2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போலி வெற்றி

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொய்யான ஒரு வெற்றியை, சந்தோஷமாகக் கொண்டாடுவது போல் நடிப்பது, போலித்தனமாகும்.   

ஆனாலும், ‘எல்லை நிர்ணய அறிக்கை’ நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதைத் தமக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகக் கூறி, முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் தரப்புகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையில், இது வெற்றியே அல்ல என்பதை, அதைக் கொண்டாடுவோர் மிக நன்கு அறிவார்கள்.   

ஆனாலும், புதிய மாகாணசபைத் தேர்தல் முறைமையை, தாங்கள் ஆதரித்தமையால் எழுந்துள்ள மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவே, இல்லாத வெற்றியை, முஸ்லிம் கட்சிகள் போலியாகக் கொண்டாட வேண்டிய தேவை எழுந்துள்ளது.  

மாகாண சபைத் தேர்தலைப் புதிய முறையில் நடத்துவதற்கான சட்டம், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நாடாளுமன்றில் நிறைவேறியமை அறிந்ததே.   

தமிழர், முஸ்லிம் சமூகங்களை, நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும், இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. 

ஆயினும், புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையின் ஆபத்துக் குறித்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் தாண்டியே, அந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கான ஆதரவை, முஸ்லிம் கட்சிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

சரியாகச் சொல்வதாயின், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் முறைமையானது, சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்தளவு ஆபத்தாக அமையும் என்பதை, அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை வைத்தே, சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முழுமையாகப் புரிந்து கொள்ளத் தொடங்கின.   

கலப்பு முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்துக்கு ஒப்பானதாகவே, மாகாண சபைத் தேர்தல் சட்டமும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

எனவேதான், தங்கள் ஆதரவில் உருவான புதிய மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை, தாங்களே வேண்டாம் எனக்கூறும் நிலைமை, சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.  

புதிய சட்டத்தின் கீழ், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதாயின், மாகாணங்களுக்கான புதிய எல்லைகள் பற்றிக் குறிப்பிடுகின்ற ‘எல்லை நிர்ணய அறிக்கை’க்கு நாடாளுமன்றின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.   

எனவே, கடந்த வெள்ளிக்கிழமை (24), நாடாளுமன்றில் எல்லை நிர்ணய அறிக்கையை அரசாங்கம் சமர்ப்பித்தது. ஆனால், அதற்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், அந்த அறிக்கை தோல்வியடைந்தது.   

இந்தத் தோல்வியைத்தான், தமக்குக் கிடைத்த வெற்றியாக, முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் தரப்புகள் தூக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.  

எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுவதாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அங்கு சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கைக்கு ஆதரவாக, எந்தவொரு வாக்கும் பதிவாகவில்லை.   

புதிய முறையின் கீழ்தான், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற பிடிவாதத்திலுள்ள, ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அந்த அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையானது, முஸ்லிம், மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை மாகாண சபைகளில் கடுமையாகப் பாதிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.   

குறித்த அறிக்கை, நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் உரையாற்றிய சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.  

தற்போதைய மாகாண சபை முறைமையின் கீழ், 348 சிங்களவர்களும் 64 தமிழர்களும், 43 முஸ்லிம்களும் மாகாண சபைகளில் உறுப்பினர்களாக உள்ளனர். 

ஆனால், புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் முஸ்லிம் சமூகத்திலிருந்து 13 மாகாணசபை உறுப்பினர்களே தெரிவாகுவதற்கான நிலைமை உள்ளது. இதன்படி 30 உறுப்பினர்களை, முஸ்லிம் சமூகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.  

அதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன், “தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாகத்தான், எல்லை நிர்ணய அறிக்கையைப் பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறியிருந்தமையையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.  

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, இது குறித்து நாடாளுமன்றில் பேசும்போது, “சிறிய சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை மிக மோசமாகப் பாதிக்கச் செய்வதோடு, பெரும்பான்மை இனத்தின் பலம் மேலோங்கச் செய்வதற்குரிய நிலைவரத்தை, எல்லை நிர்ணய அறிக்கை ஏற்படுத்தும்” எனக் கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.  

எவ்வாறாயினும், எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதை நிறைவேற்ற முடியாமல் போனால், குறித்த அறிக்கையைச் சட்டமாக்குவதற்கான மாற்றுவழி என்ன என்பது பற்றிய ஏற்பாடுகளும் உள்ளன.   

அது என்னவென்றால், எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான குழுவொன்றை சபாநாயகர் நியமிப்பார். ஐந்து பேரை உறுப்பினராகக் கொண்ட அந்தக் குழுவுக்கு, பிரதமர் தலைமை வகிப்பார். அந்தக் குழுவானது, தற்போதுள்ள எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் பெயர்களில் மாற்றங்களைச் செய்யலாம்; தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கங்களைத் திருத்தலாம்; மேலும், தொகுதிகளின் எல்லைகளில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். 

எவ்வாறாயினும், எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைச் செய்வதற்கு, அந்தக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது.  

இவ்வாறான மாற்றங்களைச் செய்த பின்னர், இரண்டு மாதங்களுக்குள் குறித்த அறிக்கையை, ஜனாதிபதியிடம் மேற்படி மீளாய்வுக் குழு சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு, அந்த அறிக்கையை நாடாளுமன்றில் மீண்டும் சமர்ப்பித்து, அதற்கான ஆதரவைப் பெற வேண்டிய தேவை, அரசாங்கத்துக்குக் கிடையாது.   

குறித்த அறிக்கையை, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்துவார். அதையடுத்து, அது சட்டமாகும். அதன் பிறகு, புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை, எந்த நேரத்திலும் நடத்த முடியும்.  

ஆக, தற்போது 139 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை, மீண்டும் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வராமலேயே, ஜனாதிபதியால் சட்டமாக்க முடியும் என்றிருக்கும் போது, ‘எல்லை நிர்ணய அறிக்கையைத் தோற்கடித்து விட்டோம்’ என்று கூறி, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கொண்டாடுகின்றமையானது, ஏமாற்று அரசியலாகும்.   

எனவே, ‘எல்லை நிர்ணய அறிக்கையைத் தோற்கடித்ததன் மூலம், புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் செய்து விட்டோம்’ என்று முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவதும், அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்குவதும் கேலிக் கூத்தாகவே அமையும்.   

அப்படியென்றால், மாகாணசபைத் தேர்தலை, பழைய விருப்பு வாக்கு முறைமையின் கீழ் நடத்த வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.   

தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமையை இரத்துச் செய்து, பழைய தேர்தல் முறைமையை அதற்குப் பதிலீடு செய்வதன் மூலமே, மீளவும் பழைய தேர்தல் முறைமையைக் கொண்டுவர முடியும். அதைச் செய்வதற்கு, நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பங்கு ஆதரவைப் பெற வேண்டும். அது எந்தளவு சாத்தியமாகும் என்பதை, இப்போதைக்கு அனுமானித்துச் சொல்ல முடியாது.  

ஆனாலும், மேற்சொன்ன வழி மூலமாக மட்டுமே, பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மீளவும் செல்ல முடியும்.   

எனவே, பெரிய கட்சிகளிடம் இதற்காகச் சிறுபான்மைக் கட்சிகள் மன்றாட வேண்டி வரும். இருந்தபோதும், அந்த ஆதரவைப் பெருந்தேசியக் கட்சிகள் வழங்குமா என்பதை, இப்போதைக்கு அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. 

கைக்குக் கிடைத்த பழத்தை தூக்கி வீசுவதற்கு, அத்தனை இலகுவில் பெரிய கட்சிகள் சம்மதிக்குமா என்பது கேள்விக்குரியதாகும்.   

கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது, புதிய தேர்தல் முறைமையை இரத்துச் செய்வதற்கான சாத்தியங்களை விடவும், அதை அமுல்படுத்துவதற்கான சாத்தியங்கள்தான் மிக அருகில் தெரிகின்றன.   
எனவே, எல்லை நிர்ணய அறிக்கையைத் தோற்கடித்து விட்டதாகக் கூறி, ஆர்ப்பரித்து, அதைக் காட்டி மக்களிடம் போலியான அரசியலை செய்வதை நிறுத்தி விட்டு, தங்கள் சமூகங்களின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தியைக் கவனமாக எடுத்து விடுவதற்கான, அரசியல் தந்திரோபாயங்களை மேற்கொள்ளும் முயற்சியில் முஸ்லிம் கட்சிகள் அவசரமாக இறங்க வேண்டும்.  

புதிய மாகாண சபைகள் தேர்தல் சட்டம் என்பது, முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்த வரையில், அவர்களின் தலைகளில் அவர்களே அள்ளிப் போட்ட மண்ணாகத்தான் தெரிகிறது.   

ஆனால், புதிய தேர்தல் முறைமை நடைமுறைக்கு வருமாயின், அதனால், மேற்படி முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.  

 எனவே, இந்த ஆபத்திலிருந்து தங்களினதும் முஸ்லிம் சமூகத்தினதும் தலையைக் கழற்றுவதற்கு முஸ்லிம் கட்சிகள் முயற்சிக்க வேண்டும். தவறினால், அதற்கான பழியையும் பாவத்தையும் சுமப்பதற்கு அந்தக் கட்சிகள் தயாராக வேண்டும்.  

இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் மாகாண சபைப் பிரதிநிதித்துவங்களை மிக மோசமாகப் பாதிக்கக் கூடிய, புதிய தேர்தல் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பெருந்தேசியக் கட்சிகள் எதுவாயினும் தொடர்ந்தும் அடம்பிடிக்குமாயின், அந்தக் கட்சிகளுடனான உறவுகளை முஸ்லிம் கட்சிகள் தொடர்வது குறித்து யோசிக்க வேண்டும்.   

மேலும், அவ்வாறான கட்சிகளை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவையாகவே முஸ்லிம் சமூகமும் பார்க்க வேண்டியும் இருக்கும். மிகத் திட்டமிட்டு, முஸ்லிம்களினதும் மலையகத் தமிழர்களினதும் மாகாண சபை பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கான சூழ்ச்சிக்குத் துணைபோகின்ற எந்தவொரு தரப்பையும் மேற்படி சமூகங்கள் ஆதரிக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.   

அவ்வாறான அரசியல் முடிவுகளினூடாக, பெருந்தேசியக் கட்சிகளுக்குப் பாடங்களைப் புகட்டுவதற்கு சிறுபான்மை சமூகங்கள் தயாராக வேண்டும்.  

அதற்கு முன்னதாக, தங்கள் அரசியல் பலத்தைப் பலிகொடுப்பதற்கு ஆதரவளித்த தங்கள் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் ‘கணக்குகளை’ப் பார்ப்பதற்கு, முஸ்லிம் மற்றும் மலையக தமிழர் சமூகங்கள் துணிய வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .