2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தான் பிரதமரின் துருக்கி விஜயம்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - ஜனகன் முத்துக்குமார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், துருக்கிக்கான தனது முதலாவது விஜயத்தை, சில நாள்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார். வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர்மட்டக் குழுவினருடன் மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது, ​​துருக்கியின் ஜனாதிபதியைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம், பிராந்திய மற்றும் சர்வதேச நிலைமைகள் தொடர்பான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார்.

பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள், மிகவும் சுமூகமாவை. இரு நாடுகளும் பிரகடனம் செய்யும் முன்னரேயே, வரலாற்று ரீதியாக இரு நாட்டு மக்களும், மிகவும் நெருக்கமான உறவைப் பேணியிருந்தனர். குறிப்பாக, துருக்கிய சுதந்திரப் போரின் போது, ​​வடகிழக்கு எல்லையில் இருந்த முஸ்லிம்கள், வீழ்ச்சியடைந்த ஒட்டோமான் பேரரசுக்கு நிதியுதவி அனுப்பியதும், துருக்கியக் குடியரசின் உருவாக்கம், பாகிஸ்தானின் சுதந்திரம் ஆகியவற்றால், பல தசாப்தங்களாக துருக்கியும் பாகிஸ்தானும், நேர்மறையான ஓர் உறவை அனுபவித்து வருகின்றன. மேலும், பாகிஸ்தானும் துருக்கியும், நெருக்கமான கலாசார, வரலாற்று, இராணுவ உறவுகளை அனுபவித்து வருகின்றன. அதேபோன்று, இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முற்படுவதால், ஆழமான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துகின்றன.

உண்மையில், துருக்கியும் பாகிஸ்தானும், பல சர்வதேச விவகாரங்களை முகம்கொள்வதில் ஒத்ததான கொள்கைகளைக் கொண்டுள்ளன. அவையிரண்டும், பனிப்போர் காலத்தின்போது ஐக்கிய அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தன என்பது மட்டுமன்றி, CTO (மத்திய ஒப்பந்த அமைப்பு), RDA (பிராந்திய அபிவிருத்திக் கூட்டமைப்பு), பல சர்வதேச ஒப்பந்தங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் பலவற்றில் கையெழுத்திட்டமையால், மிகவும் ஒன்றுக்கொன்று வேண்டிய நாடுகளாகவே காணப்படுகின்றன. காஷ்மிர் பிரச்சினை, NSG (அணுவாயுத விநியோகிஸ்தர் குழுமம்), பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து, பாகிஸ்தானுக்குத் துருக்கி தொடர்ந்தும் ஆதரவு தருகிறது.

உலகம் முழுவதும், சுமார் 2 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். 57 முஸ்லிம் நாடுகளில், சுமார் 60 சதவீத உலக இயற்கை வளங்கள், குறிப்பாக எரிசக்தி (எண்ணெய், எரிவாயு) உள்ளபோதும், பெரும்பாலான குறித்த நாடுகள், அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, நிலையற்ற, ஒடுக்கப்பட்ட அரசியல், பிரிவினை காரணமாக ஒன்றாகச் செயற்படமுடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கும் துருக்கும் இடையேயான தொடர்ச்சியான நட்பு நிலையானது, கூட்டாக முஸ்லிம் உலகத்தை வழிநடத்த, மேலும் சிறந்த பொருளாதாரத்துக்கும் சுதந்திரத்துக்கும் வழிவகுக்க உதவும் என்பதுடன், இவை மேற்கத்தேய நாடுகள் தொடர்ச்சியாக, முஸ்லிம் நாடுகளின் அரசியலில் தலையிடுவதைத் தவிர்க்க ஏதுவாக அமையும் என, இரு நாட்டுத் தலைவர்களாலும் நம்பப்படுகின்றது. இது, பிராந்தியத்திலும், உலகளாவிய ரீதியிலும், குறித்த நாடுகள் வளர்ந்துவரும் நிலைமைக்குச் சாதகமாக அமைவதுடன், இரு நாடுகளும் பயங்கரவாதம், சகிப்புத்தன்மை, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இவ்வேளையில், இரு நாடுகளும், வரலாற்றில் முன்னிருந்தமைபோல, இராணுவ ஆட்சியின்றி, ஜனநாயக வழியியொன்றில் ஆட்சியை மேற்கொள்வது, இரு நாடுகளுக்கும் சிறந்த பலனையே தருவதாக உள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும்,இரு நாடுகளும், தமது உள்நாட்டில் பல சவால்களை எதிர்கொள்வது மறுப்பதற்கில்லை. துருக்கி, தொடர்ச்சியாகவே கடுமையாகப் போராடியே சமூகத் துறையில், மற்றும் பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் அடையத் தலைப்படுகின்றது. துருக்கி, மிக அதிக அளவுக்கு, “பயங்கரவாதத்தை” முறியடித்தது. மறுமுனையில் அரசியல் ரீதியாக, துருக்கிய அனுபவத்திலிருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள ஒரு பாடம் உள்ளது. பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த ஒரு நாடு, ஜனநாயக நீரோட்டத்தில் எவ்வாறாகப் பயணிக்கத் தலைப்பட்டமை, அரசியல்வாதிகள் எவ்வாறாக மக்களின் மனதைவெல்ல கற்றுக்கொண்டனர் என்பதே அப்பாடமாகும்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பாகிஸ்தானில், பல இராணுவச் சட்டங்களுக்குப் பின்னர், பொதுமக்களின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசியல்வாதிகள், பொதுமக்களின் ஆட்சியின் மேலாதிக்கத்தை நிரூபிக்க, இராணுவம் ஒருபோதுமே வாய்ப்பளித்திருக்கவில்லை. மறுமுனையில், அரசியல்வாதிகள் ஊழல் “பயங்கரவாதத்துக்கு” ஒத்துழைத்தல் போன்றவற்றால், மக்களினதும் சர்வதேச நாடுகளினதும் நட்பைச் சம்பாதிக்க முடியவில்லை. இது இன்றும், பொதுமக்களைப் பொறுத்தவரை, சாதாரண மனிதனின் நலனுக்காக இராணுவ ஆட்சி மிகச் சிறந்தது என்ற எண்ணக்கருவுக்கும், பாகிஸ்தானில் இராணுவத் தலையீடு அற்ற அரசியலை நடாத்த முடியாது என மக்கள் கருதுவதற்கும் காரணமாக அமைகின்றது. 

இந்நிலையில், பிரதமர் கானின் துருக்கி விஜயம், இருதரப்பு பாரம்பரிய நட்பு வலுப்படுத்தும், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும் என்பதற்கு அப்பால், துருக்கிய அனுபவம், தொழில், உடல்நலம் சார்ந்த துறைகளின் வளர்ச்சி என்பதற்கு உதவும். மேலதிகமாக, துருக்கிய அனுபவத்திலிருந்து, ஜனநாயகம் தொடர்பாகப் பாகிஸ்தான் கற்றுக் கொள்ளக்கூடிய இன்னொரு முஸ்லிம் நாட்டுப் பயனாளியாக இருக்கலாம். இது இரு தரப்பு உறவுகளைத் தாண்டி, இரு தரப்பு மக்கள் தொடர்புகளை, புத்திஜீவிகள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள், இரு நாடுகளின் தொழிலதிபர்களுக்கு ஒரு பாலமாக அமையும் என்பதுடன், குறித்த இவ்விஜயமானது, இரண்டு நாடுகளின் மக்களும் பயனடையக் கூடிய ஒன்றாக அமையும் என்பதே, இரு நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களினதும் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .