2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பியசேனவின் இடையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுப்பது ஒத்திவைப்பு

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கீதா எம்.பி விவகாரம் தொடர்பிலான வழக்குத் தீர்ப்பை எதிர்த்து, அவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, பியசேன கமகேயினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இந்த இடையீட்டு மனுவை, எதிர்வரும் 7ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கீதா குமாரசிங்க சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வாவும், பியசேன கமகேவின் சார்பில் வழக்கறிஞர் சுரேன் பெர்ணான்டோ நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய மூன்று நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு, அழைக்கப்பட்ட போதே, அம்மனுவை பரிசீலனைக்கு உட்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.  

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இல்லாமல் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கீதாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவுக்கே, பியசேன கமகே இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

கீதாவின் மேன்முறையீட்டு மனுவில், பிரதிவாதியாக தன்னையும் குறிப்பிடாமையால், தனக்கும் இடையூடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு, காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, இடையீட்டு மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.  

கீதா குமாரசிங்ஹ, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 3ஆம் திகதியன்று தீர்ப்பளித்திருந்தது.   

அந்தத் தீர்ப்பின் பிரகாரம், வெற்றிடமாகும்
எம்.பி பதவிக்கு, விருப்பு வாக்குப்பட்டியலில் அடுத்ததாக இருக்கின்ற தன்னையே நியமிக்கவேண்டும். அதுவே சட்டத்தின் அடிப்படையில் இருக்கின்ற உரிமையாகும். அந்த விவகாரத்தை சட்டத்தரணியின் ஊடாக தெளிவுபடுத்த வேண்டுமென பியசேன கமகே, உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார். 

கீதா குமாரசிங்ஹவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவில், பிரதிவாதியாக தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. அது, உயர்நீதிமன்றத்தின் சட்ட ஒழுங்குவிதிகளை மீறுகின்ற செயற்பாடாகும். ஆகையால், அவரின் மேன்முறையீட்டு மனுவை நிராகரிக்கவேண்டுமென, இடையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கீதா குமாரசிங்கவின், மேன்முறையீட்டு மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரணைகள் நிறைவடையும் வரையிலும், அவருக்காக எந்தவோர் உறுப்பினரையும் நியமிப்பதற்கு தடைவிதித்து, உயர்நீதிமன்றம் மே மாதம் 5ஆம் திகதியன்று விதித்திருந்த கட்டளையை இரத்துச்செய்யுமாறும், பியசேன கமகே தன்னுடைய இடையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கீதா குமாரசிங்க, இலங்கை மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தமையால், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு அவருக்கு தகுதியில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .