2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு சவாலை வழங்குமா பங்களாதேஷ்?

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, இந்தூரில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்தில் இந்தியாவும், ஒன்பதாமிடத்திலும் பங்களாதேஷ் காணப்படுகின்ற நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு சவாலை வழங்கியிருந்த பங்களாதேஷானது முதலாவது போட்டியில் வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றாலே அவ்வணிக்கு அது பாரிய வெற்றியாகக் காணப்படும்.

தடை காரணமாக தமதணித்தலைவரும் சகலதுறைவீரருமான ஷகிப் அல் ஹஸனை இழந்துள்ளமை பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் நிச்சயமாக பங்களாதேஷுக்கு தாக்கம் செலுத்தும்.

அதிலும், துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் புதிய அணித்தலைவர் மொமினுல் ஹக், இம்ருல் கைஸ், முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், மொஷாடெக் ஹொஸைன் ஆகியோர் காணப்படுகையில் அதிகம் தாக்கம் இல்லாதபோதும் பந்துவீச்சே அதிகம் இழப்பைச் சந்திக்கப் போகின்றது.

அல்-அமின் ஹொஸைன், அபு ஜயேட், தஜியுல் இஸ்லாம், மெஹிடி ஹஸன் ஆகியோர் இந்தியாவில் வைத்து அதன் துடுப்பாட்டவீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் மிகக் கடினமான பணியை அவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர். ஆகையால், இத்தொடரில் பங்களாதேஷ் எதை அடையப் போகின்றது என்பதை பங்களாதேஷின் பந்துவீச்சாளர்களின் பெறுபேறுகளே தீர்மானிக்கப் போகின்றன.

மறுபக்கமாக, இந்திய அணியைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக பலவீனங்கள் எதுவும் இல்லாதபோதும், தற்போதைய நிலையில் இந்திய அணி ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கப் போகையில் இரவீந்திர ஜடேஜாவே அத்தேர்வாக இருக்கின்ற நிலையில், அதை சவாலுக்குட்படுத்துவதற்கான இரவிச்சந்திரன் அஷ்வினுக்கான மேலுமொரு வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.

இரவீந்திர ஜடேஜாவைப் பொறுத்த வரையில் மிகச்சிறந்த களத்தடுப்பாளர் என்பதற்கு மேலாக சிறப்பான துடுப்பாட்டத்தையும் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வந்த நிலையில், தான் இந்தியாவின் முதன்மைச் சுழற்பந்துவீச்சாளராக மாறுவதற்கு தான் கடந்த காலங்களில் கொண்டிருந்த துடுப்பாட்டவீரரையும் தனக்குள் உயிர்ப்பிக்க வேண்டிய தேவை இரவிச்சந்திரன் அஷ்வினுக்குக் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .