2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஸ்திரமற்ற நிலைக்கு நீங்களே சூழ்ச்சிக்காரர்’

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையிலும் செய்யக்கூடிய சகல தலையீடுகளையும் ஆகக் கூடுதலாகவே செய்துவிட்டோம் என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி.,  அரசியல் தேவைக்காக உங்களுடைய சூழ்ச்சியால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, நாட்டுக்குள் இவ்வாறான ஸ்திரமற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்பது எங்களுடைய முடிவாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.  

“ஸ்திரமற்ற தன்மையை இல்லாமற் செயற்வதற்காக, உங்களுடைய தரப்பை அதற்காக செயற்படவைக்கவேண்டிய தேவையே தற்போதுள்ளது. நாட்டுக்காக அந்த நடவடிக்கையை எடுக்கும் வலிமை உங்களுக்கு உள்ளது என நாங்கள் நம்புகிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சகல கட்சித் தலைவர்களுடான சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த ஜே.வி.பி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியிருந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சி முதற்கோலாசானுமாகிய அநுரகுமார திஸாநாயக்க எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

ஜனாதிபதி அவர்களே!  

உங்களுடனான சந்திப்புத் தொடர்பில் உங்களுடைய செயலாளரால் கடந்த 17ஆம் திகதியன்று அனுப்பிவைத்த அழைப்புக் கடிதம் கிடைத்தது. அதற்கு நன்றி. எனினும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பில் உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம் என்று குறிப்பிட்டே, அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றத்தின் த​ற்போதைய நிலைவரம் தொடர்பிலேயே கலந்துரையாடுவதற்கு நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்கள். என்றாலும், அரசியல் தேவைக்காக, உங்களுடைய சூழ்ச்சியால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, நாட்டுக்குள் இவ்வாறான ஸ்திரமற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்பது எங்களுடைய முடிவாகும்.  

இப்போது, நாட்டில் தீவிர அராஜகம் மற்றும் உறுதியற்ற தன்மை உள்ளது. ஏழு தசாப்தங்களுக்கு மேலான எமது நாட்டின் அரசியலில், இந்த உறுதியற்ற தன்மை முதல் தடவையாக ஏற்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக எழுந்தது அல்ல. ஐந்து முக்கிய சம்பவங்களை அடிப்படையாக வைத்தே உருவானது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, நீங்கள் ஒக்டோபர் 26ஆம் திகதியன்று சூழ்ச்சியின் அடிப்படையில் பிரதமராக நியமித்தீர்கள். அதன் பின்னர் பல தடவைகள், நகைச்சுவையூட்டும் வகையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதைத் தடுப்பதற்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறைவுக்குக் கொண்டுவந்தமை. மக்கள் இறைமையின் தலையில் நின்றுகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு பேசிய ஓர் அபத்தமான செயற்பாட்டை முன்னெடுத்தல். அந்த ஏல விற்பனைச் செயற்பாடு இயலாமை போனதன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்தமை. சூழ்ச்சியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு ​எதிராக, நாடாளுமன்றத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, நிறைவேற்றியுள்ள நிலையில், அதற்கமைவாக செயற்பாடுகளை முன்னெடுக்காமல் உங்களுடைய சூழ்ச்சியின் ஊடாக சதிகார அரசியல் இலாபத்துக்காக காத்திருத்தல்.  

இந்த ஐந்து செயல்முறைக்குப் பின்னாலும் உங்களுடைய பிரதான பங்களிப்பு இருந்தது என்பது மக்கள் மத்தியில் வெளிப்படையாகிவிட்டது.  

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனுக்களுக்கு, உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமையை அடுத்து, 14ஆம், 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.  

அந்த மூன்று தினங்களில், உங்களுடைய பிரதமர், அமைச்சரவைக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. மஹிந்த ராஜபக்‌ஷவின் உரைக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.  

மூன்று தடவைகளும் பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துவதற்கு, சபாநாயகர் பலமுறை முயன்றபோதிலும், அம்முயற்சிகளுக்கு உங்களுடைய உறுப்பினர்கள் இடமளிக்காது தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். உங்களுடைய எம்.பிக்கள் குழு, தோல்வியை ஏற்றுக்கொள்வதை நிராகரித்தது. அதனால் நாடாளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டது.  

இதனடிப்படையில், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அனைத்து அராஜக மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியவர் நீங்கள். அதனை உங்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். இந்நிலையில், மேலே குறிப்பிட்ட காரணங்கள் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களிடத்தில் இல்லை.  

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ​பொறுப்பான அரசியல் கட்சி என்றவகையில், எங்களால் இதுவரையிலும் செய்யக்கூடிய சகல தலையீடுகளையும் ஆகக் கூடுதலாகவே நாங்கள் செய்துவிட்டோம். உங்களுடைய தரப்பை அதற்காக செயற்படவைக்கவேண்டிய தேவையே தற்போதுள்ளது. நாட்டுக்காக அந்த நடவடிக்கை எடுக்கும் வலிமை உங்களுக்கு உள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .