2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்

Editorial   / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் இடம்பெறும் டென்னிஸ் கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது.

அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் உலகம், இந்தத் தொடரில் யார் வெல்வார்க் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரர்களான அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ஸ்டான் வவ்றிங்கா, கீ நஷிகோரி, மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கெனவே பலர் விலகியிருந்த நிலையில், அன்டி மரேயும், போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் இருக்கையில், தனது விலகலை அறிவித்திருந்தார்.

இதனால், தற்போதைய முதல்நிலை வீரரான ரபேல் நடாலுக்கும், விம்பிள்டன் சம்பியனான ரொஜர் பெடரருக்கும் இடையிலேயே, பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், இருவருமே அரையிறுதிப் போட்டியிலேயே சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த அரையிறுதிப் போட்டியை வெல்பவர், தொடரை வெல்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், செரினா வில்லியம்ஸ், விக்டோரியா அஸரெங்கா ஆகியோர், இத்தொடரில் பங்குபற்றவில்லை. குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால் செரினாவும், குழந்தையின் பாதுகாப்புக்கான கட்டுப்பாட்டை, தனது முன்னாள் துணைவரிடமிருந்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளின் காரணமாக அஸரெங்காவும், இத்தொடரில் பங்குபற்றவில்லை.

இதனால், இத்தொடரை யார் கைப்பற்றுவர் என்பதில், தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, இந்தச் சம்பியன் பட்டத்தை வென்று, ஆண்டின் இறுதியில், முதல்நிலை வீராங்கனையாகும் வாய்ப்பு, 8 வீராங்கனைகளுக்குக் காணப்படுகிறது.

இவர்களைத் தவிர, வைல்ட் கார்ட் மூலமாக இத்தொடரில் விளையாட அனுமதிபெற்றுள்ள, முன்னாள் முதல்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமையின் காரணமாகத் தடைசெய்யப்பட்ட பின்னர் அவர் பங்குபற்றும் முதலாவது கிரான்ட் ஸ்லாம் தொடர் இதுவாகும்.

எது எவ்வாறாக இருந்தாலும், செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தத் தொடர், சுவாரசியமான தொடராக அமையுமென்பதில் சந்தேகமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .