2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தோற்றது நடப்புச் சம்பியன் பயேர்ண்

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஹொஃபென்ஹெய்முடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்தில் பயேர்ண் மியூனிச்சின் கோல் காப்பாளரும், அணித்தலைவருமான மனுவல் நோயரை எதிர்கொண்டிருந்த ஹொஃபென்ஹெய்மின் முன்களவீரர் சர்கிஸ் அடம்யன் தடுமாறியநிலையில், பந்தை அவரின் கட்டுப்பாட்டுக்குள் அப்பால் பயேர்ண் மியூனிச்சின் பின்களவீரர் ஜெரோம் பூட்டாங் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், முதற்பாதியில் கோல் பெறும் சில நல்ல வாய்ப்புகளை பயேர்ண் மியூனிச் பெற்றிருந்தபோதும் அவ்வணி கோலெதையும் பெற்றிருக்காத நிலையில் முதற்பாதி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

அந்தவகையில், பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான கொரென்டின் டொலிஸோ தனது பாதிக்குள் பந்தை இழந்திருந்த நிலையில் போட்டியின் 54ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற சர்கிஸ் அடம்யன் தனதணிக்கு முன்னிலையை வழங்கியிருந்தார்.

எவ்வாறெனினும், 73ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலைப் பெற்ற பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரர் றொபேர்ட் லெவன்டோஸ்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில் சர்கிஸ் அடம்யன் கோலொன்றைப் பெற்றிருந்த நிலையில் இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் தோல்வியடைந்திருந்தது.

இதேவேளை, ஃபிரைபேர்க்கின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் பொரூசியா டொட்டமுண்ட் முடித்துக் கொண்டிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, அக்ஸெல் விட்ஸெல், அஷர்ஃப் ஹகிமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஃபிரைபேர்க் சார்பாக லூகா வோல்ட்ஸ்ஷிமிட் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றையை கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது.

இந்நிலையில், பயேரின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆர்.பி லெய்ஸிக் முடித்திருந்தது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்தோபர் என்குங்கு பெற்றதோடு, பயேர் சார்பாகப் பெறப்பட்ட  கோலை கெவின் வொலான்ட் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .