2024 மே 08, புதன்கிழமை

’மாகாணசபைத் தேர்தல்; பழைய முறைக்குச் செல்லோம்’

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ. ஜயசேகர

மாகாணசபைத் தேர்தலை, பழைய முறையிலோ அல்லது அதிக விமர்சனத்துக்குள்ளான விருப்பு வாக்கு முறையிலோ அரசாங்கம் நடத்தாது எனத் தெரிவித்துள்ள, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, எனினும், 1988ஆம் ஆண்டின் மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையின் நடத்துவதற்கு, அமைச்சர் சம்மதித்துள்ளார் என வெளியாகிய ஊடக அறிக்கைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், தானோ அல்லது ஜனாதிபதியோ, அவ்வாறான முன்மொழிவுக்குச் சம்மதிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, பழைய முறையிலான தேர்தல் திட்டத்தை ஒழிப்பதாக, அப்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட உறுதிமொழியை ஞாபகப்படுத்திய அமைச்சர் முஸ்தபா, அதனால், பழைய முறைக்குச் செல்வதற்குத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார்.

"சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக, புத்தாண்டுக்கு முன்னர், கட்சித் தலைவர்களைச் சந்தித்தேன். பழைய முறையில் தேர்தல்களை நடத்துமாறு, அங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால், கருத்தொருமைப்பாடு ஏதும் ஏற்படவில்லை" என்று, அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் மக்கள் விடுதலை முன்னணியும், அச்சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் அச்சந்திப்பில் கலந்துகொண்டோர், 1988ஆம் ஆண்டின் மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளச் சம்மதித்தனர் என்று குறிப்பிட்டார்.

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, வட்டார முறையும் விகிதார முறையும் கலந்த முறையிலேயே, மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறுமென, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆளுநர்களின் ஆட்சியில் காணப்படும் இந்த 3 சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீளாய்வு தொடர்பான அறிக்கை, விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும், அது தொடர்பான விவாதத்துக்கான திகதியைக் குறிப்பதில், இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X