2024 மே 09, வியாழக்கிழமை

சம்பியன்ஸ் லீக்குக்கான இடத்தை உறுதிப்படுத்தியது செல்சி

Editorial   / 2019 மே 06 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த பருவகால, ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தனதிடத்தை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி உறுதிப்படுத்தியுள்ளது.

தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வட்ஃபேர்ட்டுடனான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியில் வென்றதுடன், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை ஆர்சனல் சமப்படுத்தியதைத் தொடர்ந்தே, அடுத்த பருவகால சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தனதிடத்தை செல்சி உறுதிப்படுத்தியுள்ளது.

செல்சி, 3-0 என்ற கோல் கணக்கில் வட்ஃபேர்ட்டை வென்றது. செல்சி சார்பாக, ருபென் லொவ்டஸ்-சீக், டேவிட் லூயிஸ், கொன்ஸலோ ஹியூகைன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியிருந்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியரி-எம்ரிக் அபுமெயாங்க் பெற்றிருந்ததோடு, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிளென் மரே பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 71 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செல்சியும், 70 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் காணப்படுகின்றன. ஐந்தாமிடத்தில் 67 புள்ளிகளுடன் ஆர்சனல் காணப்படுகின்றது.

மூன்று அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியையே இன்னும் கொண்டிருகின்ற நிலையில், தனது அடுத்த போட்டியில் செல்சி தோற்றாலும் 71 புள்ளிகளுடன் நடப்பு இங்கிலாந்து பருவகாலத்தை முடித்துக் கொள்கின்ற நிலையில், ஐந்தாமிடத்திலுள்ள ஆர்சனல் அடுத்த போட்டியில் வென்றாலும் 70 புள்ளிகளையே அடைய முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் செல்சி இடம்பெறுவது உறுதியாகியுள்ள நிலையிலேயே, அடுத்த பருவகால சம்பியன்ஸ் லீக் தொடரில் தனது இடத்தை செல்சி உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஹட்டர்ஸ்ஃபீல்ட் டெளணின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டமையைத் தொடர்ந்து, அடுத்த பருவகால சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட் இழந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்கொட் மக்டொமினி பெற்றதோடு, ஹட்டர்ஸ்ஃபீல்ட் டெளண் சார்பாகப் பெறப்பட்ட கோலை இஸாக் மென்ஸா பெற்றிருந்தார்.

66 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் காணப்படும் மன்செஸ்டர் யுனைட்டெட், தனது எஞ்சியிருக்கும் போட்டியில் வென்றால் கூட 69 புள்ளிகளையே அடைய முடியும் என்ற நிலையில், தற்போது 70 புள்ளிகளுடன் நான்காமிடத்திலிருக்கும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை முந்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X