2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இயற்கை அனர்த்தங்களினால் 8,690 பேர் பாதிப்பு

Editorial   / 2018 மே 21 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்றுவரையிலும் 10 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  

அந்த மாவட்டங்களில், 2,194 குடும்பங்களைச் சேர்ந்த 8,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால், அவ்வாறான பிரதேசங்களில் சூறாவளி வீசக்கூடும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது. ஆகையால், மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அந்நிலையம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.  

மின்னல் தாக்கம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தமையால், நேற்றுப் பிற்பகல் வரையிலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். ஹொரணை, ஹொரல்லாவத்தையில் உள்ள தியான மண்டபத்திலிருந்த பெண் துறவிகளில் 62 வயதான ஒருவர், மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மற்றுமொரு பெண்துறவி அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 இதேவேளை, ஏதாவது அனர்த்தம் ஏற்படபோகிறதென கண்டறிந்தால், அவைதொடர்பில், 117க்கு உடனடியாக அறிவிக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.  

இந்த சீரற்ற வானிலையால், காலி மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில், போபே பொத்தல, அக்மீமன உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1,960 குடும்பங்களைச் சேர்ந்த 7,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.  

இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை, இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்துள்ளது.  

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில், 150 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்துள்ளதென, அந்த நிலையம் அறிவித்துள்ளது.  

இ​தேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலியூடாக மாத்தறை வரையிலான கடற்பகுதியில், கடலலைகளின் தாக்கம் வெகுவாக அதிகரித்து காணப்படுமென எதிர்வு கூறியுள்ள அந்தத் திணைக்களம், காற்று, மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்பதனால், கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும், மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.  

கடுமையான மழை பெய்வதன் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில், வாகனங்களின் போக்குவரத்து வேகம், மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என, வீதி அபிவிருத்தி அதிகார ​சபை அறிவுறுத்தியுள்ளது.  

இதேவேளை, சீரற்ற வானிலையால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு, இராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்கின்றனர் என்று இராணுவம் அறிவித்துள்ளது.  

இந்நிலையில், தற்போது நிலவுகின்ற சீரற்ற வானிலை, எதிர்வரும் 24 மணிநேரத்துக்கு நீடிக்குமாயின், இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, குருநாகல், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய ஏழு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் தென்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எதிர்வு கூறியுள்ளது.  

இதேவேளை, அம்பலாங்கொட கொபேயின்துடுவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது, மண்திட்டொன்று சரிந்து நேற்று (20) மாலை விழுந்துள்ளது. இதனால், வீட்டுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .