2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி?

கே. சஞ்சயன்   / 2019 ஜூன் 23 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தைப் பிற்போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்த போது, ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தார், இந்தியா சென்றுவிட்டு அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோதே, அந்தத் தாக்குதல்கள் நடந்திருந்தன.
ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதையடுத்து இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நாடு திரும்பினார்.

மீண்டும் அவர் கம்போடியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணம் ஒன்றும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதற்கில்லை.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, வரும் 27ஆம் திகதியன்று, கொழும்புக்கு வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தப் பயணமும் இரத்துச் செய்யப்பட்டதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக, பொம்பியோ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியிருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொழும்பு வரும்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இங்கு இருக்கமாட்டார் என்பது உறுதியாகியிருந்தது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்பட்டது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயண நிகழ்ச்சி நிரலுக்குள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய பயணத் திட்டம், குறுக்கே புகுந்தது ஆச்சரியமானது. ஆனால், அதிர்ச்சியளிக்கக் கூடியதன்று.
ஏனென்றால், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவைச் சந்திக்கின்ற, அவருடன் பேசுகின்ற விருப்பம், ஜனாதிபதிக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் என்பது, அமெரிக்காவில் இரண்டாவது அதிகாரமிக்க பதவியாகக் கருதப்படத்தக்கது. 

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடுத்து, கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை வரவேற்று பேச்சுகளை நடத்தினார். அப்போது, அமெரிக்காவுக்கும் அவருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது.

மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வருவதற்கான சூழ்நிலைகளை அமைத்துக் கொடுத்ததில், அமெரிக்காவின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்சி மாற்றத்தில் பல்வேறு வழிகளில் பங்களித்திருந்தது அமெரிக்கா.

மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்‌ஷவே, அமெரிக்க புலனாய்வுத்துறை மீது குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

ஜோன் கெரிக்குப் பின்னர், நான்கு ஆண்டுகள் கழித்து, கொழும்புக்கு வரவிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணம் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கறையோ ஆர்வமோ கொண்டிருக்கவில்லை.

ஏன் இந்த மாற்றம்? அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணத்தைக் கண்டுகொள்ளாமல், அவர் ஒதுங்க நினைத்தது ஏன்?

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சியைக் கவிழ்க்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்த பின்னர், தொடங்கியது இந்தப் பனிப்போர்.

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கி, நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி ஆடிய ஆட்டத்துக்கு முடிவு கட்டுவதில், முக்கியமாக நின்றது அமெரிக்காதான்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து, அமெரிக்கா கடும் அழுத்தங்களைக் கொடுத்தது. 

பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்று மேற்குலகம் கொடுத்த அழுத்தங்களால்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, படியிறங்க நேரிட்டது.

இல்லையேல் அவர், உயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் எல்லாவற்றையும் தூக்கி வீசிக்கொண்டு சென்றிருப்பார். அவரது திட்டத்தைத் தகர்த்துப் போட்டதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.

அதற்குப் பின்னர், அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில், பெரியளவில் நெருக்கம் இருக்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்ததும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினரே தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசவில்லை.

இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள, அமெரிக்கா எடுத்திருந்த நடவடிக்கைகளைத் தடுக்கவும் முடியாமல் தொடரவும் விடாமல், திரிசங்கு நிலைக்குள் ஜனாதிபதி சிக்கியிருக்கிறார்.

ஏனென்றால், இலங்கைப் படைகளுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் பயிற்சிகள், உதவிகளை அளித்து வருகிறது. இப்படியான நிலையில், அதனை உதறித்தள்ள அவரால் முடியாதிருக்கிறது.

அதேவேளை, இலங்கையுடன் சோபா எனப்படும் படைகளை நிலைப்படுத்துதல் தொடர்பான உடன்பாட்டைச் செய்துகொள்ளவும் அமெரிக்கா அளித்துள்ள முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவும், அவர் தயாராக இல்லை.

தனக்குத் தெரியாமல் அமெரிக்காவுடன் எந்தப் பாதுகாப்பு உடன்பாடுகளும் செய்துகொள்ளக் கூடாதென்று, அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, கடுமையான தொனியில் ஜனாதிபதி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்றொரு தகவலும் வெளியானது.

சோபா உடன்பாட்டை சர்ச்சைக்குரியதாக மாற்றியதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கும் குறைவற்றது. அவர் அதனை விரும்பவில்லை. தட்டிக்கழிக்க முனைகிறார். ஆனால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அதனுடன் உறவுகளை விரிவுபடுத்தவும், ஐ.தே.க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கைப் பயணத்தின்போது, சோபா உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகள் குறித்தும் பேசத் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொஞ்சம் உசாராவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தான், நாட்டில் தங்கியிருந்தால் பொம்பியோவை சந்திக்கவேண்டும். அவரைச் சந்தித்தால், சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு இணங்க வேண்டும்.

ஆனால், நாட்டின் இறைமையைப் பாதிக்கும் எந்தவோர் உடன்பாட்டிலும், எந்த நாட்டுடனும் கையெழுத்திட அனுமதிக்கமாட்டேன் என்றும் அண்மையிலும் கூட ஜனாதிபதி கூறியிருந்தார். 

எனவே, அவர், பொம்பியோவுடன் சோபா உடன்பாடு குறித்து பேசினாலோ இணங்கினாலோ அது முரண்பாடானதாக அமைந்துவிடும். இந்த நிலையில்தான், அவர், கம்போடிய பயண நிகழ்ச்சி நிரலை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் 26க்கு முன்னரே, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த வாரம்கூட அவர், தஜிகிஸ்தானில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதன்போது, ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, இலங்கைக்கு விரைவில் வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதிகள் எவரும், அண்மைக் காலங்களில் இலங்கைக்கு வந்ததில்லை. தாம் பதவியில் இருக்கும்போதே, புட்டினை கொழும்புக்கு அழைப்பதில் மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டுகிறார்.

ரஷ்ய பொருள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு, அமெரிக்கா விதித்துள்ள தடை, அதனை எதிர்காலத்தில் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இரண்டு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள்.

இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சவால் விடக்கூடிய விடயம். ஒரு பக்கத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்பு உறவுகளை அதிகரித்து, அதனைக் கைக்குள் போட அமெரிக்கா முனைந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, நழுவி ஓட முனைகிறார்.

தஜிகிஸ்தான் தலைநகர்  துஷன்பேயில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றிய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

அவர், புறச்சக்தி எனக் குறிப்பிட்டது அமெரிக்காவையும் மேற்குலகத்தையும்தான்.
அந்த மாநாட்டில், அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களான சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில், அமெரிக்காவுக்கு இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை சந்திக்காமல் தவிர்க்க முனைந்திருந்தால், அது ஆச்சரியமில்லை.

எனினும், பொம்பியோவின் இலங்கைப் பயணமும் ஜனாதிபதியின் கம்போடியா பயணமும், இப்போது இரத்துச் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது இலகுவானதாக இருக்காது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .