2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்: முடியுமா, தொடருமா?

எம். காசிநாதன்   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்தித் திணிப்பு என்பது, மீண்டும் வலுவாகத் தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது.   

ஹிந்தி தினத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பொது மொழியாக, ஹிந்தி வர வேண்டும். ஹிந்திதான் நாட்டுக்கு ஓர் அடையாளத்தை உலக அரங்கில் கொடுக்க முடியும்” என்றார்.   

இந்தப் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், தமிழகத்திலிருந்து முதலில் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம். மீண்டும் எங்களைக் களம் காண வைக்காதீர்கள். ஹிந்திதான் நாட்டின் ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்று பேசியதை உள்துறை அமைச்சர் வாபஸ் பெற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.   

தமிழகத்தில் உள்ள மற்றக் கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, இது பற்றி வாய் திறக்கவில்லை. கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. அம்மாநில முதலமைச்சர் பா.ஜ.க தலைவருமான எடியூரப்பா, “கன்னட மொழிதான் எங்களுக்கு முக்கியம்” என்றார்.   

கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், “மொழியை வைத்து நாட்டைப் பிளவுபடுத்த அமித்ஷா நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டினார். இப்படி “இந்தியாவுக்கு ஹிந்தியே அடையாளம் தரும் மொழி” என்ற உள்துறை அமைச்சரின் பேச்சு, தமிழகத்தையும் தாண்டி முதல் முறையாக, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் களம் அமையும் சூழலை ஏற்படுத்தியது.  

ஹிந்தி எதிர்ப்பு என்பது, தமிழகத்தில் 1938இல் தொடங்கியது. “ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும்” என்று அன்று முதலமைச்சராக இருந்த ராஜாஜி வற்புறுத்த, இந்தப் போராட்டக் களத்தை மறைமலையடிகள் தலைமையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.   

பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மட்டுமின்றி தி.மு.க தலைவர் கருணாநிதி, தனது மாணவப் பருவத்திலேயே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். தாளமுத்து, நடராஜன் ஆகியோர் ஹிந்தி மொழி எதிர்ப்புப் போரில் உயிர் துறந்தார்கள். இன்றைக்கும் சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் பெயரில் அரசு மாளிகை இருக்கிறது. அங்குதான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செயற்பட்டு வருகிறது.   

1958 வாக்கில் ஆரம்பித்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு திருவண்ணாமலை அருணகிரி சுவாமி போன்றோர் தலைமை வகித்தனர். அதில், அறிஞர் அண்ணா கலந்து கொண்டார். அவர் தலைமையிலேயே ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. இவ்வாறு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வரலாறுகள் உண்டு.  

 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மேலும் பல இளைஞர்களை, குறிப்பாகத் திருச்சி சின்னச்சாமி போன்ற இளைஞர் தீக்குளித்து, மொழிக்காகத் தியாகம் செய்த போராட்டமாக மாறியது. ஹிந்தி மொழிப் போராட்டத்தின் உச்சத்தில்தான், பிரதமராக இருந்த நேரு “ஹிந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை, ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடரும்.  அம்மக்கள் மீது, ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது” என்று வாக்குறுதியளித்தார். அந்த உறுதிமொழி இன்றளவும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் திருப்புமுனைச் சரித்திரமாக விளங்கி வருகிறது. அதன் பிறகு வந்த பல பிரதமர்கள், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், திணிப்பு என்று வரும் போது, தமிழகம் போராட்டக் களத்தைக் கண்டுள்ளது. “ஹிந்தி திணிக்கப்படாது” என்று நேருவின் உறுதிமொழியும் ஹிந்தி திணிப்பும் தொடர்ந்தே நடைபெற்று வருகிறது என்பதில் சந்தேகமில்லை.  

 சோமசுந்தர பாரதியார், சேதுப்பிள்ளை, உமா மகேசுவரம் பிள்ளை, மறைமலையடிகள், அருணகிரி என்று துறவிகளும் புலவர்களும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை கடந்த கால வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது.  

இந்நிலையில் மொழிப் போராட்டத்தின் விளைவாக ஆட்சியைப் பிடித்த தி.மு.க, 1968இல் முதன் முதலில் இரு மொழிக் கொள்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. முதலமைச்சராக இருந்த அண்ணா, “ஹிந்திக்கு இனி தமிழகத்தில் இடமில்லை” என்று கூறி, உணர்ச்சிபூர்வமாகச் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.  பொதுக்கூட்டமொன்றில் அண்ணாவுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த ராஜாஜி, “அண்ணாவுடன் நான் இன்று ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறேன். பலர் ஆச்சரியப்படுவார்கள். ஆங்கிலம் எங்களை இணைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டதைத் தனது பேச்சில், சட்டமன்றத்தில் அண்ணா, மேற்கோள் காட்டியிருந்தார்.    

தமிழகத்தில் இருந்த மும்மொழித்திட்டம் ஒழிக்கப்பட்டு, இரு மொழிக் கொள்கை- பாடசாலைகளில், அலுவலகங்களில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே என்பது நிலைநாட்டப்பட்டது. தி.மு.க முதன் முதலில் ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு ஓரளவு தடைபோடப்பட்டது. என்றாலும், மத்தியில் வலுவான அரசாங்கம் வருகின்ற நேரத்தில் எல்லாம், ஹிந்தித் திணிப்பு என்பது, தொடர் கதைதான்.   

ஹிந்தி மொழி வளர்ச்சிக்காகப் பாடுபடுவதைப் பொறுத்தமட்டில் காங்கிரஸுக்கும், பாரதிய ஜனதாப் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாட்டின் ஒரே மொழி ஹிந்தி” என்று கூறியிருக்கிறார் என்றால், தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போதும், “ஹிந்தி மொழியை வளர்க்க வேண்டும்” என்று, இதே ஹிந்தி தினத்தில் உரையாற்றி இருக்கிறார்.   

1965களில் இருந்ததை விட, அதிகமாக இன்றைக்கு ஹிந்தி மொழியின் ஆதிக்கம் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும்,  குறிப்பாக, ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் இருக்கிறது என்றால், அதற்குக் காங்கிரஸும் பொறுப்பு; தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியும் பொறுப்புதான். இந்த முறை நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு அபரிமித வாக்குகளை அள்ளிக் கொடுத்திருப்பவர்கள், ஹிந்தி பேசும் மக்கள் வாழும் வட மாநிலங்கள்தான்.   

உத்தர பிரதேசத்தில் தொடங்கி, அனைத்து வட மாநிலங்களும் பா.ஜ.கவுக்கு எம்.பிக்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதனால் ஹிந்தியை, பா.ஜ.க வளர்க்கப் பாடுபடுவதில் அக்கட்சியின் அரசியலும் இருக்கிறது. இது போன்ற சூழலில்தான் உள்துறை அமைச்சர் இந்த முறை “தாய் மொழிக்கு அடுத்து அனைவரும் இரண்டாவது மொழியாக ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.   

ஹிந்தி மொழி விவகாரத்தில் நேரு கொடுத்த உறுதிமொழியை நீக்கும் நோக்கத்தில் இப்படி உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார் என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நினைத்தன. அதன் முதல் போராட்டக் களமாகத்தான் செப்டம்பர் 20ஆம் திகதி, மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் என்று அறிவித்தது தி.மு.க.  

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் மத்திய அரசு சற்று யோசிக்கத் தொடங்கியது. சீன ஜனாதிபதியும் பிரதமர் நரேந்திரமோடியும் ஒக்டோபர் மாதத்தில் சென்னையில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்நிலையில் இது போன்ற ஆர்ப்பாட்டத்தின் விளைவாக வெளிநாட்டு தலைவருடன் நடைபெறும் அக்கூட்டத்துக்கு இன்னல் வந்து விடக்கூடாது என்று உள்துறை அமைச்சர் கருதியிருக்கலாம்.   

ஆகவே “ஹிந்தியைத் திணிக்க மாட்டோம். என் பேச்சு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது” என்று உள்துறை அமைச்சர் அறிவித்தார். அதற்கு முன்பே தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அப்போது, “மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்காது. மத்திய அரசின் சார்பில் அந்த உறுதியை நான் தருகிறேன். நீங்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூட, எனது இந்த உறுதிமொழியை வெளிப்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார். 

இதன் விளைவாக ஆளுநரைச் சந்தித்து விட்டு வந்த ஸ்டாலின், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்று தி.மு.கவின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு இப்போது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. “உள்துறை அமைச்சரின் விளக்கத்தால் தள்ளி வைப்பா” அல்லது “கவர்னரின் மிரட்டலால் தள்ளி வைப்பா” என்று சமூக வலைதளங்களில் தி.மு,கவின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது குறித்த ‘மீம்ஸ்கள்’ தலைப்புச் செய்திகளாகி இருக்கிறது.  

ஆனால், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், நேருவின் உறுதிமொழி போய் இப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதிமொழி வந்திருக்கிறது. “ஹிந்தியைத் திணிக்க மாட்டோம்” என்ற மத்திய உள்துறை அமைச்சரின் உறுதிமொழியை வைத்தே, ஆளுநர் இந்த உறுதிமொழியைக் கொடுத்துள்ளார். ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பது தி.மு.க அரசியல் என்றால்,  ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது பா.ஜ.கவின் தேர்தல் அரசியல்.  

 இரு கட்சிகளின் தேர்தல் அரசியலும் தொடருவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது. எந்த உறுதிமொழியும் ஹிந்தி மொழி, இந்திய அரசு நிர்வாகத்தில் சிம்மாசனத்தில் அமருவதையும் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலம் ஒரு கட்டத்தில் நீக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது என்பதே இன்றைய அரசியல் நிலவரம்.

1938இல் தொடங்கிய மொழிப் போராட்டம் தமிழகத்தைப் பொறுத்தவரை இடைவெளி விட்டுத் தொடருவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.    ஆனால், 1965களில் ஆட்சி மாற்றத்துக்கு ஹிந்தி மொழி எதிர்ப்புக கை கொடுத்தது போல், இனி வரும் தேர்தல்களில் கை கொடுக்குமா?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .