2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மஹிந்தானந்தவின் கடவுச்சீட்டு விடுவிப்பு

Thipaan   / 2017 ஜூன் 28 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (27) உத்தரவிட்டது. 

ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸில், 3.9 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

2011, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் முறையே 1மில்லியன் ரூபாய், 1.9 மில்லியன் ரூபாய், 1 மில்லியன் ரூபாய் பணத்தை தமது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தினார் என்று அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. 

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள சங்கத்திலிருந்து, நாவலப்பிட்டியவிலுள்ள வங்கிக் கிளையொன்றுக்கே அவர், மேற்குறித்த பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது. 

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேவர்தன முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமது சேவை பெறுநர், அவருடைய மகனின் மேற்படிப்பு தொடர்பில், அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும், விஸா பெறுவதற்காக கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, மன்றில் கோரிநின்றார். 

அத்துடன், அதிகுற்றப்பத்திரத்தில் சில தவறுகள் காணப்படுவதாகவும் அவை திருத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட சட்டத்தரணி இந்ததிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் வைத்திருப்பது தொடர்பான தொகுப்புரையொன்றை சமர்ப்பிக்க அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

விஸா பெற்றுக்கொள்வதற்காக, கடவுச்சீட்டை விடுப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அதிகுற்றப்பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார். 

அதனையடுத்து, கடவுச்சீட்டை விடுவிக்குமாறு, நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தொகுப்புரையை அடுத்த அமர்வில் ஆற்றுப்படுத்துமாறு உத்தரவிட்டதுடன், வழக்கை ஜூலை 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

இதேவேளை, இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில், மார்ச் மாதம் 30ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி ஆஜராகியிருக்கவில்லை என்று முறைப்பாட்டாளர் தரப்பினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டபோது, வழக்கை நேற்றைய திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினத்தில் மன்றில் ஆஜராகுமாறு, மஹிந்தானந்த எம்.பிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அதன்அடிப்படையில், அவர், கடந்த மே மாதம் 22ஆம் திகதி, 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .