2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நக்கில்ஸ் மலைத்தொடரின் நிலப்பகுதிகள் தனியாருக்கு தாரைவார்ப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாச

உலக மரபுரிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள நக்கில்ஸ் மலைத்தொடரின் சில நிலப்பகுதிகள் (காணிகள்) தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித கவிரத்ன, காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

நக்கில்ஸ் மலைத்தொடர் மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் உள்ள காணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஒருசில தனிநபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக, அவர் காணி அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த காணிகளில், ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பண்ணை ஒன்றை அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சுமார் 900 ஏக்கர் காணி, நக்கில்ஸ் மலைத்தொடரின் மாத்தளை மாவட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில், வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நக்கில்ஸ் மலைத்தொடரின் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் காணி வெவ்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கென பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவைகள் முன்னைய மற்றும் இந்நாள் அமைச்சர்கள் சிலரின் உறவினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சூழலியலாளர் சஜீவ தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றினால், நிர்வகிக்கப்பட்டு வந்த காணிகளே இவ்வாறு தனிநபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்கில்ஸ் மலைத்தொடரின் சுமார் 20ஆயிரம் ஏக்கர் காணி இவ்வாறு அழிவுக்குள்ளாகியுள்ளமையால், மொரகஹகந்த நீர்த்தேக்கம் மற்றும் களு கங்கை நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கும் நீரின் அளவு குறைவடையுமென சூழலியலாளர் சஜீவ வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .