2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’போதையை எதிர்க்க புதிய சட்டங்கள்’

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

நாட்டில் காணப்படும் போதைப்பொருள் பிரச்சினையை இல்லாது செய்வதற்காக, இவ்வாண்டில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுத் தெரிவித்தார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால், போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"சட்டச் சீர்திருத்தங்கள், பிரதான பங்கை வகிக்கின்றன. போதைப்பொருள் கடத்தலையும் பாவனையையும் தடுப்பதற்கு, சட்டத்தைப் பலப்படுத்துவதற்கான சில படிகளை, அரசாங்கம் எடுக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இது போதுமானதன்று. போதைப்பொருட்களின் சட்டவிரோத இறக்குமதியைத் தடுப்பதற்கு, மேலும் கடினமான சட்டங்கள் தேவைப்படுகின்றன.

"இவ்வாறான குற்றவாளிகளை, சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதா இல்லை பொலிஸாருக்கு விசேட அதிகாரங்களை வழங்குவதா என்பது தொடர்பில் நாங்கள் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் சம்பந்தமான வழக்குகள், எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றியும் ஆராய வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கு நீண்டு சென்றால், குற்றவாளிகளுக்குச் சாதகமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

"இலங்கையைப் பொறுத்தவரை, அதிகளவில் பயிரிடப்படுவது, கஞ்சா ஆகும். சட்டவிரோதமான இந்தப் பயிரிடுதலைக் கட்டுப்படுத்துவதற்கு, பொலிஸாரும் விமானப் படையினரும் விசேட அதிரடிப் படையினரும் பணியாற்றி வருகின்றனர். சட்டத்துக்குப் புறம்பான இந்தப் பயிரிடுதலைக் கட்டுப்படுத்துவதற்கு, இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டுமா என, நாம் தீர்மானமெடுக்க வேண்டும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், போதைப்பொருட்களின் பாவனை, கிராமங்களுக்கும் சென்றுள்ளதாகவும், இது மிகப்பெரிய பிரச்சினையாகுமெனவும் தெரிவித்தார். அத்தோடு, போதைப்பொருட் பாவனை தொடர்பில், ஊடகங்களில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .