2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு தகுதிபெறப்போவது பிரான்ஸா அல்லது பெல்ஜியமா?

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஓர் அரையிறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது. சென். பீற்றர்ஸ்பேர்க்கில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸும் பெல்ஜியமும் பலப்பரீட்சை நடாத்துகின்றன.

தத்தமது குழுநிலைப் போட்டிகளை இலகுவாகக் கடந்திருந்த பெல்ஜியமும் பிரான்ஸும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றிலேயே பலத்த போட்டிகளைச் சந்தித்திருந்தன. கிலியான் மப்பேயின் வேகமான ஆட்டம் கைகொடுக்க, லியனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் முன்னேறியிருந்தது. மறுபக்கமாக, ஜப்பானுக்கெதிரான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தபோதும் மரெளனே பெலைனி, நாஸர் சட்லி ஆகியோர் பெற்ற கோல் காரணமாகவே காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

தமது காலிறுதிப் போட்டியில், வேகத்தை தவிர்த்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ், உருகுவேயை வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்ததுடன், மறுபக்கமாக, சிறப்பான பின்களத்துடனும் தமது கோல் காப்பாளர் திபோ கோர்துவா மேற்கொண்ட அபாரமான தடுப்புகளுடனும் றொமெலு லுக்காக்கு, கெவின் டி ப்ரூனே, ஈடின் ஹஸார்ட் ஆகியோரின் வேகம் கைகொடுக்க பிரேஸிலை வென்று அரையிறுதிப் போட்டிக்கு பெல்ஜியம் தகுதிபெற்றிருந்தது.

அன்டோனி கிறீஸ்மன், கிலியான் மப்பே, போல் பொக்பா என பிரான்ஸிலும் ஈடின் ஹஸார்ட், கெவின் டி ப்ரூனே என பெல்ஜியத்திலும் நட்சத்திரங்களுக்கு பஞ்சமில்லாதபோதும் இந்த நட்சத்திரங்களின் வேகமான ஆட்டத்தை போட்டி முழுவதும் அரையிறுதியில் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், இந்த நட்சத்திரமொருவரின் அல்லது இருவரின் ஒன்று அல்லது இரண்டு பங்களிப்புகளே இப்போட்டியைத் தீர்மானிப்பதாக அமையும்.

இறுதி 16 அணிகளுக்கான சுற்றோடு இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு மஞ்சள் அட்டை காட்டப் பெற்றதால், காலிறுதிப் போட்டியைத் தவறவிட்ட பிரான்ஸின் மத்தியகள வீரர் பிளெய்ஸி மத்தியூடி, அரையிறுதியில் விளையாடும் பதினொருவர் அணியில் கொரென்டின் டொலிஸோவைப் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, காலிறுதிப் போட்டியோடு இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு மஞ்சள் அட்டை காட்டப் பெற்றதால் பெல்ஜியத்தின் பின்கள வீரரான தோமஸ் மெனுயர் தவறவிடுகின்ற நிலையில், இவரை விளையாடும் பதினொருவர் அணியில் யனிக் கராஸ்கோ பிரதியீடு செய்வார் எனப்படுகிறது.

இரண்டு அணிகளும் மோதியதில், அதிகமாக பெல்ஜியமே வென்றபோதும் இப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் பிரான்ஸுக்கு சற்று அதிகமாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், பிரேஸிலுடனான காலிறுதிப் போட்டியில் வெளிப்படுத்திய ஆட்டத்தை பெல்ஜியம் வெளிப்படுத்தினால், அண்மைய காலமாக குறித்த முன்னணி வீரர்களைக் கொண்டுள்ளபோதும் சொல்லிக்கொள்ளும்படியாக பிரதான தொடரெதுவிலும் பிரகாசித்திருக்காத பெல்ஜியம், முதன்முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றாலும் ஆச்சரியமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .