2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழிலாளர் போராட்டங்கள்

Ahilan Kadirgamar   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகப்புக் குறிப்புகள்

அண்மையில் இடம்பெற்ற ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தை, நாம் எவ்வாறு எதிர்கொள்வது? அந்தப் போராட்டம், ரயில்வே ஊழியர்களுக்கான உயர்ந்த சம்பளம், நிர்வாகத் தரப்படுத்தல்கள் பற்றியதா, இல்லையெனில் பொதுப் போக்குவரத்தைக் குழப்புவதை அடிப்படையாகக் கொண்டதா? இவ்வாறான போராட்டங்கள், ஜனநாயகக் கட்டமைப்பில் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக, எம்மைச் சிந்திக்க வைக்கின்றன என, நான் வாதிடுகிறேன்.  

இந்த ரயில்வே வேலைநிறுத்தமென்பது, இயல்புப் பிறழ்வு கிடையாது. கடந்த சில ஆண்டுகளாகவே, கல்வியைத் தனியார் மயப்படுத்துவதற்கு எதிரான மாணவர் சங்கங்களின் போராட்டங்கள், உயர் ஊதியத்துக்காகப் பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் போராட்டங்கள், டெலிகொம் ஊழியர்களின் நிரந்தர வேலைக்கான போராட்டங்கள் என, அதிகரித்துவரும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.  

இவ்வாறான வேலைநிறுத்தங்களின் போதும் போராட்டங்களின் போதும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு என்னவெனில், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக, ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் எச்சங்கள் மேற்கொள்ளும் முயற்சி என்பதேயாகும். ஆனால், இப்போராட்டங்களின் விரிவான தன்மை, வேறுபாடான தன்மை ஆகியன, இந்த வாதத்தைப் பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ள வைப்பதில்லை. மாறாக இவை, எமது பொருளாதாரக் கொள்கைகள், அம்மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி ஆராயவில்லை என்பதையும் மோசமடையும் பொருளாதார நிலைமையைப் பற்றிப் பார்க்கவில்லை என்பதையும் காட்டுகின்றன.  

தொழிற்சங்கங்கள்  

வரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது, ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும், ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்க ஊதியங்களையும் பணியாற்றும் சூழலையும் பெற்றுக் கொள்வதில், தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. தொழிலாளர்களைச் சுரண்டுவதில் தங்கியுள்ள முதலாளித்துவக் கட்டமைப்பில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு மேலதிகமாக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில், தொழிற்சங்கங்கள் மத்திய இடத்தை வகிக்கின்றன. எங்களுடைய சொந்த வரலாற்றைப் பார்க்கும் போது, கொலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில், தொழிற்சங்கள் முன்னிலை வகித்தன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், குழுமச் சுதந்திரம் ஆகியவற்றில் அரசாங்கம் தலையிடாமல் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துதல் அவசியமானது. ஜனநாயக நாடுகளில் அடிக்கடி மீள ஏற்படும் ஒரு சவாலாக இது இருக்கும் நிலையில், இவ்வுரிமைகளை உறுதிப்படுத்துவதில், தொழிற்சங்கங்கள் முக்கியமானவையாக உள்ளன.  

தொழிற்சங்க இயக்கத்தின் பலமென்பது, அதனுடைய ஒழுங்கமைப்புப் பலத்தில் காணப்படும் நிலையில், கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொள்ளுதல் முக்கியமானது. தொழிற்சங்கங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை வெளிப்படுத்தும் சட்டங்கள், இறுக்கமாக்கப்பட்டுள்ளன; தொழிற்சங்கங்களுக்குப் பொறுப்பான தொழிலாளர் திணைக்களம், தொழில் வழங்குநோரின் திணைக்களமாகச் செயற்படுகிறது; நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் அல்லது பொதுவாக “மான்பவர்” தொழிலாளர்கள் என அழைக்கப்படும் வகையில் தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரிவு, இதற்கு முன்னரெப்போதுமில்லாத அளவுக்கு, பாதுகாப்பின்மையையும் சூழ்நிலைக் கைதிகளாகவும் மாற்றியுள்ளது. இதனால், தொழிற்சங்க நடவடிக்கையில் அவர்கள் பங்குபற்றுவது தடுக்கப்படுகிறது. இவ்வாறான கடினமான சூழலில் தான், ஊழியர்களை ஒழுங்குபடுத்தி, தொழில் வழங்குநோரிடம் பேரம்பேசுவதில், தொழிற்சங்கங்கள் ஈடுபடுகின்றன.  

தொழிலாளர்கள் மீதான தொழில் வழங்குநோரினதும் அரசினதும் தாக்குதல்கள், தொழிற்சங்கங்களுக்கான மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. இதனால், இறுதிக்கட்ட முயற்சியாக, வேலைநிறுத்தத்தை நடத்துதல் உள்ளிட்ட ஒருசில தெரிவுகளே, தொழிற்சங்கங்களுக்குக் காணப்படுகின்றன. தொழிற்சங்கங்களோடு பேரம்பேசுவதற்குத் தொழில் வழங்குநோரும் அரசும் முன்வராத போது, பொருளாதார நடவடிக்கைகளை இடைநிறுத்தும் நோக்கத்தில், தடங்கலை ஏற்படுத்துவது தான் வேலைநிறுத்தம். ஆனால் வேலைநிறுத்தங்கள், தொழிற்சங்கங்களுக்கும் அவர்களது தொழிலாளர் அங்கத்துவத்துக்கு ஆபத்தானவையும் கூட. வேலைநிறுத்தங்கள் போன்ற உச்சபட்சமான, இணைந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் போது, தொழிலாளர்களின் வேலைகள் பறிபோகக்கூடிய நிலைமை காணப்படுவதே இதற்கான காரணமாகும்.  

வேலைநிறுத்தங்கள் ஆரம்பிக்கப்படும் போது, தொழிற்சங்கங்களைச் சட்டபூர்வமற்றதாக்குதல், முடியுமானபோது அவற்றை நசுக்குதல் என, அரசாங்கம் பதிலளிக்கிறது. தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஊடகப் பிரசாரத்தால் உதவப்பட, பணியாளர்களுக்கு எதிராகப் பொதுமக்களின் எண்ணம் திரும்பும்வரை, முடிவெடுப்பதை அரசாங்கம் தாமதிக்கிறது, ஆனால் அதேநேரத்தில் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அச்சுறுத்துகிறது. இதன்காரணமாக, இயக்கத்தினதும் பிரகடனத்தினதும் இரு தரப்புகளுக்கும் -- ரயில்வே வேலைநிறுத்தத்தில் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் -- மக்களின் ஆதரவை வெல்வதற்கான கொள்கைப் போட்டியாக வேலைநிறுத்தங்கள் மாறுகின்றன.  

இந்தப் பின்னணியில், தொழிற்சங்க இயக்கம் முழுவதாக, தமது குறைபாடுகளை உணர வேண்டும். மேற்கத்தேய நாடுகள் என்றாலும் சரி, இலங்கை என்றாலும் சரி, பெண்களையும் ஏனைய விளிம்புநிலை மக்களையும், ஒழுங்குபடுத்தல் பணியிலும் தலைமைத்துவத்திலும், தொழிற்சங்கங்கள் உள்ளடக்கியிருக்கவில்லை. ஆகவே தொழிற்சங்கள், பெண் தொழிலாளர்களினதும் உத்தியோகபூர்வமற்ற பணியாளர்களினதும் கிராமிய மக்களின் வாழ்வாதாரங்களினதும் பிரச்சினைகள் பற்றிக் கவனஞ்செலுத்தும் வகையில், தொழிற்சங்கங்கள் தம்மை விரிவுபடுத்த வேண்டும்.மேலதிகமாக, தமது ஜனநாயகத் தூரநோக்கையும் பங்கையும் தொழிற்சங்கங்கள் மீளக்கைப்பற்ற வேண்டுமாயின், முற்றுமுழுதான தேசியவாதத்தையும் பெரும்பான்மைவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். இவை, எந்தவொரு சமூகத்துக்கும் நச்சாகும்.  

அரசுடனான மோதல்  

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வேலைநிறுத்தங்கள், அரசுடன் மோதுவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அரச உரிமைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைத் தனிமைப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகளால் விளைந்த ஒரு நிலைமை இதுவாகும். அரச உரிமைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துமாறு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளால் குறிப்பிடத்தக்க அழுத்தம் வழங்கப்படுவதோடு, அரச கொள்கைகள் தற்போது, தனியார்மயப்படுத்தலை மேற்கொள்ள முயல்கின்றன.  

ரயில்வே வேலைநிறுத்தத்தின் பின்புலமும், அவ்வாறான அரச உரிமைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைப் பகுதியளவிலோ அல்லது முழுமையான அளவிலோ தனியார்மயப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும்.  

வேலைநிறுத்தக் காலத்தில், ரயில்வேயை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் முரண்நகை என்னவெனில், அவ்வாறான ஒரு சேவையைத் தனியார்மயப்படுத்த, அரசாங்கம் ஏன் சிந்திக்கும் என்பது தான்.  

அதேபோல், அரசாங்கமும் அதன் மேல்தட்டுவர்க்க பிரசாரக்குழுவினரும், வேலைநிறுத்தங்களால் -- ரயில்வே வேலைநிறுத்தம் போன்ற போக்குவரத்துச் சம்பந்தமானவை -- உழைக்கும் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர். ஆனால் அதேநேரத்தில், பொதுமக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் வகையில், அரச சேவைகளைத் தனியார்மயப்படுத்தவும் முயல்கின்றனர். இவ்வாறான முரண்பாடுகள், பணியாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் மக்களுக்கான சேவைகளையும் வழங்குவதிலும், அரசாங்கத்தின் பக்கத்தில் ஒன்று சொல்லி இன்னொன்றைச் செய்யும் பழக்கத்தையும் தூரநோக்கற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.  

அவ்வாறான முரண்நிலைமைகள், சில தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளிலும் காணப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழிற்சங்க உரிமைகளின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், மிகப்பெரிய தனியார் வைத்திய சாலைகளிலும் தனியார் கிளினிக்குகளிலும் வைத்தியர்கள் பணியாற்றும் செயற்பாடு தொடர்பில் அர்ப்பணிப்புடனேயே காணப்படுகிறது. அவ்வாறான வகையிலான தனியார் சுகாதாரத் தொழிற்றுறையின் வளர்ச்சி, பொதுமக்களுக்கான இலவச சுகாதாரத்துறை என்பதைச் சிறுமைப்படுத்துகிறது.  

அரச கொள்கைகள் தொடர்பாக, அண்மைக்காலத்தில் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியன அதிகரித்திருக்கின்றமைக்கு, இன்னொரு காரணமும் உண்டு. பிரச்சினைமிகுந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாத்திரமன்றி, நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்புகளால், பயன்தரக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

ஒன்றிணைந்த எதிரணி, முழுமையாக சந்தர்ப்பவாதத்துடன் செயற்படும் நிலையில், அரசாங்கத்தின் மீது குறைகூறுவதிலேயே கவனஞ்செலுத்துகிறது. உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொருளாதார விடயங்களில் உறங்குவது போன்றே காணப்படுவதுடன், தொழிலாளர்களின் விடயத்தில், அரசாங்கத்தின் பக்கமே சாய்ந்துள்ளது.  

ஆகவே, பொருள்மிகுந்த விவாதமொன்றோ அல்லது பிரச்சினைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது மாற்றுக் கருத்துகளோ இல்லாமை, தொழிற்சங்கங்களும் மக்கள் இயக்கங்களும், வேறு வழியின்றி, வேலைநிறுத்தங்கள் மூலமாகவும் போராட்டங்கள் மூலமாகவும், தமது பிரச்சினைகளை எடுத்துக்காட்டத் தள்ளப்பட்டுள்ளன. 

அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர். இந்தப் பின்னணியில், கண்ணீர்ப் புகை வீசுதல்கள், பொலிஸாரிந் -- சில வேளைகளில் இராணுவத்தினரின் -- துணையோடு போராட்டங்களைக் கலைத்தல் உள்ளிட்ட வன்முறையை நோக்கி அரசாங்கம் செயற்படுகிறது.  

முதலாளித்துவச் சுரண்டல்  

எமது நாட்டில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள வேலைநிறுத்தங்கள், தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முரண்பாடுகளாகவே, பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், பூகோளரீதியான நீண்டகால வரலாற்றில் வேலைநிறுத்தங்கள் என்பன, முதலாளித்துவத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டின் கீழுள்ள பலமுள்ள செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது.  

தொழிலாளர்களினதும் தொழிற்சங்கங்களினதும் வரலாறு தொடர்பான, அண்மைக்காலத்தில் மிகவும் ஆழமான எழுத்துகளின் ஒன்றாக, பெவெர்லி சில்வர் எழுதிய, “தொழிலாளர் சக்திகள்: 1870இன் பின்னர் தொழிலாளர்களின் இயக்கங்களும் பூகோளமயமாக்கலும்” (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2003) என்ற நூல் காணப்படுகிறது. சில்வரும் அவரோடு இணைந்த மிகப்பெரிய ஆய்வு அணியும், 1879 தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 168 நாடுகளில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள், தொழிற்சாலை முற்றுகைகள், உணவுக் கிளர்ச்சிகள் ஆகியவற்றை, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆராய்ந்தனர்.  

உலகில் பல்வேறு காலப்பகுதிகளில், முதலாளித்துவத்தின் சுரண்டல் அதிகரிக்க அதிகரிக்க, தொழிலாளர் போராட்டங்களும் அதிகரித்தன. வேலைநிறுத்தத்தின் மீடிறன் அதிகரிக்கின்றமைக்கு, முதலாளித்துவத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும் முரண்நிலைகளும் அதிகரிக்கின்றமை, பிரதான காரணமாக உள்ளது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

இலங்கையில் எமது போராட்டங்களின் பின்னணியை அறிவதற்கு, தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்பான அவ்வாறான சர்வதேச ஆராய்ச்சிகள், எமக்குக் கற்பிப்பனவாக இருக்க வேண்டும். அவ்வாறெனில், வேலைநிறுத்தங்களை வெறுமனே அரசியல் செயற்பாடாகவோ அல்லது அரசுடன் முரண்படுவதாகவோ மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல், சுரண்டலின் அதிகரிப்பு, சந்தேகத்துக்கிடமான வேலைவாய்ப்பு, உடைமைகள் பறிக்கப்படுதல் ஆகியவற்றின் வரலாற்றுரீதியான விடயங்களின் வெளிப்பாடே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட காரணங்களே, எமது மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைக் காட்டுகின்றன.  

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வேலைநிறுத்தங்களால் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல் தொடர்பாக, மேல்தட்டு வர்க்கத்தினரும் மத்திய வர்க்கத்தில் சில தரப்பினரும் எவ்வளவு தான் முறைப்பாடு செய்தாலும், சமத்துவமானதும் சமூகரீதியாக நியாயமானதுமான பொருளாதார மாற்றுக் கட்டமைப்பை நாம் கண்டுபிடித்து, அதில் முதலிடுவதற்கு நாம் முயன்றாலொழியே, இவ்வாறான தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.  

தொழிற்சங்களினதும் சமூக நீதிக்காக அர்ப்பணிப்புடன் காணப்படுவோர் மீதும் காணப்படுகின்ற மிகப்பெரிய பொறுப்பு என்னவென்றால், தொழிலாளர் போராட்டங்களை, பொருளாதார ஜனநாயகம் நோக்கிக் கொண்டுசெல்வது தான்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .