2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வடக்கு - கிழக்கில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடக்கு, கிழக்கு செய்தியாளர்கள்

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல்  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டிருந்தது.

தேரர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் இன்று (24)  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று  நீதிமன்ற நடவடிக்கைளிற்கு சமூகம் அளிக்காத வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர். 

இதனால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வழக்குகளுக்கான நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்தனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலுள்ள சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய கல்முனையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் கல்முனை நீதிமன்ற கட்டட தொகுதி முன்பாக கண்டன எதிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

மேலும், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இன்று காலை ஆரப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டத்தரணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று  (24) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், மன்னார் சட்டத்தரணிகள் முல்லைத்தீவுக்கு சென்றுள்ளனர்.

இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் திரும்பிச் சென்றுள்ளதோடு, வழக்கு விசாரனைகள் மற்றுமொரு நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .