2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நான்கரை வருடங்களுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம்’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பா.நிரோஷ், க.கமல்

நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஜனாதிபதியால், 2018 நவம்பர் மாதம் 9ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 2096/70 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்தத் தீர்மானம், சட்டவிரோதமானமென்றும் அரசமைப்புக்கு முரணானதென்றும் அறிவித்தது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகவும் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு, பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழுவினால், நேற்று (13) வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு, பிரதம நீதியரசர், நீதியரசர்களான புவனெக்க அலுவிஹார, சிசிற டீ அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன எஸ்.ஜயவர்தன, விஜித் கே.மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோரடங்கிய குழுவினரால், ஏகமனதான தீர்ப்பாகவே வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம், 4 வருடங்களையும் 6 மாதங்களையும் பூர்த்தி செய்யும் போதோ அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையைப் பெற்றோ, நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியுமென, நீதியரசர் சிசிற டீ அப்ரூ, தீர்ப்பு அறிவிப்பு நேரத்தின் போது குறித்துக் கூறினார்.

எவ்வாறாயினும், வழக்கின் தீர்ப்பு, பிரதம நீதியரசராலேயே வழங்கப்பட்டது. நீதியரசர்கள் குழாமின் ஏழு நீதியரசர்களது இணக்கப்பாட்டுடன், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதியரசர் சிசிற டீ அப்ரூ மாத்திரம், வேறொரு தீர்ப்பை அறவித்த போதிலும், ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யும் தீர்ப்புக்கு, தானும் இணங்குவதாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமைய, நாடாளுமன்றம், கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி இரவு கலைக்கப்பட்டது. அந்தக் கட்டளைகள் அடங்கிய விசேட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், பல சிவில் அமைப்புகள் உள்ளடங்களாக, 13 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வர்த்தமானிக்கு ஆதரவாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஆறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள், கடந்த 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையிலேயே, நேற்றை தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்றக் கலைப்பு சட்டபூர்வமானதென வலியுறுத்தி, அரசமைப்பின் உறுப்புரைகளை மேற்கோள் காட்டித் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறும் என்றும், நீதியரசர்  சிசிற டீ அப்ரூ மன்றுக்கு அறிவித்தார்.

வாழ்த்துக்கூறிய தினேஷ்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தீர்ப்பை மதித்து, தனதருகே நின்றுகொண்டிருந்த ரவி கருணாநாயக்க எம்.பிக்கு, தினேஸ் குணவர்தன எம்.பி கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக, உயர் நீதிமன்றத்தின் 502ஆவது அறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்களால் நிரம்பி வழிந்திருந்தது.

இந்நிலையில், வெளியில் கீரியும் பாம்பும் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்றாகக் கூடி சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சகலரும் இணங்கிய தீர்ப்பு

இலங்கை வரலாற்றில், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தீர்ப்பில், அப்போதைய பிரதம நீதியரசர் சர்வாணந்தா உட்பட 5 நீதியரசர்கள், 13ஆவது திருத்தம் அரசமைப்பின் ஒருமித்தத் தன்மையை மீறவில்லையெனத் தீர்ப்பளித்திருந்த நிலையில், நீதியரசர் வணசுந்தர உட்பட 4 நீதியரசர்கள், அது ஒருமித்தத் தன்மையை இல்லாமல் செய்கிறதெனத் தீர்ப்பளித்திருந்தனர்.

அதனையடுத்து, தற்போது நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பே, நீதியரசர்கள் குழுவில் சகலரும் முழுமையாக இணங்கி வழங்கிய தீர்ப்பாக அமைகிறது.

சஜித் பிரேமதாச

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும் ஐ.தே.க பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச, இந்நாட்டின் அரசமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென்றும் இன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மிகவும் தூய்மையான தீர்ப்பென்றும், அதற்காக, நீதியரசர்கள் குழாமுக்கு தேசத்தின் கௌரவம் கிட்ட வேண்டுமென்றார்.

அதேபோல், தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாடுபவர்கள், அடுத்தவர்களுக்கு எவ்விதத் தொந்தரவையும்யும் நெருக்கடியையும் கொடுக்காது கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

எவ்வாறாயினும், இந்த நீதிமன்றத் தீர்ப்பால், அரசமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது என்றும் அதற்காக, தமக்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களுக்கு அழிவு ஏற்படும் வகையில் தமது செயற்பாடு அமையாதென்றும் அவர் கூறினார்.
எனவே, சட்டபூர்வமான அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டு,  கடந்த 6 வாரங்களாக நாட்டில் இல்லாது செய்யப்பட்ட அரசாங்கத்தை, மீண்டும் அமைக்க வழிவிட வேண்டும் என்றும், சஜித் பிரேமதாச எம்.பி கோரிக்கை விடுத்தார்.

அநுரகுமார திசாநாயக்க

உலக வரலாற்றில் முதன் முறையாக, அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உரிய பாடம் கற்காத மைத்திரி - மஹிந்த கூட்டின் பயணத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், இந்த தீர்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இனிவரும் ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தை மீறிச் செயற்பட, பொதுமக்கள் இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனநாயகத்தை வெற்றிகொள்ளவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில், இனிவரும் நாள்களிலும், ஜனநாயகத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டங்கள் தொடர வேண்டுமென, அவர் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ

உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள மறுத்த நாமல் ராஜபக்‌ஷ எம்.பி, நீதிமன்றத் தீர்ப்பை மறுக்க முடியாது என்பதாலேயே ஏற்றுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுக்க முடியாது என்பதால் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால், உலகிலுள்ள கட்சிகளில் ஐ.தே.கவே தேர்தல் வேண்டாமென்று உயர் நீதிமன்றத்துக்குச் சென்றிருகிறது என்பதை மறக்கக் கூடாதெனவும் தெரிவித்தார்.

“தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவே, நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், இதற்கு எதிராக மேன்முறையீடுகள் செய்ய முடியாது. மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு, முன்னோக்கிச் செல்லவே எதிர்ப்பார்க்கிறோம். எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் கலந்தாலோசிப்போம்” எனவும், அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதா இல்லையா?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதா, இல்லையா என்பது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடித் தீர்மானிப்போமென, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தை விட்டுச் செல்லத் தயார்

அரசாங்கத்தை விட்டுச் செல்வதற்கு தயாரெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தேர்தலைக் காலந்தாழ்த்த, ஐ.தே.க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர

நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், நீதிமன்றத் தீர்ப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்கமையவே எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும், இந்தத் தீர்ப்புக்கமைய தேர்தல்கள் இரத்தாகும் என்றும் கூறியதோடு, அதனால், இன்று (14) வரும் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .