2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பௌத்தத்துக்கான முன்னுரிமையை ஒழிக்க இடமளியேன்’

Editorial   / 2017 ஜூலை 07 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழிநடத்தல் குழுவில் ஆராயப்படும் விடயங்கள் அரசமைப்பு சபைக்கு முன்வைக்கப்படும். எமக்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு அவை குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறது. அவற்றை நாம் வெளியிடவில்லை. பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ தயாரில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (06) தெரிவித்தார்.

“பௌத்த மதத்துக்குத் தொடர்ந்தும் முதலிடம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் ஜனாதிபதியும் இருக்கிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து மகா சங்கத்தினருக்கும் அறிவித்திருக்கிறோம்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.  

அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஐக்கிய இலங்கை, பௌத்தத்துக்கு முதலிடம் என்ற ஷரத்துக்கள் நீக்கப்பட்டு புதிய பதங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அடுத்து, சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதன்போது, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (06) கடற்றொழில் நீர்வள உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்த்தன,  

ஐக்கிய இலங்கையென்ற பதம் நீக்கப்பட்டு “ஒருமித்த நாடு” என்று, தமிழில் கூறி அப்பதம் இணைக்கப்பட்டிருப்பதாகவும், அரசியலமைப்பில் பௌத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முதலிடம் புதிய யோசனையில் நீக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.  

அப்போது, குழுக்களின் பிரதித்தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான செல்வம் அடைக்கலநாதனே, சபைக்குத் தலைமைதாங்கி கொண்டிருந்தார். 

“இன்று, கடல் தொடர்பிலே பேசுகின்றனர். நீங்கள், வேறொரு விடயத்தை கதைக்கின்றீர்கள்” அது தவறு, என்று பலமுறை சுட்டிக்காட்டினார். எனினும், அவருடைய அறிவுரையை கேட்காத தினேஷ் எம்.பி, “புதிய அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்ற ஷரத்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் இது நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டுக்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்தும்” என்றும் குற்றஞ்சாட்டினார். 

இதனிடையே ஆளும் தரப்பினரும் தமது தரப்பு நியாயத்தை முன்வைத்தமையால், ஒன்றிணைந்த எதிரணிக்கும், ஆளும்தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கடுமையான வாதப் பிரதிவாதங்களிலும் கூச்சல் குழப்பங்களிலும் ஈடுபட்டதனால் சபையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஒரு தருணத்தில் ஏற்பட்டது.  

சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கட்டளைகளை உறுப்பினர்கள் செவிமடுக்காததால் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபாபீடத்துக்கு வந்தார். அவர், சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 

அப்போது உரையாற்றிய தினேஷ் குணவர்த்தன எம்பி, “மகா சங்கத்தினர் என்ன கூறினாலும் புதிய அரசமைப்பு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். ஐக்கிய இலங்கை என்ற நிலைக்கோ நாட்டில் தற்பொழுது உள்ள நிலைமைகளுக்கோ புதிய யாப்பின் ஊடாக பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.  

ஆனால், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதியன்று இடம்பெற்ற அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான செயலகத்தால் நடத்தப்பட்ட அரசமைப்பு மறுசீரமைப்பு பற்றிய மாநாட்டில் புதிய அரசமைப்பு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் ஐக்கிய இலங்கை என்ற பதம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒருமித்த நாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதன் காரணமாகவே மகா சங்கத்தினர் புதிய யாப்புக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். பிரதமர் தலைமையில் நடந்த மாநாட்டிலே இந்த அறிக்கை குறித்து ஆராயப்பட்டது. இதனை மறுக்க முடியாது” என்றார்.  

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவான அநுரகுமார திஸாநாயக்க, “புதிய அரசமைப்பு தொடர்பில் இதுவரை எந்த இணக்கமும் எட்டப்படவில்லை. வழிநடத்தல் குழுவின் அறிக்கையை நாடாளுன்றத்தில் சமர்ப்பிக்காமல் வேறு எந்த இடத்திலும் வெளியிட அனுமதி கிடையாது. அறிக்கை பூர்த்தியாகாத நிலையில் இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட யார் அனுமதி வழங்கியது” என்றும் வினவினார். 

“இதேவேளை, அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான செயலகத்தின் ஊடாக 28ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது முற்றிலும் தவறானதாகும்” என்றார். 

இதனிடையே எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “வழிநடத்தல் குழுவில் ஆராயப்படும் விடயங்கள் அரசமைப்பு சபைக்கு முன்வைக்கப்படும். எமக்குப் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அவை குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறது. அவற்றை நாம் வெ ளியிடவில்லை. பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ தயாரில்லை” என்றார்.  

“நிலையியற் கட்டளையின் பிரகாரம் வழிநடத்தல் குழுவினால் மட்டுமே அறிக்கை வெளியிட முடியும். இதனூடாக இதுவரை இரண்டு அறிக்கைகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். இதுதவிர வழிநடத்தல் குழுவினால் வேறு எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நாம் வெளியிட்ட இரு அறிக்கை தவிர வேறு ஏதும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு இருந்தால் அது குறித்து ஆராயத் தயாராக இருக்கிறோம்” என்றார். 

 குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் தென்னாபிரிக்க யாப்பைத் தயாரித்த முன்னாள் பிரதி பிரதம நீதியரசர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புதிய யாப்பு திருத்தம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. பிரதமருடன் நானும் இதில் கலந்துகொண்டேன். தினேஷ் குணவர்த்தன கூறுவது போன்று எந்தவோர் அறிக்கையும் இங்கு வெளியிடப்படவில்லை. இவர் தவறான அறிக்கையொன்றையே காட்டி தினேஷ் எம்.பி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்” என்றார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .