2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கதிர்காமர் கொலை வழக்கு:குறுக்குக் கேள்விகளால் நெஞ்சுவலிக்கிறது

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின், படுகொலை வழக்கில், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியினால் கேட்கப்படும் கேள்விகளால் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக, உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.  

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அவருடைய உத்தி​யோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.   

இந்த படுகொலைதொடர்பில், சட்டமா அதிபரினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டம்மான், சார்ள்ஸ் மாஸ்டர், முத்தையா சகாதேவன் மற்றும் சிதோர் ஆரோக்கிய நாதன் ஆகிய ஐவருக்கும் எதிராக, கொழும்பு ​மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.   

2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவுக்கு, வந்ததன் பின்னர், முதல் மூன்று பிரதிவாதிகளின் பெயர்களும், குற்றச்சாட்டுப் பத்திரத்திலிருந்து அகற்றப்பட்டது.   

நான்காம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகளான முறையே, முத்தையா சகாதேவன், சிதோர் ஆரோக்கியநாதன், ஆகிய இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, மற்றொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த வழக்கு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில், நீதிபதி பியசேன ரணசிங்க முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   

இந்த வழக்கில், 2ஆம் பிரதிவாதியின், விசாரணையில், அரச சாட்சியாக, சாட்சியமளிக்க, அரச தரப்பால் அழைக்கப்பட்ட, உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்தனவின் சாட்சியத்தை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி எம். நவாவி நெறிப்படுத்தினார்.   

அதன்போது, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சாந்த, 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி, பிரதிவாதியான சிதோர் ஆரோக்கியநாதனை தன்முன்னிலையில், வைத்திய பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்தினார்.  

பிரதிவாதியான சிதோர் ஆரோக்கியநாதனிடம் வினவியபொழுது பொலிஸார், பொல்லினால் தன்னை தாக்கியதாக கூறினார். எனினும், பிரதிவாதியின் உடலை, தான் சோதனைச் செய்தபொழுது, பொலிஸார் தாக்கியதற்கான, எந்தக் காயங்களோ அல்லது தழும்புகளோ காணப்படவில்லையென சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்தார். அதனையடுத்து, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை, அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கையளித்தார்.   

அதனையடுத்து, இந்த வழக்கில், 2 ஆம் பிரதிவாதியின் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜரானார். சிரேஷ்ட சட்டத் தரணிகளான தர்மஜா தர்மராஜா, அனோமா பிரியதர்சினியின் ஆலோசனையில், ட​பேரில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்தனவின் சாட்சியத்தை குறுக்குவிசாரணை செய்தார்.   
அரச சட்டத்தரணியின் கேள்விக்களுக்கு, நீ பதிலளிக்கும் போது, பிரதிவாதியின் (சிதோர் ஆரோக்கியநாதன்) உடல் சோதனை செய்த பொழுது, பொலிஸார், தாக்கியதற்கான எந்தக் காயங்களோ அல்லது தழும்புகளோ பிரதிவாதியின் உடலில் காணப்படவில்லையென சாட்சியமளித்துள்ளீர்.  

ஆனால், 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதியன்று, குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சாந்த, இந்த பிரதிவாதியை வைத்திய பரிசோதனைக்காக, உமக்கு முன்னிலைப்படுத்திய பொழுது, தடிகளாலும் கேபல் வயர்களாலும், இரும்பு கம்பிகளினாலும் தாக்கி, பொலிஸார் பிரிதிவாதியை சித்திர​வதைப்படுத்தியுள்ளனர்.  

அவ்வாறு, சித்திவதை புரிந்ததால், இந்த பிரதிவாதியின் உடலில் 13 தழும்புகள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டிருந்தீர்.  

ஆனால், உண்மையை மறைத்து பொலிஸ் சார்பாக சாட்சியமளிக்கும் நோக்கில் உண்மைக்கு மாறாக, சட்ட வைத்திய அறிக்கையை தயாரித்தது மட்டுமன்றி, பொய்ச் சாட்சியமும் அளித்துள்ளீர் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா சாட்சியை பார்த்து​ கேட்டார்.   

இதற்கு பதிலளித்த உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்தன, பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் கேள்விகளால், தனக்கு மார்புவலி ஏற்படுவதாக தெரிவித்தார்.  

தனது கேள்விகளை அடுக்கிய, சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, கௌரவமான வைத்தியத் தொழில்புரியும் நீர், சத்தியம் செய்து நீதிமன்றில் உண்மையை மறைத்து, அரசுக்கு சார்பாக, பொய்சாட்சி சொன்னால் நெஞ்சு வலி வரத்தான் செய்யும் எனக் கூறினார்.   

இதன்போது, குறுக்கிட்ட விசேட மேல் நீதிமன்றத்தின், நீதிபதி பியசேன ரணசிங்க, எந்த ஆதாரத்தின் அடிப்படையில், சட்ட வைத்திய அதிகாரியை கேள்விக்கு உட்படுத்துகின்றீர் என வினவினார்.   

அதன்போது, தன்னுடைய மேலதிக வாதத்தை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா,  சட்டமா அதிபரினால் இந்த வழக்கு, 2008 ஆம் ஆண்டு, நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வேளையில், பிரதிவாதி தரப்பில் ஆஜராகிய, நான் இந்த வழக்கின் 2ஆம் பிரதிவாதியை (சிதோர் ஆரோக்கியநாதன்) சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்படுத்தி, வைத்திய அறிக்கையை கோரும்மாறு, இந்த நீதிமன்றில் விண்ணப்பித்தேன்.  

எனது வேண்டுகோளையடுத்து, 2ஆம் சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் கொண்டுசென்று, சட்டவைத்திய அறிக்கையை பெறுமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  

இந்த வழக்கின், 2 ஆம் பிரதிவாதி, வைத்திய அதிகாரி சமீர குணவர்த்தன முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  

வைத்திய சோதனையின் பின்னர், உதவி சட்ட வைத்திய அதிகாரியினால், இந்த நீதிமன்றுக்கு, சட்ட வைத்திய அறிக்கையும் அனுப்பப்பட்டது. அதில், பிரதிவாதியின் உடலில் 23 காயத் தழும்புகள் உள்ளன.   

இந்த காயத் தழும்புகளில், 12 காயத் தழும்புகள் பொல்லுகளாலும் கேபல் வயர்களாலும், இரும்பு கம்பிகளினாலும் பொலிஸார் தாக்கியதால் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் காயத்தழும்புகள், பிரதிவாதியை, பொலிஸார், தங்களுடைய, கட்டுப்பாட்டில் தடுத்து வைத்து விசாரித்த காலத்திலேயே ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், 2000ஆம் ஆண்டு பிரதிவாதி, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதனால், உடலில் 11 தழும்புகள் உள்ளதாகவும், எதிரியின் உடலில் மொத்தமாக, 23 காயத் தழும்புகள் உள்ளன என்றும் சட்டவைத்திய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது  

இந்த நீதிமன்றின் கட்டளையின் பிரகாரம் பிரதிவாதியை, வைத்திய சோதனை செய்து, இந்த நீதிமன்றுக்கு சட்ட வைத்திய அதிகாரி சமீர குணவர்த்தனவினால் அனுப்பப்பட்ட, சட்ட வைத்திய அறிக்கை, இந்த வழக்குக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது.  

ஆனால், அரச தரப்பில் சாட்சியமளிக்கும், இந்தச் சாட்சி, சட்ட வைத்திய அறிக்கையில், பிரதிவாதியின் உடலில் எந்த விதமான காயத் தழும்புகளும் உள்ளதாக குறிப்பிடவில்லை. பொலிஸார் தாக்கியதால் பிரதிவாதியின் உடலில் நிரந்தரமாக, ஏற்பட்டுள்ள காயத்தழும்புகளை இன்றும் இந்த நீதிமன்றம் பார்வையிடலாம் என தனது வாதத்தை நிறைவுசெய்தார்.  

அதையடுத்து, அந்த வழக்கு, மேதிக விசாரணைக்காக, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .