2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அபுமெயாங்கை டொட்டமுண்டிலிருந்து கைச்சாத்திட்டது ஆர்சனல்

Editorial   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டிலிருந்து முன்கள வீரர் பியர் எம்ரிக் அபுமெயாங்கை 56 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட்டுள்ளது.

அந்தவகையில், கபோன் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான பியரி எம்ரிக் அபுமெயாங்குக்கு ஆர்சனல் செலுத்திய விலையே அக்கழகத்துக்கு அதிகமானதாகும். இதற்கு முதல், பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான லயோனிலிருந்து முன்கள வீரர் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயை கைச்சாத்திட ஆர்சனல் செலுத்திய 46.5 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களே ஆர்சனலால் செலுத்தப்பட்ட அதிக தொகையாகும்.

28 வயதான பியர் எம்ரிக் அபுமெயாங்கை ஒப்பந்தம் செய்வதற்கான இரண்டு கோரிக்கைகளை முன்னர் நிராகரித்திருந்த பொரிசியா டொட்டமுண்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சியின் முன்கள வீரர் மிச்சி பச்சுவாயை, எஞ்சியிருக்கும் பருவகாலத்துக்கு கடனாகப் பெற்றமையைத் தொடர்ந்தே, பியரி எம்ரிக் அபுமெயாங்கை ஆர்சனலுக்கு விற்க இணங்கியிருந்தது.

பொரிசியா டொட்டமுண்டுக்காக 213 போட்டிகளில் விளையாடி 141 கோல்களைப் பெற்ற பியரி எம்ரிக் அபுமெயாங்கை நீண்டகால ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதாக ஆர்சனல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆர்சனலின் முன்கள வீரரான ஒலிவர் ஜிரோட்டை, 18 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு 18 மாத ஒப்பந்தமொன்றில் செல்சி கைச்சாத்திட்டுள்ளது. பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான 31 வயதான ஒலிவர் ஜிரோட், ஆர்சனலுக்காக 253 போட்டிகளில் விளையாடி 105 கோல்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரரான றியாட் மஹ்ரேஸை ஒப்பந்தம் செய்வதற்கு 95 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் செலவாகுமென்பதால், அல்ஜீரியா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான றியாட் மஹ்ரேஸை ஒப்பந்தம் செய்வதிலிருந்து, மற்றொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி விலகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .