2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களுக்கு அவசியமா?

மொஹமட் பாதுஷா   / 2018 மே 18 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி, தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தோரணையில் முன்வைக்கப்படும் கருத்துகள்,  நிகழ்காலத்தில் வலுப்பெற்றிருக்கின்றன.   

அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொண்டு, அந்த அதிகாரக் குறைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் கோரி வருகின்றனர். இது தொடர்பான பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் ம.வி.முன்னணி முன்வைத்திருக்கின்றது.   

‘20ஆவது திருத்தம்’ என்ற பெயரில் கொண்டு வரப்படும் அரசமைப்புத் திருத்த முயற்சிகளுக்கு, இராசி இல்லை என்று கூறலாம். ஏனென்றால், இதற்கு முன்னர் இரு தடவைகள், 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு வெற்றியளிக்காமல் போயிருக்கின்றது.   

2015ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, அரசமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. அந்த அடிப்படையில் புதிய தேர்தல் முறைமை, எல்லை மீள்நிர்ணய விடயங்களை உள்ளடக்கியதாக, 20ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்த களச்சூழலில் அது வெற்றிபெறவில்லை.   

அதன் பின்னர், கடந்த வருடம் மீண்டும் 20ஆவது திருத்தம் வந்தது. ‘நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடாத்துதல்’ என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி, அரசாங்கம் இந்தத் திருத்த யோசனையைக் கொண்டு வந்தது. ஆனால், பல உட்கிடையான நோக்கங்களை அது கொண்டிருப்பது அப்பலமாகியதால், அதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பிற்போட்டு, அந்தக் காலப்பகுதியில் மாகாண சபைகளின் அதிகாரம் எனும் ‘மூக்கணாங்கயிற்றை’ கொழும்பில் வைத்துக்கொள்ளும் ஒரு சூட்சுமம் இருப்பதை, மாகாண சபைகள் பல முன்னுணர்ந்து கொண்டதால், அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.   

வட மாகாண சபை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரித்தது. ஆனால், கிழக்கு மாகாண சபை ஏன் எதற்கு என்று விளங்காமலேயே ஒப்புதல் ஆதரவை வழங்கியது. எவ்வாறிருப்பினும், உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கு அமைவாக அதைக் கைவிட வேண்டியதாயிற்று.   

இப்போது மீண்டும், அரசமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்வதற்காக, 20ஆவது திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை விடயத்தில், பெரும்பாலான பெருந்தேசிய அரசியல் சக்திகளும் கணிசமான சிங்கள மக்களும் தெளிவுடன் இருக்கின்றனர். 

நிறைவேற்று அதிகாரம் இல்லாது போனால், அதன்மூலம் தமக்கு எவ்வாறான வரப்பிரசாதங்கள் கிடைக்கும் என்பதைத் தமிழ் மக்களுக்கு, அவர்களுடைய அரசியல் தலைமைகள் சொல்லிப் புரிய வைத்திருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம்களின் நிலைமை என்ன?  

இன்றைய நிலைவரப்படி பௌத்த உயர்பீடங்கள், முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்கலாகச் சிறு கட்சிகள் இதை எதிர்க்கும் என்றே தெரிகின்றது. இருக்கின்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை ஒன்றிணைந்த எதிரணி விரும்பும் என்றாலும், அதனூடாகப் பிரதமரின் அதிகாரம் அதிகரிப்பதை அவர்கள் விரும்பினால் மட்டுமே ஆதரவளிப்பர். இதே காரணத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பாலும் ஆதரவளிப்பர்.   

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் என்பது, அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அடிப்படையாக அமையும் என்ற நம்பிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெகுவாக இதனை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.   

முஸ்லிம் கட்சிகள் வெளியிடத் தொடங்கியிக்கும் கருத்துகளைப் பார்க்கின்ற போது, இதை எதிர்ப்பார்கள் என்றே தோன்றுகின்றது. பெரும்பான்மைக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகமாகத் தத்தமது கட்சிகளின் நிலைப்பாட்டையே எடுப்பார்கள். இது பற்றி அரச உயர்மட்டத்தினருடன் பேசுவதற்கு பிரதான இரு முஸ்லிம் கட்சிகள் தீமானித்திருப்பதாக அறிய முடிகின்றது.   

ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றி, முஸ்லிம் கட்சிகள் கொண்டுள்ள இன்றைய நிலைப்பாட்டில் கடைசி வரையும் அவர்கள் உறுதியுடன் இருப்பார்களா அல்லது ஏதோ ஒரு புள்ளியில் வழக்கம் போல ‘சமாளிக்கப்பட்டு’ விடுவார்களா என்பதே நம்முன்னுள்ள ‘மில்லியன் டொலர்’ கேள்வியாகும்.  

கட்சித் தலைவர்களே, தம்முடைய அதிகாரத்தை மென்மேலும் அதிகரிக்க நினைக்கின்ற ஒரு தேசத்தின் ஜனாதிபதியானவர், தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க முன்வருதல் என்பது அபூர்வமானது.   

அதேபோல, பல தசாப்தங்களாக நாம் பேசி வருகின்ற, தமிழர்களின் தாரக மந்திரம்போல இருக்கின்ற ‘அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை’ ஓரளவுக்கேனும் நடைமுறைப்படுத்த இது வழிவகுக்கலாம். அந்த அடிப்படையில் இது வரவேற்கத்தக்க முயற்சியாகவே தோன்றும். ஆனால், அரசியலில் இலாப-நட்டக் கணக்கு முக்கியம் என்ற அடிப்படையில், நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவதால் தமக்கு அனுகூலம் கிடைக்குமா? இனப் பிரச்சினைத் தீர்வு, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்றவற்றின் பின்னணியில் நிறைவேற்று அதிகார நீக்கம் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முஸ்லிம்கள் தெளிவு பெற வேண்டியுள்ளது.  

அசுர ஆற்றல்களைக் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்துச் சொல்கின்றவர்கள்,   ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்றெல்லாவற்றையும் இதன்மூலம் செய்யலாம்’ என்பார்கள்.   

இருப்பினும், இந்த நிறைவேற்று அதிகாரம் கடந்த காலங்களில், தமிழ் மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றும் விடயத்தில் உயர்ந்தபட்சமாக உபயோகிக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருப்பதே நல்லது என்று அவர்கள் நினைக்கும்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்வதும் கடினம். அடுத்த பக்கமாக, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத, மதவாத ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் இனக்கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்ற போதும் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாவது, முஸ்லிம்களின் நலனுக்காக பாவிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஆனபோதும், இந்த அதிகாரமானது அத்திபூத்தாற்போல் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு உதவியிருக்கின்றது என்று கூற முடியும்.   

சுருக்கமாகக் கூறினால், முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜனாதிபதி நினைத்தால், ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, நல்ல தீர்மானமொன்றை எடுக்க முடியும் என்பதே, இவ்வதிகாரம் குறித்த இலகுவான விளக்கமாகும்.   

20ஆவது திருத்தத்தின் மூலம், நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது என்பது உடனடிச் சாத்தியமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே 19ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்கள் சிலவற்றைக் குறைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கமாட்டார் என்று கருதவும் இடமில்லை. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நெருங்கிவரும் கட்டத்திலேயே அவர் அதைச் செய்தாலும் செய்வார்.   

நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களுக்குச் சார்பாக, பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இல்லை என்றால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவது, அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வழியமைக்கும் என்றால், முஸ்லிம்கள் ஏன் அதை எதிர்க்க வேண்டும் என்று, மேலோட்டமாக சிந்திக்கின்ற முஸ்லிம் மக்கள் கேட்கலாம்.   

இலங்கை அரசமைப்பின் சரத்து 4(ஏ) ஆனது, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியிருக்கின்றது. அரசமைப்பின் 13ஆவது திருத்தமானது, மறைமுகமாக அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியை மாகாணங்களின் ஆளுநருக்கு வழங்கியது.   

ஆனால், 13ஆவது திருத்தமானது சரியாக நடைமுறைப்படுத்தப்படாதது ஒருபுறமிருக்க, மக்களின் ஆணையின்றி இவ்வாறு அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டதாக அப்போது சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே மாகாண ஆளுநர்கள் இருக்கின்றார்கள். ஜனாதிபதியிடமிருந்தே நிறைவேற்று அதிகாரத்தை மாகாண ஆளுநர்கள் பெறுகின்றார்கள் என்று, அப்போது வியாக்கியானம் கொடுக்கப்பட்டது நினைவுகொள்ளத் தக்கது. இப்போது நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டால், அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி, எதையாவது முஸ்லிம்களுக்கு ஜனாதிபதியால் செய்ய முடியுமாக இருந்தால், அதைச் செய்ய முடியாத ஒரு நிலைமை உருவாகும்.   

அதேபோல், மாகாண ஆளுநர்களுக்கு அதிகரித்த அதிகாரம் போய்ச் சேரும். இந்த அடிப்படையில் நோக்கினால், அதிகாரம் எங்கெல்லாம் பகிரப்படுகின்றதோ, அந்த ஆளுகை மையங்களில் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் இருந்தாலேயே, இந்தப் பகிர்வின் மூலம், அனுகூலங்களை அனுபவிக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் நிலைமைகள் இன்னும் மோசமடையும் என்பது, அவர்களுடைய நிலைப்பாடாகும்.  

தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்துக்கு அர்த்தம் கொடுக்கப்பட வேண்டும். அந்தவகையில், அவர்கள் கோருகின்ற நியாயமான விடயங்களை உள்ளடக்கிய இனப் பிரச்சினைத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.  

 நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவதால், நாடு உடனே துண்டாடப்படும் என்ற கதைகளை நம்பி, எடுத்த எடுப்பில் முஸ்லிம்கள் எதிர்க்கத் தேவையில்லை. இனப்பிரச்சினைத் தீர்வுப் பொதியில் சமஷ்டி, அதிகாரப் பகிர்வுக்கும் குறுக்கே நிற்பதும் கூடாது. ஆனால், இதன் சாதக பாதகங்களை நன்றாக விளங்கிக் கொண்டு ஆதரிக்க அல்லது எதிர்க்க வேண்டும். அதாவது, முஸ்லிம்களுக்கு இது பாதகமாக அமையும் என்றால் அதை எதிர்ப்பதைத் தவிர வேறு வழிகளும் கிடையாது.   

உதாரணமாக,  நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அதன்படி, கணிசமான அதிகாரங்கள் மாகாணங்களுக்கு (ஆளுநர்களுக்கு) நேரடியாகப் பகிரப்படுகின்றது என எடுத்துக் கொள்வோம். சமகாலத்தில், புதிய தேர்தல் முறைமையின் கீழ், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று, மிகக் குறைந்த முஸ்லிம் எம்.பிக்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள் எனவும் கருதுவோம்.   

இவ்வாறான ஒரு சூழல் ஏற்படும் போது, கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களிடம் இருந்தால் பரவாயில்லை. ஆனால், தமிழ்த் தேசியம் கோருவதன்படி வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுமாக இருந்தால், அங்கு பகிரப்படும் அதிகாரம், இரண்டு சமூகங்களையும் இரண்டு கண்கள் போல பார்க்கும் என்பது சந்தேகமே.   

மாறாக, முஸ்லிம்கள் எது நடக்கக்கூடாது என்று நினைத்தார்களோ, அந்த மேலாதிக்க நிலைமையே ஏற்படலாம். இதேபோன்று, சிறுபான்மையினரின் அதிகாரத்தில் இல்லாத ஏனைய மாகாணங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்களும் மேற்கொள்ளப்படலாம்.   

இக்காலப் பகுதியில், முஸ்லிம்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறைவடைந்து, அதனூடாக இருந்த சொற்ப அதிகாரமும் இல்லாத ஒரு சூழலில், முஸ்லிம்களின் நலனுக்காக, நாடாளுமன்றத்தில் போராடி வெற்றி பெறவும் முடியாது. ‘வேறு வழியில்லை’ என்று நிறைவேற்று அதிகாரத்திடம் ஓடிச்சென்று, காலில் விழுந்து, ஒரு சிறிய ஒத்துழைப்பையாவது பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாது போய்விடும்.   

ஆனால், இதுவெல்லாம் உடனடியாக நடக்கும் என்றோ, நாம் அனுமானிப்பது போலவே நடந்தேறும் என்றோ சொல்வதற்கில்லை. இப்படியே சொல்லிச் சொல்லிக் காலத்தை இழுத்தடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன. ஆனால், அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை முன்னுணர்ந்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை, அரசியல்வாதிகள் எடுக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் வேண்டுதலாகும்.   

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையால், கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளும் வரப்பிரசாதங்களும் முஸ்லிம்களுக்கு கிடைத்து விட்டன என்றோ, இனிமேல் கிடைத்துவிடும் என்றோ கருத முடியாது.   

அவ்வாறே, அதிகாரப் பகிர்வு என்பது, முஸ்லிம்களுக்கு முற்றுமுழுதாகப் பாதகமானது என்றோ, அதனால் பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றோ கூறுவதற்கில்லை. நிறைவேற்று அதிகாரத்தை, நியாயமான அடிப்படையில் நீக்கும் யாப்பு ஏற்பாட்டை மேற்கொண்டால், பாதிப்புகள் அவ்வளவு ஏற்படாது என்று கருதுவோரும் உள்ளனர்.   

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களின் கடைசி அடைக்கலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்து கொண்டிருக்கின்றார். அதாவது, நாடாளுமன்றப் பலமோ, வேறு அதிகாரங்களோ கைகொடுக்காத ஒரு சூழலில், ஜனாதிபதியை அணுகி, அவருக்கிருக்கும் அதிகாரத்தின் மூலம், எதையாவது சாதிக்க ஒரு வாய்ப்பிருக்கின்றது. 20ஆவது திருத்தத்தின் ஊடாக, அது இல்லாது போகலாம் என்பதையும் கவனிக்க வேண்டும்.   

அந்த ‘அதிகாரம்’ எங்கெங்கு பகிரப்படுகின்றதோ அவ்வாறான இடங்களில், முஸ்லிம்களின் அதிகாரம் நாடாளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் போது, புதிய தேர்தல் முறைமையில் நாடாளுமன்ற உறுப்புரிமை பலமும் குறைவடைகின்ற போது, நாம் யாரின் உதவி ஒத்தாசையை நாட முடியும் என்று இப்போதே யோசிக்க வேண்டும்.   

நிறைவேற்று அதிகாரத்தின் நன்மை, தீமைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தி, மக்களின் அபிப்பிராயங்களுக்கு அமைவாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது நிலைமாறாத நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .