2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிற்றியை வென்றது டொட்டென்ஹாம்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் சக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.

இப்போட்டியின் முதற்பாதியில், மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கின் உதையை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் பின்களவீரரான டனி றோஸ், கையால் வேண்டுமென்றே தடுத்தார் என மைதானத்தினோரமாக காணொளியை மீளாய்வு செய்து மன்செஸ்டர் சிற்றிக்கு பெனால்டி வாய்ப்பை மத்தியஸ்தர் வழங்கினார். எனினும், மன்செஸ்டர் சிற்றியின் இன்னொரு முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ செலுத்திய பந்தை, டொடென்ஹாம் ஹொட்ஸ்பரின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் தடுத்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் பந்துக்காக மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரர் ஃபபியான் டெல்ப்புடன் போராடிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரர் ஹரி கேன், கணுக்கால் காயம் போன்ற தோன்றிய காயம் காரணமாக மைதானத்துக்கு வெளியே சென்றிருந்தார். எனினும், போட்டி முடிவடைய 12 நிமிடங்கள் இருக்கையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் இன்னொரு முன்களவீரரான சண் ஹெயுங் மின் பெற்ற கோல் காரணமாக, இந்த சம்பியன்ஸ் லீக்கின் முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற போர்த்துக்கல் கழகமான எஃப்.சி போர்ட்டோவுடனான காலிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் முன்னிலை பெற்றுள்ளது. லிவர்பூல் சார்பாக, நபி கெய்டா, றொபேர்ட்டோ ஃபெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .