2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரப் போகும் தேர்தல்களில் ஈஸ்டர் தாக்குதல்களின் தாக்கம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 மே 29 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால், நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள்.   

ஆனால் அவர்கள், ‘நடந்தவை இறைவனின் நாட்டம்’ எனக் கருதி, அதற்காக முஸ்லிம்களைப் பழிவாங்கவோ, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கவோ முற்படாமல், அமைதியாக இருக்கிறார்கள். இலங்கை கத்தோலிக்கர்களின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் “நடந்தவை இறைவனின் சோதனை” என்றே வர்ணித்தார்.  

ஆனால், பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்படாத ஏனைய பேரினத்தவர்கள், அதனைப் பாவித்து, முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.   

2012ஆம் முதல் 2014ஆம் ஆண்டு வரை, பொது பல சேனா உள்ளிட்ட பேரினவாதத் தீவிரவாதக் குழுக்களின் இனவாதப் பிரசாரங்களால் தூண்டப்பட்டு, பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட அரச மாற்றத்தை அடுத்துப் பதுங்கிய இனவாதம், இம்முறை பலமடங்கு வேகத்தோடு, சில அரசியல் கட்சிகளின் வெளிப்படையான ஒத்தாசையுடன், முஸ்லிம்களை மிரட்டி வருகிறது.  

சில ஊடகங்களே இந்த நிலையை உருவாக்கின எனலாம். பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பல பிரதேசங்களில் முஸ்லிம்களின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, பொதுவாகப் பல வீடுகளில் இருப்பதைப் போல், இந்த வீடுகள் சிலவற்றிலும் வாள்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்தோடு, சமயலறைக் கத்திகளும் கைப்பற்றப்பட்டன. ஓரிரு இடங்களில் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன.   

இவை எதுவுமே பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டவை அல்ல. ஆனால், தற்போதைய நிலையில், பாதுகாப்புத் துறையினர் அவற்றைக் கைப்பற்றுகின்றனர். இவற்றைப் பற்றிக் கூறும் போது, இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க, “பயங்கரவாதிகளோடு சம்பந்தப்பட்ட ஓர் ஆயுதம் மட்டுமே, இதுவரை கைப்பற்றப்பட்டு உள்ளது” என்று ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.   

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி, சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருந்த வீட்டைப் படையினர் முற்றுகையிட்ட போது, அந்த இடத்தில் துப்பாக்கிதாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது’. இதனைத்தான், இராணுவத் தளபதி கூறுகிறார் போலும். 

அத்தோடு, இராணுவத் தளபதி, அனேகமாகப் பல வீடுகளில் வாள்கள் இருப்பதாகவும் தமது வீட்டிலும் மூன்று வாள்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஜனாதிபதியும் வாள்கள், பல வீடுகளில் சாதாரணமாக இருக்கும் ஆயுதங்களே எனக் கூறியிருந்தார்.   

ஆனால், சில ஊடகங்கள், முஸ்லிம்கள் ஆயுதக் களஞ்சியங்களை வைத்திருப்பதைப் போன்றதொரு நிலைமையைக் காண்பித்து, சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதன் விளைவாக வெறுப்பையும் வளர்த்தன. அதன் விளைவாகவே, கடந்த 12, 13ஆம் திகதிகளில் புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் பரவின.   

அதைடுத்து, ஓரிரு நாள்கள் சாதாரண செய்திகளைப் பிரசுரித்து வந்த அந்த ஊடகங்கள், இப்போது புதிய வேகத்தில், இனக்குரோதத்தை வளர்த்து வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் ஊடகங்களே, இனக் குரோதத்தை வளர்ப்பதில் மிக மோசமாக நடந்து கொள்கின்றன.   

அவை, அதற்காக இப்போது, இரண்டு செய்திகளை முக்கியமாகப் பாவிக்கின்றன. ஒன்று, அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டாகும். 

மற்றையது, குருநாகல் மருத்துவமனையில், முஸ்லிம் மருத்துவர் ஒருவர் 4,000 சிங்களத் தாய்மார்களுக்குக் கருத்தடைச் சத்திர சிகிச்சைகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டாகும்.   

முஸ்லிம் விரோதத்தைப் பாவித்து, எதிர்வரும் தேர்தல்களின் போது, சிங்கள வாக்குகளை மென்மேலும் தம் பக்கம் ஈர்ப்பதே, அவர்களது குறிக்கோள் என்பது தெரிகிறது.  மஹிந்த ராஜபக்‌ஷ உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறுபான்மை வாக்குகளை முற்றாகக் கைவிட்டுவிட்டு, சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே பாவித்து, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற நினைக்கிறது என்பதையே இது காட்டுகிறது.   

அரசியல் தந்திரோபாயம் என்ற வகையில், இது பிழையானது என்று கூறமுடியாது; அரசியலில் நாகரிகம் கிடையாது. நாட்டில் எந்த அழிவு ஏற்பட்டாலும், அந்த அழிவைப் பாவித்துப் பதவிக்கு வர முடியுமாக இருந்தால் அல்லது, பதவியில் தொடர முடியுமாக இருந்தால், அந்த அழிவை ஊக்குவிப்பதையே அரசியல்வாதிகள் செய்வார்கள்.   

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது, குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், மஹிந்த அணியினரை ஆதரிக்கவில்லை. அதனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள். இதனை மஹிந்த பகிரங்கமாகவே கூறியிருந்தார்.   

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணியே மொத்தமாகப் பெற்றுக் கொண்டது. எனினும் மஹிந்த அணியே வெற்றி பெற்றது.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இரண்டு கட்சிகளும் ஐ.தே.கவும் பெற்ற மொத்த வாக்குகளுக்குச் சமமான அளவு வாக்குகளை பொதுஜன பெரமுன பெற்றிருந்தது. இம்முறை மைத்திரி அணியின் வாக்குகளில் ஒரு பகுதியும் மஹிந்த அணிக்கே கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தனிச் சிங்கள வாக்குகளால் தமக்கு அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை மஹிந்த அணிக்கு ஏற்பட்டு இருக்கிறது போலும்.  

அந்த நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதே, அவர்களது இன்றைய வெறுப்பை வளர்க்கும் செயற்பாடுகளின் நோக்கமாக இருக்கிறது. அதற்காக அவர்கள் தமது அணிக்கு ஆதரவான ஊடகங்களை மிக மோசமாகப் பாவிக்கின்றனர்.   

அந்த ஊடகங்களும், இரண்டு நோக்கங்களுக்காக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் குரோதத்தையும் வளர்த்து வருகின்றன. ஒரு புறம் அவை தமது அரசியல் எஜமானர்களின் அரசியல் வளர்ச்சிக்காக இதனைச் செய்கின்றன. மறுபுறம், பெரும்பான்மை மக்கள் மத்தியில் மென்மேலும் பிரபல்யம் அடைந்து, தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அவை செயற்படுகின்றன.   

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது, சிறுபான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த போதிலும், அம் முறை அவரது கட்சிக்குக் கிடைத்த சிங்கள வாக்குகளை மட்டும் கருத்தில் கொண்டாலும் அவர் வெற்றி பெற்றிருக்க முடியும்.   

எனவேதான், சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்ற நோக்கத்தில், அவரது அரசாங்கம் 2012 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு இடமளித்தும் ஊக்குவித்தும் வந்தது.  ஆனால், ஆளும் கட்சி என்ற வகையில் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், பொதுவாக நாட்டு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து வந்தது. அந்த நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் இழந்த போது, அந்த அரசாங்கம் தோல்வியடைந்தது.  

இம்முறை ஆளும் கட்சி என்ற வகையில், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து வருவது ஐ.தே.கவே ஆகும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் குரோதத்தையும் தூண்டுவதன் மூலம், மஹிந்த அணியினருக்குச் சாதகமான நிலைமையேயன்றி, பாதகமான நிலைமை ஏற்படப் போவதில்லை. இதன் காரணமாக, தேர்தல்கள் மேலும் நெருங்கி வரும் போது, இன முறுகல் மேலும் வலுவடையும் அபாயம் இருக்கிறது.   

முஸ்லிம் அரசியலுக்கோர் அமிலப் பரீட்சை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகச் சில அரசியல்வாதிகளாலும் சில ஊடகங்களாலும் சுமத்தப்டும் குற்றச்சாட்டுகள் மிகப் பாரதூரமானவையாகும்.   

உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் சுமார் 300 அப்பாவிகளைக் கொன்று குவித்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு, ஆதரவளித்தார் என்பதே, அவருக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டாகும்.  

இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது பிரபாகரனுக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டதைப் போல், மிக நீண்ட காலச் சிறை தண்டனை வழங்கப்பட முடியும்.   

அவ்வாறாயின், தம்மிடம் உள்ள ஆதாரங்களைச் சாட்சியாக முன்வைத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல, அவருக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் அரசியல்வாதிகளோ அல்லது ஊடக நிறுவனங்களோ முன்வராதது ஏன் என்பது பெரும் கேள்விக்குறியாகும்.   

தமது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அவர்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனாலேயே, அவர்கள் அதற்கு முன்வருவதில்லை என்றே யூகிக்க வேண்டியுள்ளது.  

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென அரசாங்கத்தின் ஆலோசனைப் படி நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கப் பட்டுள்ளவையே அன்றி, பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் அல்ல.  நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால், அவர் எந்தக் குற்றமும் செய்யாதவராகிவிடுகிறார். அப்பிரேரணை வெற்றியடைந்தாலும் அவர் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டி ஏற்படுமே அல்லாது, வேறு எதுவும் நடக்கப் போவதில்லை.   

அப்பிரேரணை மீதான விவாதத்தின் போது கூறப்படும் விடயங்களை வைத்து, எவரும் நீதிமன்றம் செல்லப் போவதுமில்லை. பிரேரணை வெற்றியடையுமா தோல்வியடையுமா என்பது, குற்றச்சாட்டுகளின் பாரதூரத்தன்மையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகள் முன்கூட்டியே எடுக்கும் முடிவின் படி, வாக்குப் பலத்தாலேயே அது நிர்ணயிக்கப்படும்.  

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் வாக்குப் பலத்தாலேயே குற்றச்சாட்டுக்கள் மீது முடிவு எடுக்கும். அதுவும் கட்சிக் கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் முடிவாகும். தெரிவுக்குழு முன்வைக்கப்படும் ஆதாரங்களின்படி, முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது. எனவே, இது பயங்கரவாதத்தைப் பற்றிய பிரச்சினையாக இருந்தால், அந்த இரண்டு நடவடிக்கைகளும் அர்த்தமற்றவையாகும்.  

உண்மையிலேயே, இது வெறும் அரசியல் நாடகமாகும். கடந்த ஒக்டோபர் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட போது, அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் பல கட்சிகளின் உதவியை நாடினார். அதற்கு உதவாததன் காரணமாகவே, தம்மீது இவ்வாறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக, அமைச்சர் ரிஷாட், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.   

அதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சிறுபான்மையினத் தலைவர்களை மிரட்டி, எதிர்வரும் தேர்தல்களின் போது, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதும் மற்றொரு நோக்கமாக இருக்கலாம்.   

சுருக்கமாக, ஏற்கெனவே சர்ச்சைக்குரியவராகிவிட்ட ஒரு முஸ்லிமைப் பகிரங்கமாக இம்சித்து, சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதே மஹிந்த அணியினரின் நோக்கமாகும்.   

அதேவேளை, இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான தெமட்டகொட இப்ராஹீம் என்பவருடன், ரிஷாட் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார் என்பவர்கள், அதே இப்ராஹீமைக் கடந்த பொதுத் தேர்தலின் போது, மக்கள் விடுதலை முன்னணி தமது தேசியப் பட்டியலில் சேர்த்திருந்ததையிட்டு அலட்டிக் கொள்வதில்லை. எனவே, ரிஷாட் மீதான தாக்குதலில் இனவாதமும் இருக்கிறது என்பது தெளிவான விடயமாகும்.   

பிடி கொடுத்து இருந்தால் முஸ்லிம் காங்கிரஸூக்கும் இதே கதி நேர்ந்திருக்கும். ஒரு காலத்தில் ரிஷாட்டைப் பாவித்தே, சில பேரினவாதிகள், மு.காவை இதேபோன்று வாட்டி வதைத்தார்கள்.  அரசியல் ரீதியாக, இன்றைய நிலைமை, ரிஷாட்டுக்குச் சாதகமானதே. ஏனெனில், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை எதிர்த்த போதிலும், ரிஷாட் பயங்கரவாத்தை ஆதரித்தார் என்று அவர்கள் இதுவரை நம்பவில்லை.   

எனவே, இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பிய குழுக்களுடன் இணைந்து, கூட்டு எதிரணியினர் ரிஷாட்டைத் தாக்குவது முஸ்லிம்கள் மத்தியில், அவரது செல்வாக்கை அதிகரிக்கும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானினது வளர்ச்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபினது வளர்ச்சிக்கும் பேரினவாதிகள் இதேபோல் வெகுவாக உதவினார்கள்.   

எனினும், எதிர்வரும் தேர்தலின் போது, முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கப் போகின்றன. பயங்கரவாதத் தாக்குதலைப் பாவித்து, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டி, முஸ்லிம் பிரதேசங்கள் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுத்தவர்களை ஆதரிப்பதா அல்லது தோல்வியடையப் போகும் கட்சியொன்றை ஆதரித்து சிறியளவிலாயினும் கிடைக்கும் அரசியல் அதிகாரங்களை இழந்து நிற்பதா என்ற கேள்வி அப்போது அவர்கள் முன் இருக்கும்.  அவர்கள் என்ன முடிவை எடுத்தாலும், அது அவர்களது சொந்த நலன்களுக்கு மட்டுமே உதவுமேயல்லாது தேர்தலின் பின்னரும், முஸ்லிம்களின் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும் அறிகுறிகளே தென்படுகின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .