2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பதவிகளை மீள பொறுப்பேற்றல்

மொஹமட் பாதுஷா   / 2019 ஜூலை 19 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பதவி என்பது, தோளில் கிடக்கும் துண்டு; கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி. பதவிக்காக, கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது” என்று அறிஞர் அண்ணா சொன்னார்.  முஸ்லிம் அரசியலில் இது தலைகீழாகவே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர், கொள்கைக்காகப் பதவியைத் துறக்க, முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வந்த ஓர் அபூர்வ சம்பவம் நடந்தது.   

இது, நடிப்பா, நாடகமா என்ற விவாதங்களுக்கு அப்பால், இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட்டமை, பெருந்தேசியத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு செய்தியைச் சொன்னது.   
இனவாதக் கடும்போக்குச் சக்திகளுக்கு, உறைக்கும்படி ஒரு குட்டுப் போட்டது. அதுமட்டுமன்றி, பௌத்தபீடங்களுக்கு கூட, ஒரு புதுவித ஞானத்தைப் போதித்தது என்றும் கூறலாம்.   

சஹ்ரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட படுமோசமானதும் ஈவிரக்கமற்றதும் இஸ்லாத்துக்கு விரோதமானதுமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கை முஸ்லிம்கள் மீது, இனத்துவ வன்முறைகள், மத ரீதியான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.   

இந்தச் சூழலில் அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமூகத்துக்காக என்று சொல்லி, தமது பதவிகளைத் துறந்தனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ஏற்கெனவே இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றுவிட்டதைப் போல, மீதமுள்ள ஏழு பேரும், மீண்டும் பதவியேற்க அவதிப்படுவது எதற்காக என்றுதான் தெரியவில்லை.   

இத்தனை காலமும், கொழுத்த அமைச்சுப் பதவிகளையும் அரசாங்கத்தில் பலமான வகிபாகத்தையும் முஸ்லிம் சமூகம் வகித்து வந்தது. ஆனால், அந்தப் பதவிகளால், முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவோ, இனவாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவோ, அப்பதவிகள் உதவவில்லை.   

இப்படிப்பட்ட, ஒன்றுக்கும் உதவாத பதவிகளை வைத்துக் கொண்டு இருப்பதில், எவ்வித அர்த்தமும் இல்லை என்ற தோரணையிலேயே, முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்தனர். எனவே, இப்போது அப்பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வதால் மட்டும் என்ன நடந்து விடப் போகின்றது?   

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், ஒட்டுமொத்த 21 இலட்ச முஸ்லிம் மக்களையும் குற்றவாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிப்பதற்குக் கடும்போக்கு சக்திகள் கடும் பிரயத்தனங்களை எடுத்தன.   

இதன் ஓர் அங்கமாக, ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குப் பகிரங்கமாகவே இனவாத முத்திரை குத்தப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகள் மீது, கடும்போக்குச் சக்திகள் அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், முதல் மூவரும், தமது பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும் கோரின.   

உருப்படியான ஆதாரங்கள் எதனையும் சட்டத்தின் முன் சமர்ப்பித்து, குற்றவாளியென நிரூபிக்காமலேயே, அடிப்படையற்றதும்  ஆதாரமற்றதுமான கதைகளைக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையில் முடிச்சுப் போடப்பட்டது.  

டொக்டர் ஷாபியைக் கைது செய்து விட்டே, முறைப்பாடு செய்யுமாறு மக்களுக்கு அறிவித்ததைப் போல, முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக, முறைப்பாடு இருந்தால் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்ட புதினங்களும் நடந்தேறின.   

இலங்கையில் பயங்கரவாதத்தையும் இனவாதத்தையும் சமகாலத்தில் கட்டுப்படுத்த, எல்லோரும் அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய, ஓர் இக்கட்டான தருணத்தில், அதைச் செய்யாமல், அப்பாவி முஸ்லிம்களையும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளாகக் காண்பிப்பதற்கும் அதனூடாக முஸ்லிம் சமூகத்தின் மீது, ஓர் உளவியல் யுத்தத்தை நடத்தவுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை, உணராத அளவுக்கு முஸ்லிம்கள் அறிவிலிகள் அல்லர்.   

அதேபோன்று, இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியல், இந்தப் பயங்கரவாத, இனவாத, கடும்போக்குவாத சக்திகளை ஆட்டுவிக்கின்ற நூல்களைக் கையில் வைத்திருப்பவர்கள் யார் என்பதும் நாடறிந்த இரகசியம்தான். பிச்சைக்காரனின் புண்ணைப் போல, இந்த நாட்டை வைத்திருந்து, தேர்தல் வெற்றிகளையும் ஆட்சியதிகாரங்களையும் பெற நினைக்கின்ற தேசப்பற்றாளர்கள், இதற்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சொல்லாமல் விட முடியாது.   

இதில் ஒர் அத்தியாயமாகவே, காவி அரசியலைக் கருத முடிகின்றது. இனவாதம் பேசினாலும் சண்டித்தனம் காட்டினாலும் அவர்கள் பௌத்த துறவிகள் என்பதற்காக, அவர்களைப் பொறுத்தருளுகின்ற மனநிலையும் நாட்டின் எல்லா விவகாரங்களிலும் கடும்போக்குப் பிக்குகள் மூக்கை நுழைக்கின்ற செயற்பாடுகளும் பெருந்தேசியக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான புதிய உபாய மார்க்கங்களன்றி வேறொன்றுமில்லை.   

ஞானசாரர் போன்ற தேரர்களின் வரிசையில், இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். தம்மால் செய்ய முடியாததை, காவி உடைக்கு இருக்கின்ற கௌரவத்தைத் துஷ்பிரயோகம் செய்தேனும் சாதிப்பதற்குப் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் நினைக்கின்றார்கள். அந்த வகையிலேயே, ரத்தன தேரரின் உண்ணாவிரதம், அதன் தொடரான நிகழ்வுகளை நோக்க வேண்டி இருக்கின்றது.   

முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரைப் பதவி விலகுமாறு கோரி, அத்துரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும், இவ்வாறு புதுப்புது கோஷங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, மக்கள் ஆதரவைப் பெற முயற்சிப்பவர் என்று கருதப்படுகின்ற ரத்தன தேரரின் இந்த நடவடிக்கையை, இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அரசாங்கமோ, பௌத்த பீடங்களோ பார்க்கவில்லை.   முஸ்லிம்களுக்குப் புத்தி கூற முனைகின்ற பௌத்த பீடங்கள், ரத்தன தேரருக்கு, ‘இது இன ஐக்கியத்துக்குக் குந்தகம் விளைவிக்கும்’ என்று அறிவுரை கூறவில்லை. மாறாக, ஒருவகையான திரைமறைவு ஆதரவையே வழங்கியிருந்தன.   

முன்னதாகவே, ஆளுநர் பதவிகளை வகித்த ஹிஸ்புல்லாவும் அஸாத் சாலியும் இராஜினாமாச் செய்திருக்க, அமைச்சு, பிரதியமைச்சு, இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்த ஒன்பது முஸ்லிம் எம்.பிகள், ரத்தன தேரரின் உண்ணாவிரதத்தையடுத்து, தமது பதவிகளை இராஜினாமாச் செய்து, தமது அமைச்சைத் தூக்கி வீசினார்கள்.   

மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை இராஜினாமாச் செய்யுமாறு கடும்போக்காளர்கள் பிரசாரம் செய்த போது, மூன்று தெரிவுகள் அவர்கள் முன்னால் இருந்தன. முதலாவது, காவி அரசியலைக் கண்டு கொள்ளாமல் பதவியில் நீடித்திருப்பது; இரண்டாவது, குறிப்பிட்ட மூவரும் பதவி விலகுவது; மூன்றாவது, எல்லோரும் பதவியை இராஜினாமாச் செய்வது என்பவையே அத் தெரிவுகள் எனக் கூறலாம். இதில், முதல் இரண்டு தெரிவுகளையும் எடுக்காமல், மூன்றாவது தெரிவின்படியே முஸ்லிம் அரசியல்வாதிகள் முடிவெடுத்தனர்.   

உண்மையில், இப்போது பதவி விலகாவிட்டால், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கலாம் என்று கருதியே, இராஜினாமாச் செய்ததாகக் கூறுகின்றனர்.   

ஆனால் பொதுவெளியில், அவர்கள் காவி உடைக்குப் பயந்து பதவி விலகியதான தோற்றப்பாடே ஏற்பட்டது. இதனால், முஸ்லிம்கள் இனவாத சக்திகளுக்கு அடிபணிந்து விட்டார்கள் என்ற பிரம்மை ஏற்பட்டது மட்டுமன்றி, தேரர்கள் உண்ணாவிரதம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பிழையான முன்மாதிரியை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தது எனலாம்.   

முஸ்லிம் அரசியல்வாதிகள், பதவிகளை இராஜினாமாச் செய்வதற்கு இதற்கு முன்னர் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அளுத்கம, பேருவளை, அம்பாறை வன்முறைகளின் போது, திகணவில் முஸ்லிம்கள் மீது இனவன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி, வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் உயிரும் உடமைகளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட போது, பாதுகாப்புப் படையினர் வாழாவிருந்த போது, அரசாங்கம் பிடில் வாசித்த போது...... முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருக்க வேண்டும்.   

பதவிகளைத் தூக்கியெறிவது மட்டுமன்றி, ஆளும்தரப்புக்கான ஆதரவையும் வாபஸ்பெற்றுக் கொண்டு, ஒரு நடுநிலை அணியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்க வேண்டும். சுரணையுள்ள சமூகத்தின் அரசியல்வாதிகளுக்கு அதுதான் அழகு! அதைவிடுத்து, காவியுடை தரித்தவர்கள் கோரும்வரை காத்திருந்தது போல, பதவியில் தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.   

எனவே, இந்த இராஜினாமா நூறு சதவீதம் சமூகம் சார்ந்த முடிவு என்பதை, நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், குறைந்தது 75 சதவீதமாவது முஸ்லிம் சமூகத்துக்காகவே முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகினார்கள் என்பதை நேரிய மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

 தமது அரசியல்வாதிகளின், நல்ல முன்மாதிரிகளைப் பாராட்டுகின்ற சமூகத்துக்கே, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் உரிமை இருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.   

அந்த வகையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததும், ஒன்பதுபேர் அதிரடியாகத் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தமையும் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம்கள் பதவிக்காக எதையும் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்ற, ஆட்சியாளர்களின் எண்ணத்தில், பாரிய அடியாக இது அமைந்தது எனலாம்.   

எனவே, இதற்காக முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைப் பாராட்டுவதுடன், இதனால் முஸ்லிம்களுக்கு ஒரு தைரியமும் ஏற்பட்டது. தமது பிரதிநிதிகளுக்குக் கொஞ்சமாவது சமூக அக்கறை இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது.   

இந்த இராஜினாமாவை அரசாங்கமோ, கடும்போக்குச் சக்திகளோ எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே, இது பெருந்தேசியத்துக்குப் பெரும் அடியாக விழுந்தது மட்டுமன்றி, பௌத்த பீடங்களே ஒருகணம் அதிர்ந்து போயின. முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகத் தேரர் ஒருவர் காரணமாக இருந்தது, பௌத்த மதத்துக்கு இழுக்காக அமைந்து விடும் என்று, சிங்கள முற்போக்குச் சக்திகளே சுட்டிக்காட்டின.   

இது குறித்து, பௌத்த பீடங்களுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது என்பதை, ‘முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளை பொறுப்பேற்க வேண்டும்’ என்று, பௌத்த பீடம் விடுத்த கோரிக்கையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.   

பௌத்த பீடங்களும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் கோரிக்கை விடுத்த போதும், தம்மீதான குற்றச்சாட்டுகளும் முஸ்லிம் சமூகம் நிகழ்காலத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்படாதவரை, தாம் பதவிகளைப் பொறுப்பேற்பதில்லை என்று சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அறிவித்தனர். இவ்வறிவிப்பு, அமைச்சர்களுக்குப் பின்னால் இணைப்பதிகாரி, பணிப்பாளர் பதவிகளை அனுபவிக்கும் பேர்வழிகளுக்கு, வயிற்றில் புளியைக் கரைத்தாலும், சாதாரண முஸ்லிம் மக்களின் மனங்களில் பாலை வார்த்தது.   

இந்தச் செயற்பாடு, முஸ்லிம் அரசியலின் ஒற்றுமையையும் சமூக சிந்தனையையும் பிற தரப்பினருக்கு வெளிப்படுத்தியது மட்டுமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து உண்மையைக் கண்டறிவதற்கும் இடமளித்துக் கொடுத்தது. இது முஸ்லிம் அரசியலின் மீதான அனுதாபத்தை ஏற்படுத்திய சமகாலத்தில், பௌத்த கடும்போக்கு சக்திகளின் உண்மை முகத்தை உலகுக்குத் தோலுரித்துக் காட்டியது.   

இதற்கிடையில், முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இயக்கத்தில் அரங்கேறிய ஒரு நாடகம் என்று மறுதரப்பினர் குறிப்பிட்டனர்.  ஆயினும், இதில் சமூக அக்கறை கணிசமாக இருக்கின்றது என்றும் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, முஸ்லிம் எம்.பிக்கள் பதவிகளை நாட மாட்டார்கள் என்றும் பெருமளவான முஸ்லிம்கள் நம்பினர். இந்த நம்பிக்கையை முதலில் சிதைத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிமும் ஹலீமும் எனலாம்.  

முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை மய்யமாகக் கொண்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இராஜினாமாச் செய்தது பெரிய விடயமல்ல. பெரும்பான்மைக் கட்சியின் ஊடாக சிங்கள மக்களின் வாக்குளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கபீர் ஹாசிமும் ஹலீமும் இவ்விதம் பதவி விலகியமை பெரிய விடயமாகும். ஆனால், அவர்கள் இருவரும் இவ்வாறு பதவிகளை இப்போது மீள எடுக்கவில்லை என்றால், அடுத்த தேர்தலில் அவர்களது வெற்றி கூட நிச்சயமற்றதாகவே இருக்கும். எனவே, அவர்களின் முடிவில் ஒரு நியாயம் இருக்கின்றது.   

ஆனால், ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள், பதவிகளை ஏற்காமல் இருப்பதே, ஒப்பீட்டளவில் இலாபகரமானது என்றிருக்கின்ற சூழலில், பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளைப் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்ற செய்தி, என்னவோ போலிருக்கின்றது.   

பதவிகளைப் பொறுப்பேற்கத் தேவையில்லை என்பதே பொதுவான நிலைப்பாடு என்றாலும் கூட, சமகாலத்தில், பல்வேறு காரணங்களுக்காகப் பதவிகள், அதிகாரங்கள் நமக்குத் தேவை என்பதையும் சொல்லியாக வேண்டும்.   

முஸ்லிம்களிடம் அதிகாரம் இல்லையென்றால், எத்தனையோ நகர்வுகளைச் சிங்களப் பெருந்தேசியமும் தமிழ்த் தேசியமும் மிக இலகுவாகச் செய்து விடும். அப்படியான பல கைங்கரியங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.   

அதேபோன்று, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் பெருமளவுக்கு சோடிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிலரை, விடுதலை செய்யச் செய்தமை போன்ற சிலவற்றைச் செய்து முடிக்கவும் முடிந்தது என்றும் கூறலாம். எனவே, இந்த அடிப்படையில் பார்த்தால், பதவிகளை மீளப் பொறுப்பேற்பதற்கான காலம், நெருங்கி வருகின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.   

ஆனால், பதவிகளை எடுப்பதற்கும் ஏன் அவதியும் அவசரமும் படுகின்றார்கள் என்றுதான் தெரிவில்லை. இத்தனை வருடங்களாகப் இப்பதவிகளில் இருந்து கொண்டு சாதிக்க முடியாத எதனை, இந்த ஆட்சியின் கடைசிக் காலத்தில் பதவியில் இருந்தால் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றார்கள் என்பதும் புரியவில்லை.   

உண்மையில், இந்தப் பதவி விலகல், முஸ்லிம் சமூகத்துக்கானது என்று சொல்வது நிஜம் என்றால், அது குறுங்கால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமையக் கூடாது. மாறாக, முஸ்லிம்களின் பிரச்சினைகள், இனவாத நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்ததன் பின்னரே, பதவிகளை மீளப் பொறுப்பேற்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.    

முரண்பட்ட நிலைப்பாடுகள்

தமக்கு வழங்கப்பட்ட அமைச்சு, பிரதியமைச்சு, இராஜாங்க அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அப்பதவிகளைப் பொறுப்பேற்க இணக்கம் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் கூட, பதவியேற்புத் தொடர்பில் கடந்த சில தினங்களாக, அவர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.   

‘இதோ சத்தியப் பிரமாணம் செய்யப் போகின்றார்கள்’ என்று, ஒரு கதையும் “இல்லையில்லை நாம் பதவிகளை அவசரமாக எடுக்கப் போவதில்லை” என்று இன்னுமொரு கதையும் வெளிவந்து கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.   

தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், நிறைவேற்றப்படாத சூழலில், அரசாங்கத்தால் வீசப்படும் பதவிகளை பெற்றுக் கொள்வதால், இதுகால வரை செய்ய முடியாத எதையாவது மீதமிருக்கின்ற ஒருசில மாதங்களுக்குள் செய்து விட முடியும் என்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றார்களா? அப்படி அவர்கள் நினைப்பார்களாயின், அவர்களை விட அரசியல் முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  

முன்னாள் இராஜாங்க அமைச்சரான எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் அப்பதவியை பொறுப்பேற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார். பதவியை மீள எடுப்பதற்கு ஆவலுற்றிருந்த எம்.பிக்களுக்கு இது தர்மசங்கடத்தைத் தோற்றுவித்துள்ளது.   

குறிப்பாக, சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்ற, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு வகையான சிக்கலைத் தோற்றுவித்துள்ளது எனலாம். இந்தப் பின்னணியில், ஹக்கீம் - ஹரீஸ் முரண்பாடு வலுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறி, சிலர் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகின்றனர்.  

அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பது தொடர்பில், இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், “எமக்கு அவசரமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி ஒரு வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளார். அதாவது,“நாம் இந்தவாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம்; அடுத்த வாரமே பதவியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   

பதவியை எடுப்பது என்றால், எடுக்க வேண்டியதுதானே; அதற்கு ஏன் நல்லநாள் பார்க்க வேண்டும்? ஏன், இந்த ஒருவாரத்துக்கு இடையில் இவர்கள் எதையாவது சாதித்துக் காட்டப் போகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது.   

உண்மையில், பல அரசியல்வாதிகளுக்கு பதவிதான் எல்லாம். அமைச்சுப் பதவி இல்லையென்றால் அவர்களால் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இன்னும் சிலர் இருக்கின்ற காலத்திலாவது, எதையாவது ‘உழைத்துக்’ கொள்வோம் என்று நினைக்கின்றார்கள்.   

அந்த எண்ணங்களின் அடிப்படையிலேயே, பதவிகளை மீளப் பொறுப்பேற்பதற்கான இறுதி முடிவை சம்பந்தப்பட்டவர்கள் எடுப்பார்களே தவிர, மக்கள் மனங்களில் என்ன நினைத்திருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, அத்தீர்மானத்தை எடுக்கப் போவதில்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .