2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

‘5 மாணவர்கள் கடத்தலுக்கும் அரசே பொறுப்புக்கூறவேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெஹிவளையில், கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள, 5 மாணவர்களையும் கடற்படையினரே கடத்தி, சித்திரவதை முகாமில் தடுத்து வைத்திருந்தனர் என்பது மனுதாரர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதனால், இந்தக் கடத்தலுக்கு அரசே பொறுப்புக்கூறவேண்டும் என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.  

தெஹிவளையில் வைத்து, 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம்  திகதியன்று இரவு 10 மணியளவில், கடந்தப்பட்ட ஐந்து மாணவர்களில் மூவர்  தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான எழுத்துமூலமான  சமர்ப்பணத்திலேயே மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது. 

முதலாம் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி  வெலியமுனவும் 2ஆம் மற்றும் 3ஆம் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான  அச்சலா செனவிரத்ன மற்றும் தர்மஜா தர்மராஜா ஆகியோரின் அனுசரனையில் சிரேஷ்ட  சட்டத்தரணி கே.வி. தவராசாவும் ஆஜராகியிருந்தார். 

மனுதாரர்களின் சட்டத்தரணிகளான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.  தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி வெலியமுன ஆகியோரால், சமர்ப்பிக்கப்பட்ட  அந்தச் சமர்ப்பணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

தமிழ் இளைஞர்கள் மூவரும், அவர்களது நண்பர்களான முஸ்லிம்  இளைஞர்கள் இருவரும் பயணம் செய்த வாகனத்தோடு, தெஹிவளையில் வைத்து, 2008 ஆம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டனர்.  

கடத்தப்பட்ட, 17 வயதான மாணவன் ராஜீவ் நாகநாதன் சார்பில்  அவரது தாயார் சரோஜா நாகநாதனும், பிரதீப் என்ற மாணவன் சார்பில் அவரது  தந்தையார் விஸ்வநாதனும், மாணவன் திலகேஸ்வரன் சார்பில் அவரது தாயார் காவேரி ராமலிங்கத்தையும் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா ஆட்கொணர்வு மனுக்களைத்  தாக்கல் செய்திருந்தார்  

தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள், மேன்முறையீட்டு  நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில், சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை  சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு, மேன்முறையீட்டு  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த ஆட்கொணர்வு மனுக்களின் விசாரணைகள், கொழும்பு பிரதான  நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட பின்னர் விசாரணை முடிவில்  எழுத்து மூலமான சமர்ப்பணங்கள், மனுதாரர்களின் சட்டத்தரணிகளால்  சமர்ப்பிக்கப்பட்டன. 

அந்த சமர்ப்பணத்தில்,  

ஐந்து இளைஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு  மனுக்களில், மாணவன் ராஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதனும், பிரதீப்  விஸ்வநாதன் சார்பில் அவரது தந்தையார் விஸ்வநாதனும் மாணவனான திலகேஸ்வரன்  ராமலிங்கம் சார்பில் அவரது தாயார் காவேரி ராமலிங்கமும் நீதிமன்றில்  சாட்சியமளித்திருந்தனர். 

அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா, கடற்படையை சேர்ந்த ஜோன் கொத்தலாவெல, அலுத் கெதர  உபுல் பண்டார, அட்ரியன் சம்பத் ஆகியோர் மனுதாரர்களின் முக்கிய  சாட்சியாளர்களாக சாட்சியமளித்தனர். இதற்கிணங்க, கொழும்பு பிரதான நீதவான்  நீதிமன்றில் விசாரணை இடம் பெற்றது. 

விசாரணையின் போது, மாணவனான ரஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதன் சாட்சியமளிக்கையில், 

“எனது ஒரே மகனான ரஜீவ் நாகநாதன், மருத்துவக் கல்விக்காக, 2008  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியன்று, வெளிநாடு செல்ல இருந்தார்.  எனினும், அதற்கு முதல்நாளான செப்டம்பர் 17ஆம் திகதி இரவு, தனது  நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக, நண்பர்கள் நால்வரையும் அழைத்துக்  கொண்டு கொழும்பு நோக்கிச் சென்றுள்ளார். 

செல்லும் வழியிலேயே, அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு, அவர்கள் கடத்தப்பட்டு விட்டதாக எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. 

அதில், கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கொமாண்டர்  சம்பத் முனசிங்க, ஹெட்டியாராச்சி உட்பட கடற்படையைச் சேர்ந்த நால்வரே  தங்களைக் கடத்தி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்திருப்பதாக,  எனது மகன் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்திருந்தார். 

எனது மகன், 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2009 ஆம்  ஆண்டு மே மாதம் வரையில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட  வண்ணமிருந்தார்.  

இந்நிலையில், எனது கணவரை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட  அண்ணாச்சி என்றழைக்கப்படும் சமந்த மற்றும் மொஹமட் அலி என்பவர்கள், உனது  (எனது) மகனையும் மற்றைய நான்கு இளைஞர்களையும் கடற்படையினரே  கடத்தியுள்ளனர் என்றும் நால்வரையும் தங்களால் விடுவிக்க முடியும் என்றும்  அதற்காக, ஒரு கோடி ருபாய் பணம் தருமாறும் கோரினர்” என்றும் தனது  சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார். 

புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிஷாந்த டி சில்வா சாட்சியமளிக்கையில்,  

தெஹிவளையில், வைத்து கடத்தப்பட்ட மாணவர்கள் ஐவர் உட்பட  கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 6 பேருமாக மொத்தம் 11 பேர், கடற்படையினரால்  கடத்தப்பட்டு முதலில் சைத்திய வீதியிலுள்ள தடுப்பு முகாமிலும் பின்னர்,  திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.  

மாணவர்களை விடுதலை செய்வதற்கு, கப்பமாக ஒவ்வொருவரிடமும் ஒரு  கோடி ரூபாய் கப்பம் கோரியமைக்கான சான்று காணப்படுவதாக, தனது சாட்சியத்தில்  தெரிவித்தார்.  

42 சாட்சியங்களை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் சைத்திய  வீதியிலுள்ள தடுப்பு முகாமையும் திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை  சித்திரவதை முகாமையும் தனது தலைமையிலான விசாரணைக்குழு சென்று  பார்வையிட்டு, விசாரணை நடாத்தியதில் வெளிவந்த சான்றுகளின் அடிப்படையிலேயே  சாட்சியம் அளிப்பதாக சாட்சிமளித்தார். 

மாணவர்கள் ஐவர் கடத்தப்பட்டு, காணாமற்போன சம்பவத்துடன்  கடற்படையை சேர்ந்த லெபட்டினன் கமாண்டர்களான சுமித் ரணசிங்க,  பிரசாத் ஹெட்டியாராச்சி, சந்தன மற்றும் சம்பத் முனசிங்க ஆகிய  நால்வருக்கும் எதிராக சான்று உள்ளதென, தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.  

அவர்கள் அனைவரும், கடற்படை முகாமில் அடைத்து  வைக்கப்பட்டிருந்தமையை, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவும்  முன்னாள் கடற்படை பேச்சாளர் திசாநாயக்கவும் நன்கு அறிந்திருந்ததாகவும் தனது  சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். 

தளபதி வசந்த கரண்ணாகொட நினைத்திருந்தால், இந்த மாணவர்களை விடுதலை செய்திருக்கலாம் எனவும் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். 

இதேவேளை, திருகோணமலையிலுள்ள கடற்படையினரின் இரகசியத் தடுப்பு  முகாமில் பெரும் தொகையான எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள்  கண்டெடுக்கப்பட்டனவென, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப்  பிரிவின் பொறுப்பதிகாரியினால், இந்த நீதிமன்றத்துக்கு பாரப்படுத்திய  பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

திருகோணமலையில் கன்சைட் இரகசிய தடுப்பு முகாமும் மற்றும்  முல்லைத்தீவில் கோட்டாபய இராணுவ வதைமுகாமும் இயங்கியதாக சான்றுகள் மூலம்  வெளிக் கொண்டுவரப்பட்டது. கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டவர்கள், இவ்விரு  வதை முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை அரச அதிகாரிகளின்  சாட்சியத்தின் மூலம் முதன்முதலாக, இந்த நீதிமன்றில் வெளிக்கொண்டு  வரப்பட்டது. 

கடத்தப்பட்ட 5 இளைஞர்களும், லெப்டினன் கொமாண்டர் ரணசிங்க  பெடிகே, சுமித் ரணசிங்கவின் கட்டுப்பாட்டிலிருந்த, திருகோணமலை இரகசிய  தடுப்பு முகாமில், தடுத்து வைக்கப்பட்டமை ஜோன் கொத்தலா வெலகுமாரவின்  சாட்சியத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இளைஞர்கள் ஐவரும் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு திருகோணமலை இரகசியத் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர்,  கொழும்பு கோட்டைக்கு அருகாமையில், சைத்திய வீதியில் அமைந்துள்ள  ‘பிட்டுபம்புவ’ என்ற இடத்தில் லெப்டினன் கேர்ணல் பிரசாத்  ஹெட்டியாராச்சியின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், என்பது  அலுத் கெதர உபுல் பண்டாரவின் சாட்சியத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஆட்கொணர்வு மனு விசாரணையில் மிக முக்கியமானதும் சட்டரீதியாக  நிரூபிக்கப்பட வேண்டிய விடயங்கள் மனுதாரர்களது சாட்சியங்கள் மூலமும்  குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் குற்றத் தடுப்புப்  பிரிவின் அதிகாரிகளது சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

கடத்தப்பட்ட மாணவர்களை அரச கடற்படையினரே கடத்தியுள்ளதுடன்,  சித்திரவதை முகாமில் தடுத்தும் வைத்திருந்தனர் என்பவை மனுதாரர்களின்  சாட்சியம் மட்டுமின்றி, அரச அதிகாரிகளின் சாட்சியத்தின் மூலமும்  நிரூபிக்கப்பட்டுள்ளன. 

எனவே, கடற்படையினரே மாணவர்களை கைது செய்துள்ளனர். மாணவர்கள்  கடற்படையினரின் அதாவது அரச கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.  தொடர்ந்தும் அரச கட்டுப்பாட்டில் உள்ளனர். 

எனவே, இதற்கு பொறுப்புக்கூற அரசு கட்டுப்பட்டுள்ளது என  மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்க போதிய சான்றுகள் இந்த  ஆட்கொணர்வு மனுக்களின் விசாரணையில் வெளிக்கொண்டு வரப்பட்டது என்று எழுத்துமூல  சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X