2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’ஊழல் நிறைந்துள்ள நீங்கள் சிறுபிள்ளைகள்’

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிர்ஷன் இராமானுஜன்

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையில், காரசாரமான விவாதம் நாடாளுமன்றில் நேற்று (16) இடம்பெற்றதுடன், அவர்களைப் பார்த்து,

'சிறுபிள்ளைகள் நீங்கள், ஆனால் ஊழல்கள் உங்களிடத்தில் தான் நிறைந்திருக்கிறது' என, அமைச்சர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச வர்த்தகத்துக்கான இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க உரை நிகழ்த்துகையில், கூட்டு எதிரணி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன்போது குறுக்கிட்ட கூட்டு எதிரணி உறுப்பினர்கள், அமைச்சரை உரைநிகழ்த்தவிடாது கூச்சலிட்டனர்.

தந்தையர்கள் ஊழல் செய்த பணத்தைக் கொண்டு அரசியலுக்கு வந்த சிறுபிள்ளைகள் நீங்கள். என்னிடம் தகவல் வைத்துக்கொண்டுதான் பேசுகிறேன். எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பை வெளியிடாதீர்கள் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நீங்கள் அர்ஜுன் அலோசியஸ்க்கு 44 தடவைகள் அழைப்பு எடுத்தாக சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் அதற்குப் பதில் கூறுங்கள் என்றார்.

நீங்கள் சட்டம் கற்றதும் பிழையான வகையில் தானே? சிவில் வழக்கு விசாரணைக்குரிய விதப்புரைகளில் முதலாவதையும் இரண்டாவதையும் முடியுமானால் கூறுங்களேன் தம்பி? என அமைச்சர் பதிலளித்தார்.

மீண்டும் எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிணைமுறி தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளியுங்கள். கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்காதீர்கள் என்றார்.

'நான் எதற்கும் பதிலளிக்கத் தயார். நாம் நேர்மையாக அரசியல் செய்பவர்கள். தாஜூடீன் என்றொரு விளையாட்டு வீரர் இருந்தார். அவருடனும் முறுகல் ஏற்பட்டு, கொன்றுவிட்டார்கள். அன்றைய ஆட்சி அப்படித்தான் இருந்தது' என அமைச்சர் பதிலளித்தார்.

மீண்டும் எழுந்த நாமல் ராஜபக்ஷ, யாரைச் சொல்கிறீர்கள். யாரென்று தெரிந்தால் பெயரைச் சொல்லுங்கள் என்றார்.

'நான் தொப்பியை மேலே வீசினேன். நீங்கள் ஏன் தலையில் போட்டுக்கொண்டீர்கள். நான் யாருடைய பெயரையும் இங்கே குறிப்பிடவில்லை. தாஜுடீன் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் எல்லாம் பொலிஸார் வசம் இருக்கிறது. கண்ணாடியைப் பாருங்கள். உங்களுடைய கேள்விக்குப் பதில் கிடைக்கும் என அமைச்சர் பதிலளித்து தனது உரையைத் தொடர்ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .