2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இராஜதந்திரிகளைச் சந்தித்தது த.தே.கூ

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பை மய்யமாகக் கொண்ட 15 தூதுவராலயங்களின் இராஜதந்திரிகளை, நேற்று (20) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக, இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில், சிவசக்தி ஆனந்தன், அரசாங்கத்தில் அண்மையில் இணைந்துகொண்ட வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கவில்லை.

இச்சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், "தற்போதைய நிலைமை தொடருமாயின், அது இலங்கையின் நலன்களுக்கு ஆரோக்கியமாக அமையாது என நாம், அவர்களுக்குத் தெரிவித்தோம். ஏற்படக்கூடிய அமைதியின்மை, சட்டமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களாக, சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழ் மக்கள் இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பணிகள், இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம் ஆகியன தொடர்பில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும், கேள்விக்குள்ளாகியுள்ளன என, அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அரசமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், அது தொடர்பான அறிக்கையொன்று, இம்மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. ஆனால், அரசியல் நெருக்கடி காரணமாக, அது சமர்ப்பிக்கப்படவில்லை.

"அரசாங்கமோ, பிரதமர் இல்லாத நிலையில், இவ்வாறான முயற்சிகள் தாமதப்படுவது, ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இலங்கையின் நெருக்கடி தொடர்பாக, இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்த போது, "நாங்கள் என்ன செய்ய முடியுமோ, அதை நாங்கள் செய்வோம்" என அவர்கள் பதிலளித்தனர் எனவும், இரா. சம்பந்தன் இதன்போது வெளிப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .