2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனானார் ரொஜர் பெடரர்

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொட்டர்டம் பகிரங்க டென்னிஸ் தொடரில், தற்போதைய உலகின் முதல்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியனாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், பல்கேரியாவின் உலகின் நான்காம் நிலை வீரரான கிறிகர் டிமிட்ரோவை, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் 55 நிமிடங்களில் வென்ற 36 வயதான ரொஜர் பெடரர் சம்பியனானார்.

இந்நிலையில், 20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற றொஜர் பெடரர், இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் றொபின் ஹாஸேயை வென்றபோதே தரவரிசையில் முதலாமிடத்தைப் பெறுவதை உறுதிசெய்து, நேற்று வெளியிடப்பட்ட தரவரிசையில், முதலாமிடத்தில் ஸ்பெய்னின் ரபே நடாலைப் பிரதியீடு செய்தார்.

அந்தவகையில், தரவரிசையில் முதலாமிடம் பெறும் வயதானவராக தனது பெயரை ரொஜர் பெடரர் பதித்துக் கொண்டார். இதற்கு முதல், முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தனது 35ஆவது வயதில் கடந்தாண்டு மே மாதம் முதலிடத்திலிருந்ததே வயதானவரொருவர் தரவரிசையில் முதலிடத்திலிருந்ததாகக் காணப்பட்டது.

இதேவேளை, இப்பட்டத்துடன் சேர்த்து 97 பட்டங்களை ரொஜர் பெடரர் கைப்பற்றியுள்ள நிலையில், அதிக பட்டங்களைக் கைப்பற்றிய ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்மி கோணர்ஸின் 109 பட்டங்களை முந்துவதற்கு மேலும் 12 பட்டங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .