2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக ஏழு மாணவர்களுக்கு தடை விதிப்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 29 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் களுக்கு இடையில்  இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏழு மாணவர்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளைப் பல்கலைக்கழகப் பேரவை முடிவு செய்துள்ளது.

 நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்   சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.

பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் ( இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் 4 பேருக்கு நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்குரிய இந்த 7 பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது.

கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தினுள் அவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது,  இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்படும். தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யப்பட்டன.

மேலும், தண்டனைகள்  அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டால், மாணவர் பதிவு இரத்துச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .