2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீதி, நியாயம், ஜனநாயகத்துக்காக ’ஜம்பர் அணியவும் தயார்’

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

 

தன்மீது நம்பிக்கை இல்லையென்றால், தனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, தன்னை இப்பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் பதவி விலகத் தயாரென்றும் குற்றம் செய்திருந்தால், நீதி, நியாயம், ஜயநாயகத்துக்காக ஜம்பர் அணியவும் தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று (27) கூடியது. அதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர்,  சபாநாயகர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் ஹன்சாட் அறிக்கை, பொய்யாக எழுதப்படுள்ளது என்றும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துத் தெரிவித்ததோடு, இக்குற்றங்களுக்காக, சிறைக்குச் செல்லவேண்டிய நிலைமை சபாநாயகருக்கு ஏற்படுமென,  ஆளும் தரப்பினர் தெரிவித்ததாகக் கூறினர். இதன்போதே, சபாநாயகர் கரு ஜயசூரிய, மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக, ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான மரிக்கார், “சபாநாயகரின் சான்றுரையுடன் வெளியிடப்பட்டுள்ள ஹன்சாட் அறிக்கையில், சில வசனங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன என்றும் ஒருசில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும், போலி ஆவணமொன்றைத் தயாரித்தால், குற்றவியல் சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவருமென்றும் ஒரு தரப்புக்குச் சார்பான வகையில் பதவி நிலையை பயன்படுத்துவதும் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய குற்றமென்றும், ஆகவே சபாநாயகர், ஜம்பர் அணிவதற்குத் தயாராக வேண்டுமென, உதய கம்மன்பில எம்.பி, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ளாரெனக் கூறினார்.

அத்துடன், அவரது அந்தக் கூற்று உண்மையா? சபாநாயகர் போலி ஆவணத்தைத் தயாரித்தாரா? இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டுமென்பதால், அது தொடர்பான விசாரணையை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக, மரிக்கார் எம்.பி கூறினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நான் குற்றமிழைக்கவில்லை. நீதி, நியாயம், ஜனநாயகத்துக்காக ஜம்பர் அணியவேண்டிய தேவை ஏற்படின், அதைச் செய்வதற்கும் நான் தயார். என் வாழ்க்கையில், என்றுமே நான் மோசடிகளில் ஈடுபட்டதில்லை. விசாரணை நடத்தப்பட்டாலும், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்க நான் தயார். சபாநாயகர் பதவிக்கு நான் தகுதியற்றவன் என்றால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து, என்னை இந்தப் பதவியிலிருந்து நீக்குங்கள். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது” என்றார்.

“போலி ஆவணம் தயாரித்துள்ளதாக, சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. ஹன்சாட் அறிக்கையொன்று, அவ்வாறு பொய்யாகத் தயாரிக்கப்படாது. நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், ஹன்சாட் திணைக்களத்தின் ஆசிரியர், அத்திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் கடமையிலிருக்கும் அதிகாரிகள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர்கள், தவறான வகையில் செயற்பட மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் மீது குற்றஞ்மத்தும் நபர்கள், ஊடகங்கள் முன்னிலையில் பொய்களைக் கூறாது, சாட்சியங்களுடன் வாருங்கள். நாம் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

“நான், கிராமத்தைச் சேர்ந்தவன், எனது உருவத்தை வைத்து கொடும்பாவி எரிப்பதை நான் பெரிதாக கருத்திற்கொள்ளவில்லை. இன்னுமின்னும் கொடும்பாவிகளை எரியுங்கள். அவ்வாறு எரிப்பது, என் மீதான தீய பார்வைகள், தீட்டுக்களை அகற்றிவிடும். ஆகவே,  அதைப் பற்றி நான் கருத்திற் கொள்ளவில்லை” என்றும் சபாநாயகர் கூறினார்.

இதேவேளை, சபையில் உரையாற்றிய ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரின் செயற்பாட்டை மதித்து வாழ்த்துத் தெரிவித்ததுடன், ஜயநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, தனக்கெதிரான சகல அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்தாரெனக் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .