2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது றியல் மட்ரிட்

Editorial   / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை றியல் மட்ரிட் வென்றுள்ளது.

தமது மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியிலேயே சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது.

சம்பியன்ஸ் லீக்கின் முக்கியமானதொரு போட்டியாக வர்ணிக்கப்பட்ட இப்போட்டியில், நேமர் கொடுத்த பந்தை போட்டியின் 33ஆவது நிமிடத்தில் அட்ரியன் றபியொட் கோலாக்க பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. எனினும், போட்டியின் முதற்பாதி முடிவில், டொனி க்றூஸ் வீழ்த்தப்பட, வழங்கப்பட்ட பெனால்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்க கோல் எண்ணிக்கை சமமாக முதற்பாதி முடிவடைந்தது.

பின்னர், மார்கோ அஸென்ஸியோ உதைந்த பந்தை பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் அல்போன்ஸே அரியோலா தடுக்க, அது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பாதையின் அவர் அதை போட்டியின் 83ஆவது நிமிடத்தில் கோலாக்க றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, மார்கோ அஸென்ஸியோ கொடுத்த பந்தை போட்டியின் 86ஆவது நிமிடத்தில் கோலாக்க, இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.

இந்நிலையில், இப்போட்டியில் தான் பெற்ற கோல்களுடன் சேர்த்து, றியல் மட்ரிடுக்காக சம்பியன்ஸ் லீக்கில் 101 கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளதுடன், தொடர்ந்து ஏழாவது பருவகாலமாக சம்பியன்ஸ் லீக்கில் 10க்கும் மேற்பட்ட கோல்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, போர்த்துக்கல் கழகமான எப்.சி போர்ட்டோவின் மைதானத்தில் நடைபெற்ற இன்னொறு இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், 5-0 என்ற கோல் கணக்கில் எப்.சி போர்ட்டோவை வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே மூன்று கோல்களையும் மொஹமட் சாலா, றொபேர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .