2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸை தோற்கடித்தது றியல் மட்ரிட்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டிகளில், ஜுவென்டஸை றியல் மட்ரிட் தோற்கடித்ததுடன் செவில்லாவை பெயார்ண் மியூனிச் வென்றது.

கடந்த பருவகால சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி வரை வந்த ஜுவென்டஸின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மார்ஷெல்லோ இஸ்கோவுக்கு வழங்கிய பந்தை அவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்க அவர் அதை போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே கோலாக்க ஆரம்பத்திலேயே றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. இக்கோலைப் பெற்றதோடு, தொடர்ச்சியாக 10ஆவது சம்பியன்ஸ் லீக் போட்டியில் கோலைப் பெற்று அவ்வாறு செய்த முதலாவது வீரராக தனது பெயரை கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவுசெய்துகொண்டார்.

இதன்பின்னர் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் சுதாகரித்துக் கொண்டது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் பெனால்டி பகுதியை நோக்கி ஜுவென்டஸின் போலோ டிபாலா செலுத்திய பந்தை சக ஜுவென்டஸ் வீரரான கொன்ஸலோ ஹியூகைன் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தினார். எனினும் றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் அதை அபாரமாகத் தடுத்தார்.

இதேவேளை, இதைத் தொடர்ந்து, ஜுவென்டஸ் கோல் பெறுவதை நெருங்கிய வாய்ப்பாக அவ்வணியின் மட்டியா டி சிஜிலியோ கொடுத்த பந்தை போலோ டிபாலா பெறத் தவறியிருந்தார். மறுபக்கம், போட்டியின் 35ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 20 அடி தூரத்திலிருந்து றியல் மட்ரிட்டின் டொனி க்றூஸ் செலுத்திய உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், தொடர்ந்த முதற்பாதியில், ஜுவென்டஸின் றொட்ரிகோ பென்டன்குர் உதைத்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றதுடன், ஜுவென்டஸுக்கு கிடைத்த மூலையுதையொன்றை அவ்வணியின் ஜோர்ஜியோ செலினி தலையால் முட்ட கோல் கம்பத்துக்கு வெளியால் பந்து சென்றிருந்தது. இதைத் தொடர்ந்து, மிகவும் கடினமான நிலையொன்றிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உதைத்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது.

இரண்டாவது பாதியில், போட்டியின் 54ஆவது நிமிடத்தில், போலோ டிபாலாவுடன் மோதுண்டமைக்காக றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸோக்கு மஞ்சள் அட்டை காட்டப் பெற்றது. அந்தவகையில், தனது அணியின் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுக் காலிறுதிப் போட்டியை அவர் தவறவிடவுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜோர்ஜினியோ செலினி செலுத்திய பந்து, அவரது கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபானைச் தாண்டிச் செல்ல, அப்பந்தைக் கைப்பற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, அப்பந்தை சக றியல் மட்ரிட் வீரர் லூகாஸ் வஸ்கூஸிடம் வழங்கினார். அவர் உதைந்த உதையை ஜல்லூயிஜி புபான் தடுத்தார். எனினும் எதிர்பாரதவிதமாக பந்து டனி கர்வகாலிடம் செல்ல அவர் அப்பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோவை நோக்கி அனுப்ப, தனது முதுகு கோல் கம்பத்தை நோக்கியவாறு நின்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, எழும்பி தலைக்கு மேலால் கோல் கம்பத்தின் மூலைக்குள் 64ஆவது நிமிடத்தில் பந்தைச் செலுத்தி றியல் மட்ரிட்டின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இதையடுத்து, போட்டியின் முதற்பாதி முடிவடையும் தருணத்தில் வேண்டுமென்றே பாய்ந்தாரென மஞ்சள் அட்டைக் காட்டப் பெற்றிருந்த போலோ டிபாலா, டனி கர்வகாலுடன் மோதியமைக்காக போட்டியின் 66ஆவது நிமிடத்தில் இரண்டாவது தடவையாக மஞ்சள் அட்டை காட்டப் பெற்று வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் பந்தை பரிமாறிக் கொண்டு வந்த மார்ஷெல்லோ கோலொன்றை பெற றியல் மட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உதையொன்றை ஜல்லூயிஜி புபான் தடுத்ததுடன், ஓருதை கோல் கம்பத்துக்கு வெளியே சென்ற நிலையில், இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.

இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான தமது முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியக் கழகமான பெயார்ண் மியூனிச் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .