2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிர்ஷன் இராமானுஜம்

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய போக்கு குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாலொன்று, கொழும்பில் நாளை மறுதினம் நடத்தப்பட உள்ளதாகவும், இதன்போது மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான தயாசிறி ஜயசேகர, நேற்று (13) தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

“கொழும்பில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னாள் தலைவர்கள், முன்னாள் தெரிவுக்குழுத் தலைவர்கள், அணியின் வீரர்கள், மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், விளையாட்டுத் துறைசார்ந்த ஊடகவியலாளர்கள் என, முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

“இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள சவாலிலிருந்து மீட்பது, வெற்றிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படுவதுடன், அனைவரினதும் கருத்துகளையும் உள்வாங்கிக்கொள்ளவுள்ளோம். அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களைத் தொகுத்து, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளிக்கவுள்ளோம்.  

“அதில் அடங்கியுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு, கிரிக்கெட் சபைத் தலைவரிடம் நான் கோரவுள்ளேன். அதன்பின்னர் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கலாம்” என்றார்.

அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள் 

கேள்வி: கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் விலகியுள்ள நிலையில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவதற்கான இலங்கைக் குழாமை யார் தெரிவு செய்தார்கள்? 

பதில்: தெரிவுக்குழுவினர் விலகுவதற்கு முன்னர், இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களைத் தெரிவு செய்யவென, இடைக்காலக் குழுவை அவர்களே முன்மொழிந்திருந்தார்கள். அதனடிப்படையிலேயே தெரிவு இடம்பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில், புதிய தெரிவுக்குழுவை நான் அறிவிக்கவுள்ளேன்.  

கேள்வி: பாகிஸ்தானுடனான தொடரில் இலங்கை விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்குச் செல்வதில் இலங்கை அணிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? 

பதில்: இலங்கை அணிக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே, எமது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும். இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்களை அறிவிப்போம். பாகிஸ்தானுடன் எமக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. எமக்கு கஷ்டமான நேரங்களில் உதவிகள் புரிந்திருக்கிறார்கள். அண்மையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது, பாரிய அளவில் நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் வழங்கியிருந்தது. இவை அனைத்தையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .