரே?

அவரின் நிலைப்பாடு அது. எமது நீதித்துறை சுயாதீனமானது. 19ஆவது திருத்தத்தில், அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஒவ்வொரு விதமாகக் கூறலாம். வெளிநாட்டு சட்டத்தரணிகளை அழைப்பதாயின், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராகவே குரல் கொடுக்கின்றன. எனது தனிப்பட்ட நிலைப்பாடும், அதுவாகவே உள்ளது. சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு வரவழைப்பதில், நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

கே: நாட்டில் இந்தியா - சீனா ஆகியவற்றின் ஆதிக்கம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்து...

இந்தியா எமது நட்புறவு நாடு. சகல விதத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் திருப்தியடையும் வகையில் செயற்பட வேண்டும். இந்திய அரசாங்கத்தின் ஆதரவு நாட்டுக்கு தேவை. அதேபோன்று, பொருளாதார ரீதியில் சீனா பலவந்த நாடு. இலங்கைக்கு சீனா ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன், அதிக முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளது. இலங்கையின் சுமூகமான பயணத்துக்கு, இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம். இந்தியா, ஒருபோதும் எமக்கு எதிராகச் செயற்படாதென நான் கருதுகிறேன். கடன் பெற்றாவது, முன்னோக்கி பயணிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்தில் இருந்து, அவ்வாறு தான் உள்ளது. பொருளாதார விருத்திக்கான செயற்பாடுக​ள், நாட்டில் முன்னெடுக்கப்பட  வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மூன்றில் இரண்டு இருந்ததாலேயே, யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது.

கே: நீங்கள், மஹிந்தவுக்கா ஆதரவு வழகுவீர்கள்?

நான் மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை மதிக்கும் நபர். நான், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய போதிலும், மஹிந்த ராஜபக்‌ஷ மீது தனிப்பட்ட குரோதம் இருக்கவில்லை. எனது மக்கள் தொடர்பில் சிந்தித்தே, அச்சமயம் தீர்மானத்தை எடுத்தேன்.  யுத்தத்தை வெற்றிகொண்ட வீரர் மஹிந்த ராஜபக்‌ஷ என்றே அன்று கூறிறேன். முஸ்லிம் மக்களுக்கு, பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன. முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கினேன். கிரான்பாஸ் சம்பவம், திகன சம்பவங்களின் போது, நானே அங்கு சென்றேன். எமது மக்களுக்கான பிரச்சினை எழும் போது, அங்கு முதலில் செல்வ​து நானே. 

ஆகவே, நான் இனவாதி அல்ல. எனது இனத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டால், அத்தகைய அரசாங்கத்தில் இருக்கமாட்டேன் என்பதை கூறிக்கொள்கிறேன். தற்போதைய அரசாங்கத்தில் சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மொட்டும் சு.கவும் இணைந்து, கூட்டணியாகச் செயற்படுமெனக் கருதுகிறேன். இனத்தை அடிப்படையாகக் கொண்டு நீதி வழங்குவதற்கு இடமளிக்கக் கூடாது. திகன சம்பவத்தின் போது, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்திய போது, பொலிஸார் வேடிக்கைப் பார்த்தனர். சட்டம், இன, மத, மொழி கடந்து, சகலருக்கும் சமனான வகையில் அமைய வேண்டும். 

கே: வடக்கின் மீள்குடியேற்றம் குறித்தும் வில்பத்து பிரச்சினை குறித்தும், அண்மைக்காலமாக பிரச்சினை நிலவுகிறதே? 

வடக்கில் முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்காக அமைச்சர் ரிஷாட், பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். வில்பத்து குறித்து அரசியல் செய்யப் பார்க்கின்றனர். அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக, முஸ்லிம் தலைமகளே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. வில்பத்து பிரச்சினை, ரிஷாட்டின் பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களின் பிரச்சினை. ரிஷாட்டுக்கு எதிராக பிரச்சினையை எழுப்பி, மீள்குடியேற்றத்தை தடுக்கவே சிலர் எத்தனிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .