2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போர் வெற்றி எதைச் சாதித்தது?

கே. சஞ்சயன்   / 2018 மே 18 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து இன்றுடன், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன.  

தமிழ் மக்களின் உரிமைக்கான, ஆயுதப் போராட்டம் பேரெழுச்சி பெறுவதற்குக் காரணமாக அமைந்த இடம் திருநெல்வேலி.   

1983ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னர்தான், ஆயுதப் போராட்டம் அதிகாரபூர்வமாக முனைப்புப்பெற்றது.  

திருநெல்வேலியைப் போலவே, முள்ளிவாய்க்காலுக்கும் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு தனி இடம் உள்ளது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இடம் அது.  

இன்று முள்ளிவாய்க்கால் என்பது, ஓர் இடப்பெயராக மாத்திரமன்றி, ஓர் இனத்தின் வரலாற்றுத் தரிப்பிடமாக, ஓர் இனப்படுகொலையின் குறியீடாக மாறியிருக்கிறது.  

முள்ளிவாய்க்கால் என்பது, தமிழ் இனத்தின் ஒரு பேரவலத்தின் குறியீடாக மாறியிருக்கும் நிலையில், அதுவே அரசபடைகள் போரில் இறுதி வெற்றியைப் பெற்ற இடமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத் தீவு இன்னமும் பிளவுபட்டு நிற்கிறது என்பதன் அடையாளமே இந்த நிலைதான்.  

ஒரு பக்கத்தில் போரில் ஈட்டிய வெற்றியை அரச தரப்பு நினைவு கூருகிறது. இன்னொரு பக்கத்தில் இந்த நாளைத் துக்க தினமாக - படுகொலை செய்யப்பட்டவர்களுக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஒரே நாட்டின் இரு வேறு பகுதிகளில் நடக்கின்ற நிகழ்வுகள் இவை. இது போருக்குப் பின்னரும், நாட்டை ஒன்றுபடுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது.  

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, அதைப் பயங்கரவாதமாகவே அரசாங்கம் பிரகடனம் செய்தது. பயங்கரவாதத்தை அடக்குவதாகக் கூறிக்கொண்டே, அரசாங்கம் படை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.  

அந்த ஆயுதப் போராட்டம், வெறுமனே ஒரு பயங்கரவாதப் போராட்டமாக மாத்திரம் இருந்திருந்தால், போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், இரண்டு இனங்களையும் இதயங்களால் ஒன்றுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்காது.  

தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, அதைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப் போய், அரசாங்கம் இன்னொரு குழிக்குள் விழுந்திருக்கிறது.  

ஆயுதப் போராட்டம் உருவானதற்கான காரணத்தைக் கண்டறிந்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.  

30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தை, எப்படியோ தட்டுத்தடுமாறித் தோற்கடித்து விட்ட போதிலும், அந்த ஆயுதப் போராட்டத்துக்குக் காரணமான  எல்லாவற்றுக்கும் முடிவு காண முடியவில்லை.  

போரை நடத்திய வழிமுறையால், போர்க்குற்றச்சாட்டுகளில் அரசாங்கம் சிக்கிக் கொண்டது. அதிலிருந்து வெளியே வரமுடியாமல் திணறுகின்ற நிலை, இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  

போருக்குப் பின்னரும், இனங்களை ஒற்றுமைப்படுத்தவோ, நாட்டை ஒன்றுபடுத்தவோ முடியாத நிலை இன்னமும் நீடிக்கிறது.  

ஒரே நாளில், நாட்டின் ஒரு பகுதி கொண்டாடுகிறது. இன்னொரு பகுதி கண்ணீர் சிந்துகிறது. இதைத்தான் சாதித்திருக்கிறது போர் மூலம் பெறப்பட்ட வெற்றி.   

“போரின் மூலம் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு விட்டோம்” என்று மார்தட்டியவர்கள் எல்லோருமே இப்போது, “போரின் மூலம் தம்மால் எதையும் சாதிக்க முடியவில்லை” என்று புலம்புகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.  

“போரில் வெற்றிபெற்ற முன்னைய அரசாங்கத்தால், தமிழர்களின் இதயங்களை வெற்றி கொள்ள முடியவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியிருந்தார்.  

“இராணுவ ரீதியாகப் புலிகளை முற்றாக அழித்தபோதும், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை, இன்னமும் தோற்கடிக்க முடியவில்லை” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருக்கிறார்.  

“ஈழக் கனவைப் பொசுக்கி விட்டோம்” என்று கூறிய ‘ராஜபக்ஷ சகோதரர்கள்’ கூட இப்போது, புலிகளின் கொள்கை இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.  

அவ்வாறாயின், போர் மூலம் இலங்கை அரசாங்கம் எதைச் சாதித்தது?  

புலிகளின் தலைமையை அழித்து, அவர்களின் ஆயுத பலத்தை இல்லாமல் செய்தது மாத்திரமன்றி, ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்கும் காரணமாகியது இந்தப் போர்.  

போராயுதங்களின் மூலம், அழிக்கப்பட முடியாத கொள்கையாக இன்னமும் விடுதலைப் புலிகளின் கொள்கை உயிர் வாழ்கிறது என்றால், போர் எதைச் சாதித்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.  

ஒரு கொள்கை உயிர் வாழும் வரையில், அதன் அசைவியக்கத்தை ஒரு போதும் இல்லாமல் செய்ய முடியாது.    

இப்போது வடக்கில் எந்தவொரு தவறான சம்பவம் நிகழ்ந்தாலும், விடுதலைப் புலிகளின் காலத்தை நினைவுபடுத்தி, ஆதங்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.  

விடுதலைப் புலிகள் இருந்தபோது, அவர்களை விமர்சனம் செய்தவர்கள், ஏன் எதிர்த்தவர்கள் கூட, இப்போது, அந்தக் காலம் பற்றிய, தமது ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.இது அரசாங்கத்தின் முதலாவது தோல்வி.   

‘அவர்கள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா’ என்று எழும்புகின்ற கேள்வியிலேயே, அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது.  

போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோரிப் போராடுகின்ற நிலையில்தான், தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.  

போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அந்த வெற்றியை நிலையானதாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இவற்றை அரசாங்கம் செய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அரவணைக்கப்பட்டிருப்பார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அவர்களை மறக்கவும் மன்னிக்கவும் முற்பட்டிருப்பார்கள்.  

போரால்ப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நீதியைப் பெற்றுக் கொடுக்காத அரசாங்கம், போரின் போது நிகழ்த்தப்பட்ட மீறல்களையும் நியாயப்படுத்தியது.   

போர் என்றால், இறப்புகள் தவிர்க்க முடியாதது தானே என்று, இப்போதும் அரசாங்கம் மற்றும் இராணுவத் தரப்புகள் நியாயப்படுத்துகின்றன. போர் என்பது இறப்புகள் நிகழ்வதுதான். ஆனால், போரில் தவறுதலாக நிகழ்கின்ற இறப்புகள் வேறு; திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இறப்புகள் வேறு.   

அப்படியிருக்கும் நிலையில், இதுபற்றிய முறையான விசாரணைகளை முன்னெடுத்து, பரிகார நீதியைப் பெற்றுக் கொடுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அலைந்து திரிய வேண்டிய நிலையும், அரசாங்கத்தைச் சபித்துக் கொண்டு வாழும் நிலையும் ஏற்பட்டிருக்காது.  

அதுபோலவே, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படவோ, தமிழ் மக்கள் தமது தாயக நிலப்பரப்பில் அமைதியாகவும், கௌரவமாகவும், நிம்மதியாகவும், உரிமைகளோடும் வாழக்கூடிய நிலையோ ஏற்படுத்தப்படவில்லை.  

இப்போதும், தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தாயகப் பிரதேசம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. அரசாங்கக் கட்டமைப்புகளின் துணையுடன் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பால், தமிழர்கள் விரக்தியடையத் தொடங்கியுள்ளனர்.  

போருக்குப் பின்னர் இப்போது, தமிழ் மக்கள் ஒரு வெறுமையான அமைதியை உணர்கிறார்கள். ஆனால், அது நிரந்தரமானதா என்ற ஏக்கமும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது. ஏனென்றால், நிலையான அமைதி இன்னமும் உருவாக்கப்படவில்லை; அரசியல் ரீதியான தீர்வு ஒன்று இன்னமும் எட்டப்படவில்லை; அதிகாரம் பகிரப்படவில்லை.   

ஏதுவுமே இல்லாமல் அவ்வப்போது தேர்தல்களில் வாக்களிப்பது, போராட்டங்களை நடத்துவது என்று தான், தமிழர்களின் அரசியல் மாறிப் போயிருக்கிறது.  

பயங்கரவாதத்தில் இருந்து, தமிழ் மக்களை விடுதலை செய்வதற்காகவே போர் நடத்தியதாக அரசாங்கம் கூறியது. அது உண்மையாக இருந்திருந்தால், இப்போதுள்ள வெறுமை நிலையை, எதிர்காலம் குறித்த அச்சத்தைத் தமிழ் மக்கள் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.  

ஓர் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவு கட்டுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தாலும், ஆயுதப் போராட்டத்துக்குப் பிற்பட்ட காலத்தில், அது தோல்வியடைந்து கொண்டே செல்கிறது.  

இப்படியான நிலையில், நாட்டை ஒன்றுபடுத்தினோம் என்ற கோசங்களின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாகி நிற்கிறது. ஏனென்றால், வடக்கும் தெற்கும் ஒரே நாளில், இரு வேறு உணர்வுகளில் இருக்கும் போது, நாடு எப்படி ஒன்றுபட்டதாக இருக்க முடியும்?  

பௌதிக ரீதியாக நாட்டை ஒன்றாக நிர்வகிப்பது மாத்திரம் முக்கியமல்ல; நாட்டிலுள்ள மக்கள், உள ரீதியாகவும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அதைச் சாதிக்க முடியாத போரில் தான், அரசாங்கம் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .