2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியாவுக்குப் பயிற்றுநரா?: மறுக்கிறார் மஹேல

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் பயிற்றுநர் பதவிக்கு, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது என்ற தகவலை, அவர் மறுத்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்றுநராக இருந்த அணில் கும்ப்ளே, அவரது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்தியாவின் புதிய பயிற்றுநரைத் தேடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லையும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் பதவிக்கு, மஹேல ஜெயவர்தன விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் பதவியேற்பார் என்றும் செய்தி வெளியானது.

இந்தச் செய்தி, அதிக முக்கியத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக, இலங்கை அணியின் பயிற்றுநராக வருவதற்கு, மஹேல ஜெயவர்தனவுக்கு வயது அனுபவம் போதாது என, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்த பின்னணியில் இச்செய்தி வெளியாகியிருந்தமையின் காரணமாக, இலங்கையால் பயன்படுத்தப்படாத வளங்களை, இந்தியா, சரியாகப் பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், இந்தச் செய்திக்குப் பதிலளிக்கும் வகையில், தனது டுவிட்டர் கணக்கில் பதிவுகளை இட்ட மஹேல, “இந்திய பயிற்றுவிப்புப் பணியில், என்னையும் தொடர்புபடுத்தும் தகவல்கள் குறித்துப் பெருமையடைகிறேன். ஆனால், முழுநேரப் பணிகள் குறித்து, நான் இப்போது கவனம் செலுத்தவில்லை.

“மும்பை இந்தியன்ஸ், குல்னா அணிகளுடனான எனது தற்போதைய பொறுப்புகள் குறித்து, நான் முழுமையாகக் கவனஞ்செலுத்தியுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை அணியின் பயிற்றுநர் பதவிக்கு, சந்திக்க ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், தற்போதைய நிலையில் அவர், இப்பதவிக்கு வருவதற்குத் தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வேறு 3 பயிற்றுநர்களுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளை நடத்து வருவதாக, திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர்களின் விவரங்களை வெளியிட, அவர் மறுத்துவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .